News
Loading...

இது இந்தியாவின் குரல்!

இது இந்தியாவின் குரல்!

ஆயிரம் ரூபாய், ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி போட்ட பௌலிங்-குக்கு இந்திய தலைவர்களும் வி.ஐ.பி.களும் போட்ட பௌன்ஸர்கள் இவை!

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: 

“500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் செல்லாது என கொண்டுவரப்பட்டுள்ள திட்டத்தைப் பற்றி யாரும் கவலைகொள்ள வேண்டாம். அரசு கூறும் விதிமுறைகளைப் பின்பற்றி, செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். மோடியின் துணிச்சலான முடிவு வரவேற்கப்படுகிறது. நாட்டில் புழங்கும் கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்தத் திட்டம் உதவும்.”

ராகுல் காந்தி:

“500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் தடைசெய்துவிட்டு, 2,000 ரூபாய் நோட்டை அறிமுகம் செய்வது கறுப்புப் பணத்தை எப்படிக் குறைக்கும்? மோடிக்கு சாதாரண மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லை என்பதற்கு இது, மற்றொரு உதாரணமாக இருக்கிறது.”

கருணாநிதி: 

“இன்றைய காலகட்டத்தில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாத ஊதியம் பெறுபவர்களிடம் மட்டுமின்றி நாள் ஊதியம் பெறும் ஏழை எளிய மக்களிடமும் புழக்கத்தில் உள்ளது என்பதை மறுக்க இயலாது. ஜனதா ஆட்சிக் காலத்தின்போது ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக எந்த அளவுக்குக் கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது என்பதையும் கருதிப் பார்த்து, இப்போது மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.”

மம்தா பானர்ஜி:

“பிரதமர் மோடி, 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று அறிவித்துள்ளதை, உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.”

இது இந்தியாவின் குரல்!

வைகோ:

“மோடி எடுத்த அதிரடி முடிவை பாராட்டுகிறேன்.”

மு.க.ஸ்டாலின்:

“மக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத வகையில் அவகாசத்தை வழங்கியிருக்க வேண்டும். குறிப்பாக, நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள், வணிகர் பெருமக்கள் பெரிய அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவசர நிலையில் நோட்டுகளை மாற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு உள்ளது.”

சந்திரபாபு நாயுடு:

‘‘ஊழலை ஒழிக்க இந்தத் திட்டம் உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் பொருளாதாரத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்!”

இது இந்தியாவின் குரல்!

தமிழிசை சவுந்தரராஜன்:

“மோடியின் நடவடிக்கையை பொருளாதாரச் சுனாமி என்று நினைத்துக் கொள்ளுங்களேன். வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வரவே மோடி இப்படி அறிவிப்பு வழங்கியுள்ளார்.”

ரஜினிகாந்த்:

“கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாக பிரதமர் மோடி கொண்டுவந்துள்ள திட்டத்தை வரவேற்கிறேன். வாழ்த்துக்கள் மோடிஜி. புதிய இந்தியா பிறந்துள்ளது.”

இது இந்தியாவின் குரல்!

கமல் ஹாசன்: 

“மோடிக்கு வாழ்த்துகள். இந்த நடவடிக்கை அரசியல் கட்சி எல்லைகளைக் கடந்து கொண்டாடப்பட வேண்டும். மிக முக்கியமாக, அக்கறையுடன் வரி செலுத்துவோரிடம் இருந்து!” 

ஜி.ராமகிருஷ்ணன்:

“அவர்கள் அறிவித்த நோக்கம் முழுமையாக நிறைவேறாது. கார்ப்பரேட் கம்பெனிகள் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன்பெற்று திருப்பிச் செலுத்தாத தொகை மட்டுமே 11 லட்சம் கோடி ரூபாய். இந்தப் பட்டியலை வெளியிட இவர்கள் தயாராக இல்லை.”

முத்தரசன்:

‘‘வெளிநாடுகளில் முடக்கிவைத்துள்ள பணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால், பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்தும் சாமானியன் மீது பாய்ந்துள்ளது மோடி அரசின் நடவடிக்கை.”

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்