News
Loading...

கல்லு... மண்ணு... கவனிப்பு! - தில்லாலங்கடி திருவாரூர் நகராட்சி

கல்லு... மண்ணு... கவனிப்பு! - தில்லாலங்கடி திருவாரூர் நகராட்சி

ஐந்துமுறை முதல்வராக இருந்தவரும், திருவாரூர் தொகுதியில் இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ-வாக இருப்பவருமான கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர். அந்த திரூவாரூர் நகராட்சி நிர்வாகம் எப்படி இருக்கிறது?

‘‘ஆட்சி மாறியதே ஒழிய அலங்கோல காட்சி மாறவில்லை’’ என திருவாரூர் நகராட்சி மீது சரமாரியாகப் புகார் வாசிக்கிறார்கள் நகரவாசிகள். “அ.தி.மு.க-வைச் சேர்ந்த ரவிச்சந்திரனை சேர்மன் ஆக்கினோம். அவரும் பதவிக்கு வந்த புதுசில் வேலை நடக்கும் வார்டில் வந்து நின்னு மக்கள் குறையை காது கொடுத்து கேட்டாரு.  மூணு மாசம்கூட நீடிக்கவில்லை. பழம் தின்னு கொட்டைப் போட்ட பழைய கவுன்சிலர்கள்கிட்ட மாட்டி இவரும் மாறிட்டாரு. வீடு கட்ட கல்லு, மண்ணு வாங்கிறதைவிட கவுன்சிலர் மூலமா பெரும் தொகையை ‘கவனிப்பு’ செய்து நகராட்சி அனுமதி வாங்கிறது. மேடு பள்ளமான ரோடு, அதில் அக்சிடென்ட் பாயின்டா பாதாள சாக்கடை குழி, தெருவெங்கும் அள்ளாத குப்பை, நகரெங்கும் குறையாத கொசு - இப்படி எல்லாவிதத்திலும் அவஸ்தைப்படுகிற வாழ்க்கையா போச்சு. அட.. செத்தாலும் சிரமம் இல்லாம உடலை எரிக்க முடிகிறதா? லட்சகணக்கான ரூபாய் செலவில் மின்தகன மேடை அமைச்சாங்க. அதற்கு திறப்பு விழாவும் நடத்தினாங்க. ஆனால், அதை நிர்வாகம் செய்ய வந்தவர்களிடம் கவுன்சிலர்கள் நடத்திய பண பேரம் படியாததால் இன்னும் ஒரு பிணைத்தைக்கூட எரிக்க முடியல” என்று தலையில் அடித்துக் கொண்டார்கள்.  

தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்ற துணைத் தலைவர் செந்திலிடம் பேசினோம். “எங்கள் தலைவரின் தொகுதி என்பதால் இங்கு தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட புதிய பேருந்துநிலையம், பாதாள சாக்கடை திட்டம், மின் தகனமேடை என எதையும் முழுசாக முடிக்கவில்லை. இவங்க ஆட்சிக்கு வந்து கட்டிய ஒரே திட்டம் மனுநீதி சோழன் மணிமண்டபம்தான். நகராட்சி பூங்காவை அழிச்சி கட்டிய மணிமண்டபம் திறப்புவிழா காணாமல் அரைகுறையா கிடக்கு. ரோடு கான்ட்ராக்ட் எல்லாம் ஆளும் கட்சிக்காரங்கதான். போட்ட ரோடும் சரியல்ல, போடாத ரோட்டுக்கும் பணம் பண்ணிட்டாங்க. சுகாதாரப் பணிகள் சுத்தமா செயல்படவில்லை. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகராட்சி இடங்களை ஆளும் கட்சிக்காரங்க ஆக்கிரமிச்சிருக்காங்க. அதை மீட்பதற்கு பதிலா அவர்களுக்கே அந்த இடங்களை விட்டுக்கொடுத்து பணம் வாங்கிகிட்டாங்க. சுருக்கமா சொன்னா இந்த நகராட்சிக்கு ரவிச்சந்திரன் மட்டும் சேர்மன் இல்லை. அ.தி.மு.க. நகர செயலாளர் மூர்த்தி, ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள் என மூன்று பேர் இருக்காங்க. மூவருக்கும் கப்பம் கட்டினால்தான் நகராட்சியில் எந்த வேலையும் நடக்கும். எந்தப் பணியை செய்தாலும் ஒப்பந்தக்காரர்களிடம் கமிஷன் பெறுவது கவுன்சிலர் முதல்  அதிகாரிகள் வரை உள்ளது. அதேநேரத்தில் பொதுக்கள் பாதிக்கப்படுகிற பிறப்பு, இறப்பு சான்றிழ் போன்ற விஷயங்களில் நாங்கள் பணம் வாங்குவதில்லை” என்று நெஞ்சு நிமிர்த்திச் சொன்னபோது நமக்கு தலைச் சுற்றலே வந்தது.

கல்லு... மண்ணு... கவனிப்பு! - தில்லாலங்கடி திருவாரூர் நகராட்சி

நகராட்சித் தலைவர் ரவிச்சந்திரனிடம் விளக்கம் கேட்டோம். “பாதாள சாக்கடை திட்டப் பணியை தமிழ்நாடு குடிநீர் வாரியம்தான் செய்து வந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகளையும் அவர்கள் செய்த பின்புதான் நகராட்சியில் ஒப்படைக்கப்படும். ஆனால் முறைப்படி இன்னும் ஒப்படைக்கவில்லை என்றபோதும் ஆங்காங்கு வீடுகளுக்கு கழிவுநீர் குழாய் இணைப்பு தரும் இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஒவ்வொரு வார்டிலேயும் என்ன குறை என்பதைத் தெரிந்துகொள்ள ஆரம்பத்தில் விசிட் செய்தேன். அதன்பிறகு தேவை ஏற்படவில்லை. 

கல்லு... மண்ணு... கவனிப்பு! - தில்லாலங்கடி திருவாரூர் நகராட்சி

போதுமான துப்புறவு தொழிலாளர்கள் இல்லாததால் தனியாரிடம் ஒப்படைத்து செயல்படுத்தி இருக்கிறோம். குடிநீர் பற்றாக்குறையைப் போக்க தனியாரிடம் தண்ணீரை விலைக்கு வாங்கி விநியோகம் செய்திருக்கிறோம். ரோடு வேலைகள் 95 சதவிகிதமும் புதிய பேருந்துநிலையப் பணி 98 சதவிகிதமும் முடித்திருக்கிறோம். அம்மா அறிவித்த மனுநீதிச் சோழன் மணிமண்டப பணியைப் பொதுப்பணி துறையினர் கட்டி முடித்திருக்கிறார்கள். விரைவில் திறப்புவிழா நடக்கும். மின்தகன மேடை கான்ட்ராக்ட் கொடுப்பதில் சிக்கல் இருந்தது. அது தீர்க்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருக்கிறது. (நிர்வகிக்க ஆள் இன்றி ஒரு பிணத்தையும் எரிக்காமல் பூட்டியே கிடக்கிறது.) தொகுதி எம்.எல்.ஏ-வைப் பாராட்டி தீர்மானம் போடுவது தமிழகத்தில் எந்த நகராட்சியிலும் நடைமுறையில் இல்லை. ஆனால், இங்கு தி.மு.க-வினர் கருணாநிதியைப் பாராட்டி தீர்மானம் கொண்டுவந்தார்கள். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதைக் காரணமாக வைத்துதான் இதுநாள் வரை ஒத்துழைப்பு கொடுத்தவர்கள் பிரச்னை செய்கிறார்கள். கடைசியாக 5 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட இருந்த பணிகளுக்கான தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடுத்துவிட்டார்கள்” என்றார்.   

ஆக, இரண்டு கட்சிகளுக்கும் 5 கோடி ரூபாய் திட்டத்துக்கான கமிஷன்தான் பிரச்னை போல. உருப்படுமா இந்த நகராட்சி? 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.