News
Loading...

ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி பராமரிப்பு

ஆண்ட்ராய்ட் போனில் பேட்டரி பராமரிப்பு

ஆண்ட்ராய்ட் மொபைல் போன்கள் வந்த புதிதில், அவற்றின் பேட்டரிகள் முற்றிலுமாய் மின்சக்தியை இழந்துவிடாமல் இருக்க பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. இணைப்புகளை நாமாக மாற்றி அமைக்கும் வேலை, அடிக்கடி திரை ஒளித் தோற்றத்தினை சரி செய்தல் எனப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனால், தற்போது இது போன்ற அமைப்புகளை அடிக்கடி நாம் மேற்கொள்ள வேண்டியது இல்லை. ஒவ்வொரு விஷயத்தையும், ஒரு முறை அமைத்து சேவ் செய்து விட்டால், தொடர்ந்து அவை நிலையாக அமைந்துவிடும். இந்த அமைப்புகள் நம் போனின் பேட்டரி பயன்படுத்துதலைச் சீர் செய்திடும் வகையில் அமையும். இருப்பினும், இப்போதும் சில செயல்பாடுகளை மேற்கொண்டால், பேட்டரியின் திறனை இன்னும் சீராக வைத்திருக்க முடியும். இதனைக் காணும் முன்னர், ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையில் இந்த பேட்டரி சீரமைப்பு வேலையில் எந்த அளவிற்கு வந்துள்ளது என்று பார்ப்போம். ஆண்ட்ராய்ட் பதிப்பு 6.0 மார்ஷ்மலாய் இயக்கத்தில், கூகுள் ஒரு புதிய வசதியாக Doze Mode என்னும் டூல் ஒன்றை அறிமுகம் செய்தது. நம் ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இல்லாத போது, அதனை ஆழ்ந்த உறக்கத்தில் கட்டாயமாக வைத்தது. எடுத்துக் காட்டாக, போனைப் பயன்படுத்தாமல், டேபிளின் மீது அல்லது படுக்கையில் வைத்துவிட்டால், இந்த டூல் தானாக செயல்பாட்டிற்கு வந்து, பேட்டரியின் பயன்பாட்டைப் பெரும் அளவில் மிச்சப்படுத்தும்.

அடுத்து வந்த, 'நகெட்' (Nougat) சிஸ்டத்தில், இது மேலும் திறன் கூட்டப்பட்டது. டேபிள் மற்றும் படுக்கை மட்டும் இல்லாமல், போனை நம் பாக்கெட், பை அல்லது அது போன்ற செயல்பாட்டில் இல்லாத இடங்களில் வைத்தாலே, இந்த Doze Mode டூல் செயல்பாட்டிற்கு வரும் வகையில் திறன் மாற்றப்பட்டது. இதனால், ஒரு சில அப்ளிகேஷன்களே இது போன்ற நிலைகளில் செயலபடும். இதனால், பேட்டரியின் பயன்பாட்டு காலம் அதிகமாகும்.

இது நாம் எல்லாரும் விரும்பும் ஒரு ஏற்பாடுதான். ஆனால், இதில் ஒரு பிரச்னை பொதுவாக எல்லாராலும் உணரப்பட்டது. 'நகெட்' மற்றும் 'மார்ஷ்மலாய்' சிஸ்டத்தினைத் தங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில் பதிந்து இயக்குபவர்கள் மிகக் குறைவே. பெரும்பாலானவர்கள், லாலிபாப் அல்லது கிட்கேட் நமக்குப் போதும் அல்லது புதிய சிஸ்டங்களை நம் போன் தாங்காது என்று எண்ணி அப்படியே இருந்துவிட்டனர். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மேம்படுத்தி உயர்த்தவே இல்லை. அப்படியானால், இவர்களின் போன்களுக்கு Doze Mode டூல் செய்யக் கூடிய வேலையை எப்படி எதிர்பார்க்க முடியும்? அந்த டூலின் வேலை முழுமையாகக் கிடைக்காது என்றாலும், ஒரு சில அமைப்பு வேலைகளை மேற்கொண்டு, பேட்டரியின் வாழ்நாளை நீட்டிக்கலாம். 

சில ஸ்மார்ட் போன்களில், பெரும்பாலும், சாம்சங் கேலக்ஸி வரிசை போன்களில், பேட்டரியின் பயன்பாடு குறித்த தகவல்கள், அடிப்படையான ஒரு திரைக்காட்சியிலேயே கிடைக்கும். இவற்றினால் நமக்கு பயன் ஓரளவிற்குத்தான் இருக்கும். இதனை அடுத்து கூடுதல் தகவல் வேண்டுமானால், “Battery Usage” என்ற திரையைப் பெற்றுப் பார்த்தால், ஒவ்வொரு அப்ளிகேஷனும், சிஸ்டத்தில் சில செயலிகளும் எந்த அளவிற்கு மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன என்பது தெரிய வரும். மின் சக்தியை எந்த செயலி, அதிகமாக உறிஞ்சுகிறது என்று காணலாம். ஏதேனும் ஒரு செயலி பிரச்னைகளைக் கொடுத்தால், அது இங்கு தரப்படும் வரைபடத்தினைக் கொண்டு அறியலாம். ஆனால், இன்னும் சில கூடுதல் தகவல்களையும் இதில் பெறலாம் என்பது பலருக்குத் தெரியாது. இந்த வரைபடத்தில் மேலும் ஒருமுறை தட்டினால், போன் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இழுத்து உறியும் மின் சக்தி என்னவென்று அறிய முடியும். இந்த திரை காட்டும் விபரங்களை மிக எளிதாக அறிந்து கொள்ள முடியும். இதில் காட்டப்படும் பட்டைகள், ஒவ்வொரு துணைப்பிரிவும் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதைக் காட்டும். எடுத்துக் காட்டாக, என் ஸ்மார்ட் போனில் 'Wi- Fi' செயலியை எப்போதும் இயக்க நிலையிலேயே வைத்திருப்பதால், அது எப்போதும் இணைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று காட்டும். அதே போல, போன் நெட்வொர்க் இணைப்பு மற்றும் ஜி.பி.எஸ். இணைப்பு குறித்தும் காட்டப்படும். 

இந்த பட்டையில், போன் பயன்பாட்டில் உள்ளது என்று காட்டும் “Awake” குறியீடு போன் தன் தூக்க நிலையிலிருந்து இயக்க நிலைக்கு வருகையில் காட்டப்படுகிறது. இது எப்போதும் ஒளி கொண்டதாகவும் அழுத்தமான தோற்ற நிலையிலும் இருந்தால், உடனடியாக அதனைக் கண்காணிக்க வேண்டும். நாம் பயன்படுத்தாமலேயே ஏதேனும் ஒரு செயலி, வை பி போல, நெட்வொர்க் இணைப்பு போல, எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கலாம். இது பேட்டரியின் மின் சக்தியை வீணாக்கும் செயல்பாடாகும். எனவே, இதனை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும்.

வயர்லெஸ் இணைப்புகளை முடக்குக
கீழே தரப்பட்டிருக்கும் சில குறிப்புகள் பெரிய அளவில் பேட்டரியின் மின் சக்தியை மிச்சப்படுத்தப்போவது இல்லை. இருந்தாலும், சிறிய அளவில் பல செயலிகளில், மின்சக்தி மிச்சப்படுத்தப்பட்டால், அவை அனைத்தும் இணைந்து பெரிய அளவில் மின் சக்தி வீணாவதை நிறுத்துமே. வை பி மற்றும் ஜி.பி.எஸ். போன்றவை சில இடங்களில் மட்டுமே நமக்குத் தேவைப்படும். அப்போது மட்டுமே அவற்றை இயக்கலாமே. இதே போல, புளுடூத் இணைப்பு செயல்படுவதையும் நிறுத்தி வைக்கலாம். இதனை அனைவரும், எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவது இல்லை. ஒரு சிலர், பயன்படுத்துவதே இல்லை. வீட்டை விட்டு வெளியே செல்கையில், வை பி இணைப்பைச் செயல் இழக்கச் செய்திட வேண்டும். அதே போல, வீட்டிற்குள் வந்தவுடன், வை பி இணைப்பை இயக்கிவிட்டால், நம் டேட்டா திட்டம் நிறுத்தப்பட்டு, நமக்கு அதற்கெனச் செலுத்தும் கட்டணம் மிச்சப்படும். மிக எளிதாக, உடனுடக்குடன் இந்த 'நிறுத்தி இயக்கும்' செயல்பாட்டினை மேற்கொள்ள, இப்போது வரும் போன்களில், 'டாகிள் ஸ்விட்ச்' அல்லது 'சிறிய ஸ்லைடிங் பார்' வசதி தரப்பட்டுள்ளது. இல்லாத போன்களில், 'செட்டிங்ஸ்' திரை சென்று இதனை மேற்கொள்ளலாம்.

இதே நிலையில் GPS இயக்கத்தினையும் தேவையான போது இயக்கலாம். தொடக்க காலத்தில் இந்த செயலியை “on” அல்லது “off” இயக்கத்தில் வைப்பது பெரிய வேலையாக இருக்கும். இப்போது வந்துள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இது எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இது தேவைப்படும்போது மட்டும் இயக்கப்படும் செயலியாக மாற்றப்பட்டுள்ளது. இதனை நாம் செல்ல வேண்டிய இடத்திற்கான திசைகளை அறியவும், அன்றைய சீதோஷ்ண நிலை குறித்துத் தெரிந்து கொள்ளவும் இயக்கியே ஆக வேண்டும். மற்ற நேரங்களில், இதனை முடக்கியே வைக்கலாம்.

இதிலும், ஜி.பி.எஸ். செயலி “High Accuracy” நிலையில் செயல்பட அமைத்தால், அப்போது வை பி, புளுடூத், செல்லுலர் நெட்வொர்க் ஆகிய அனைத்தும் இணைந்து செயல்படும். எனவே, பேட்டரியின் பயன்பாடு உச்சத்தைத் தொடும். எனவே, மிகத் துல்லியமாக ஜி.பி.எஸ். பயன்பாடு தேவைப்படுவோர் மட்டுமே “High Accuracy” நிலையில் இதனை இயக்க வேண்டும். இதனைக் கட்டுப்படுத்த Settings > Location எனச் செல்ல வேண்டும். இங்கு “Mode” என்பதில் தட்டினால், தரப்பட்டிருக்கும் ஆப்ஷன்களைக் காணலாம். ஆனால், எந்த நிலையை மேற்கொள்வதாக இருந்தாலும், அது அவசியத் தேவை என்றால் மட்டுமே, அப்போதைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லையேல், நாம் பயன்படுத்தாமலேயே, மின்சக்தி பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கும். 

அறிவிப்புகள் பகுதி அமைப்பு
நமக்கு ஸ்மார்ட் போனில் கிடைக்கும் 'அறிவிப்புகள்' (Notification) இப்போது தேவை என்ற நிலையை அடுத்து, அதிகம் தேவையற்றவை என்ற நிலையை எட்டியுள்ளன. எனவே, இவை நம் பேட்டரியின் சக்தியை காலி செய்கின்றன என்பதை அனைவரும் உணர்ந்துள்ளனர். இப்போதெல்லாம், பெரும்பாலான செயலிகள், Push Notifications என்னும் நிலையை நாம் கேட்காமலேயே பயன்படுத்துகின்றன. இவை, ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இதற்கென தந்துள்ள போர்ட் ஒன்றினை எப்போதும் இயக்கத்தில் வைத்துப் பயன்படுத்துகின்றன. அதாவது, செயலி தன்னை இணையத்தில் இணைத்துக் கொண்டு, ஏதேனும் ஒரு புதிய தகவல் உள்ளதா எனச் சில நிமிட கால அவகாசத்தில் பார்ப்பதைக் காட்டிலும். ஆண்ட்ராய்ட் சிஸ்டமே, எப்போதும் தயாராகப் புதிய தகவல்களைப் பெறும் வகையில் இயங்குகிறது. இது இயங்கா நிலையில், ஆனால், தகவல் வந்தால் பெறும் நிலையில் இருப்பதால், பேட்டரியின் சக்தி குறைவாகவே பயன்படுகிறது. 

'புஷ் நோட்டிபிகேஷன்' பயன்படுத்தாத சில செயலிகள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. இதில் அதிகம் மின் சக்தியைப் பயன்படுத்துவது மின் அஞ்சல் செயலிகளே. இவை இன்னும் POP3 வகை இயக்கத்தினையே பயன்படுத்துவதால், மின் சக்தி பயன்பாடு அதிகமாவதைத் தவிர்க்க இயலவில்லை. இதே போல, பல சமூக இணைய தளங்களும், மொபைல் போனில் இயங்க அதிகம் மின் சக்தியைப் பயன்படுத்துகின்றன.

ஒரு செயலி இது போல அதிக மின் சக்தியைப் பயன்படுத்துகிறதா என எளிதாகக் கண்டறியலாம். அந்த செயலி, தன் அறிவிப்புகள் குறித்து என்ன சொல்கிறது என்று பாருங்கள். அதனை 'ரெப்ரெஷ்' அல்லது 'அப்டேட்' செய்திட, காலக்கெடு ஒன்றைக் குறிப்பிடுமாறு உங்களைக் கேட்டுக் கொண்டால், புஷ் நோட்டிபிகேஷனை அது பயன்படுத்தவில்லை என்று பொருள். இந்நிலையில், அந்த செயலிக்கான புஷ் நோட்டிபிகேஷனை நிறுத்தி வைப்பதே நல்லது. உங்கள் போன் பேட்டரி உங்களுக்கு நன்றி சொல்லும். 

“கிரீனிபை” (Greenify) பயன்படுத்துக
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களில், பின்னணியில் தொடர்ந்து தேவையின்றி இயங்கும் செயலிகளைத் தானாகவே, “தூக்க நிலைக்குக்” (Sleep Mode) கொண்டு செல்லும் ஓர் அப்ளிகேஷன் “கிரீனிபை” (Greenify) ஆகும். 

இதனை உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்திட, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இந்த அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்திட வேண்டும். விருப்பப்பட்டால், இதற்கு நன்கொடை அளிக்கலாம். இன்ஸ்டால் ஆனவுடன், நேரடியாகக் குறிப்பிட்ட செயலிக்குச் சென்று, இதனை இணைத்துச் செயல்படுத்தலாம். 

முதலில், இதற்கு மேலாக வலது புறம் தரப்பட்டுள்ள 'கூட்டல்' (+) அடையாளத்தில் தட்ட வேண்டும். Greenify எந்த அப்ளிகேஷன்கள் அப்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று காட்டும். நம் மொபைல் போனின் செயல்பாட்டைச் சில சூழ்நிலைகளில் மந்தப்படுத்தும் செயலிகளும் சுட்டிக் காட்டப்படும். இவ்வாறு மின்சக்தி அதிகம் எடுத்து, போனின் செயல்பாட்டினை மந்தப்படுத்தும் அனைத்து அப்ளிகேஷன்களையும், Greenify கட்டுப்பாட்டில் அமைத்துவிடலாம். இவ்வாறு அமைத்துவிட்டால், அந்த அப்ளிகேஷன் தேவையின்றி எந்நேரமும் செயல்பாட்டில் இருக்காது. எடுத்துக் காட்டாக, மெசேஜிங் அப்ளிகேஷனை இயக்கினால், டெக்ஸ்ட் மெசேஜ் கிடைக்காது. எனவே, எந்த அப்ளிகேஷனை Greenify உடன் இணைக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுத்து இணைக்கவும். தூக்க நிலையில் வைக்க வேண்டிய அப்ளிகேஷனைத் தேர்ந்தெடுத்த பின்னர், வலதுபுறம் கீழாக உள்ள 'செக் மார்க்' பட்டனில் தட்டினால், உடன் Greenify முதல் திரை காட்டப்படும். அதில் எந்த எந்த செயலிகள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும். மீண்டும் உங்கள் முடிவை மாற்றி, இதிலிருந்து அப்ளிகேஷன்களை நீக்கலாம் மற்றும் இணைக்கலாம்.

உச்ச கட்ட சீதோஷ்ண நிலை கூடாது
இது போனில் ஏற்படுத்த வேண்டிய நடவடிக்கை அல்ல. உங்கள் பழக்க வழக்கத்தில் ஏற்படுத்த வேண்டிய மாற்றம். மொபைல் போனை, அது வெப்பமான கோடை காலாமானாலும், பனி தரும் குளிர் காலமானாலும், அதன் உச்சகட்ட சீதோஷ்ண நிலை அதனைப் பாதிக்கும் வகையில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால், பேட்டரி மிக விரைவாகத் தன் திறனை இழக்கும்.

எடுத்துக் காட்டாக, காரில் பயணம் மேற்கொள்பவர்கள், டேஷ் போர்ட், உள் அறைகள், பின்புற இருக்கைகளின் மேற்புறம் போன்றவற்றில் மொபைல் போன்களை வைத்துவிடுவார்கள். போன்களில், ஜி.பி.எஸ், வை பி போன்ற செயலிகளை நிறுத்தவும் மறந்துவிடுவார்கள். அல்லது அவற்றைப் பயன்படுத்துவார்கள். இந்த நேரங்களில், அதிக சூரிய வெப்பம், கார் இஞ்சின் வெப்பம், ஆகியவை மிக வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மொபைல் போனைப் பாதிக்கும். பேட்டரி மிக வேகமாக தன் மின்சக்தியை இழக்கும். 

மலை பிரதேசங்களில் வாழ்பவர்கள், இதே போல அதிகக் குளிர் உள்ள நேரத்தில், போனை இயக்குவதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

போனில் உள்ள செயலிகளின் இயக்கத்தை அடிக்கடி நிறுத்தி, உடன் இயக்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், ஒருமுறை இயக்கத்தை நிறுத்துகையில், அந்த செயலி, தன் செயல்பாட்டின் நிகழ்வுகளை பேக் அப் எடுக்கத் தொடங்கும். இது பேட்டரி சக்தியை அதிகம் எடுக்கும். எனவே, அவ்வாறு செய்திடாமல் Greenify போன்ற செயலிகளுடன் இணைத்துவிட்டால், அவை அப்ளிகேஷன்கள் இயக்கத்தினை நிர்வகித்திடும்.

பலர், மொபைல் போன் பேட்டரியின் மின் சக்தியினை அடிக்கடி முழுமையாகக் காலி செய்து, சார்ஜ் செய்திட வேண்டும் என்று கூறுவார்கள். இந்தக் கூற்று மிகப் பழமையான ஒன்றாகும். முன்பு வந்த நிக்கல் கேட்மியம் பேட்டரிகளுக்கே இது பொருந்தும். இப்போது வரும் லித்தியம் அயன் பேட்டரிகள் மற்றும் தற்போதைய பேட்டரிகளுக்குப் பொருந்தாது. இப்போதுள்ள பேட்டரிகளை, அதில் மின் சக்தி 20% வரை குறையும் வரை வைத்திருக்கலாம். உடன், அதனை சார்ஜ் செய்திட வேண்டும். முழுமையாக 100% சார்ஜ் செய்திட வேண்டும் என்பதில்லை. 40% முதல் 70% வரை சார்ஜ் செய்தால் போதும். 

பொதுவாக, இப்போது வரும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களின் தரம் ஒவ்வொரு ஆண்டும் செம்மைப் படுத்தப்பட்டுக் கொண்டே வருவதால், அதன் மின் சக்தி நிர்வாகம் குறித்து நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், சில ஸ்மார்ட் போன்களின் வடிவமைப்பு, பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்களிலேயே, தங்கள் செயல் திறனை மிக மந்த நிலையில் வைக்கின்றன. இது போன்ற போன்களுக்குத்தான், மேலே சொல்லப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.