News
Loading...

“கழிப்பறை கழுவு... டீ, வடை வாங்கி வா!” - பள்ளியில் தீண்டாமைக் கொடுமை...

“கழிப்பறை கழுவு... டீ, வடை வாங்கி வா!” - பள்ளியில் தீண்டாமைக் கொடுமை...

பள்ளிக்கூட கழிப்பறைகளைக் கழுவுமாறும், வகுப்பறைகளைச் சுத்தம் செய்யுமாறும் தலித் மாணவ, மாணவிகள் கட்டாயப்படுத்தப்படும் கொடுமை, மதுரை மாவட்டம், கீழையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடப்பதாக பகீர் கிளப்புகிறார்கள் கீழையூர் மக்கள்.

 “இந்தப் பள்ளிக்கூடத்தில், தலைமை ஆசிரியராக இருப்பவர் மாணிக்கவள்ளி. இவர், பள்ளிக்கூட கழிப்பறைகளைக் கழுவுமாறு தலித் மாணவிகளைக் கட்டாயப்படுத்துகிறார். தலைமை ஆசிரியர் கழிப்பறைக்குச் சென்றால், தலித் மாணவிகள் வாளியில் தண்ணீர் எடுத்துச் செல்லவேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறைகளைச் சுத்தம் செய்யவும் தலித் மாணவிகளை நிர்ப்பந்தப்படுத்துகின்றனர். அதேபோல, டீ, வடை வாங்கி வருவது போன்ற எடுபிடி வேலைகளுக்குத் தலித் மாணவர்களை நிர்பந்தம் செய்கிறார்கள்” என்று குற்றம்சாட்டுகிறார்கள் கீழையூர் பகுதி மக்கள். 

இது குறித்து நம்மிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட துணை அமைப்பாளர் மாயாண்டி, “கீழையூர் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் தலித் மாணவர்கள். அங்கு, கழிப்பறைகளைக் கழுவுவது, வகுப்பறைகளைக் கூட்டுவது, டீ வாங்கி வருவது போன்ற வேலைகளைச் செய்வதற்கு தலித் சமுதாய மாணவ, மாணவிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இந்த வேலைகளைச் செய்ய மறுக்கும் மாணவ, மாணவிகளை, ‘டி.சி வாங்கிட்டுப் போய்விடுங்கள்’ என்று தலைமை ஆசிரியர் மிரட்டுகிறார். நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர்களை, வடை, டீ வாங்கி வருமாறு அனுப்புகிறார்கள். மெயின் ரோட்டை கடந்துதான் டீ கடைக்குச் செல்ல வேண்டும். அதனால், அந்த மாணவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருக்கிறது. 

 இதை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துவற்கான பணிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் தரம் உயர்த்தப்படவில்லை. இந்தப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனச் சொல்லி,  தலைமையாசிரியர் அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார். இன்னொருபுறம், ‘சரியாகப் படிக்கவில்லை’ என்று சொல்லி தலித் மாணவர்கள் பலரை, பள்ளியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். இந்தத் தலைமையாசிரியர் ‘நல்லாசிரியர் விருது’ பெற்றவராம்.

“கழிப்பறை கழுவு... டீ, வடை வாங்கி வா!” - பள்ளியில் தீண்டாமைக் கொடுமை...

தலித் மாணவ, மாணவிகளுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகள் குறித்து தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் உட்பட பலருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கு எந்த பலனும் இல்லை. மாறாக, புகார் செய்த காரணத்தால், மாணவர்களின் பெற்றோர்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.  ‘அதிகாரிகள் விசாரித்தால், உண்மையைச் சொல்லக்கூடாது. மீறிச் சொன்னால், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அவ்வளவுதான்’ என்று மிரட்டுகிறார்கள்.

 படிப்பதற்காகத்தான் அனைவரும் தங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். துப்புரவு வேலை பார்ப்பதற்கு அல்ல.  இந்தப் பள்ளிக்கூடத்தில் துப்புரவுப் பணியாளர் நியமிக்கப்படவில்லை. அது ஏன் என்பது சந்தேகமாக இருக்கிறது.  இல்லை. இந்தப் பள்ளிக்குத் துப்புரவுப் பணிக்காக வழங்கப்படும் பணம் எங்கே போகிறது என விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.

இந்தப் பிரச்னை குறித்து, மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி ராஜாமணியிடம் பேசினோம். “இந்தப் பிரச்னை சம்பந்தமாக, நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டதை அடுத்து, நாங்கள் விசாரணை நடத்தினோம். எங்களுக்குக் கிடைத்த விவரங்களில் இருந்து, எங்களால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எனவே, மீண்டும் ஒரு விசாரணை நடத்துமாறு இணை இயக்குநர் சொல்லியிருக்கிறார். அதனால், அந்தப் பள்ளிக்குச் சென்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளோம். குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும்பட்சத்தில், கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

மாயாண்டி

தலைமை ஆசிரியர் மாணிக்கவள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மாயாண்டி தொடர்ந்த பொது நல வழக்கில், ‘‘இந்தப் புகார் சம்பந்தமாக கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது சில மாணவர்கள் புகாரை ஒத்துக்கொண்டுள்ளனர். சில மாணவர்கள் புகாரை மறுத்துள்ளனர். எனவே, மனுதாரரின் கோரிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பள்ளி மாணவ, மாணவிகளை வகுப்பறை, கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது. எதிர்காலத்தில் இதுபோன்ற புகார்கள் வராமல் ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.

தலைமை ஆசிரியர் மாணிக்கவள்ளியின் கருத்தைக் கேட்பதற்காக, அவரது செல்போன் எண்ணுக்கு பல முறை தொடர்புகொண்டோம். அவர் அழைப்பை ஏற்கவில்லை. குறுஞ்செய்தி அனுப்பியும், அவரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை.

 தீண்டாமை என்பது,  ‘பாவச்செயல்... பெருங்குற்றம்... மனிதத்தன்மையற்ற செயல்’ என்பதை  சாதி பார்க்கும் ‘ஆசிரியர் பெருந்தகை’களின் புத்தியில் முதலில்  ஏற்ற வேண்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...