News
Loading...

தேனுக்காக கொள்ளை, கொலைகள் நடைபெறுகின்றன என்றால் நம்புவீர்களா?

 தேனுக்காக கொள்ளை, கொலைகள் நடைபெறுகின்றன என்றால் நம்புவீர்களா?

நியூசிலாந்து நாட்டில் தேனுக்காக கொள்ளை,  கொலைகள் நடைபெறுகின்றன என்றால்  நம்புவீர்களா? மனுகா தேனுக்கு ஏற்பட்ட கடும் கிராக்கியினால் தேனீக்களை விஷம் வைத்துக் கொல்வது, அவற்றைத் திருடுவது உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன. 

இதற்கெல்லாம் காரணம் மனுகா எனும் சிறிய செடிதான். கீழேயுள்ள நெஞ்சைப் பதற வைக்கும் படம் மற்றும் செய்தி உங்களுக்காகத்தான்.   டேவிட் யாங்கி மற்றும் ரேச்சல் கியர்னி என இருவரின் தேனீ வளர்ப்புப் பண்ணையான டேகெல்லில் இதுவரை அப்படி ஒரு துயரம் நிகழ்ந்ததில்லை. 

நியூசிலாந்தின் நார்த்லேண்டு பகுதியிலுள்ள கைத்தையாவிலிருந்து 40 கி.மீ தொலைவிலுள்ள இவர்களின் பண்ணையில் 300 கூண்டுகளில் வளர்த்த பல்லாயிரக்கணக்கிலான  தேனீக்கள் ஒரே இரவில் விஷம் தெளித்து கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தன.

 தேனுக்காக கொள்ளை, கொலைகள் நடைபெறுகின்றன என்றால் நம்புவீர்களா?

‘‘தேனீக்கள் இறந்தது என்னை கடும் துயரத்தில் தள்ளியது. இது கனவாக இருக்கக் கூடாதா என்று கூட நினைத்தேன். தேனீக்களின் திடீர் படுகொலை கடும் மன உளைச்சலில் என்னை துடிக்கத் துடிக்கக் தள்ளியது’’ என குரல் தழுதழுக்க பேசுகிறார் ரேச்சல் கியர்னி. இறந்து போன தேனீக்களின் சந்தை மதிப்பு 3 லட்சம் டாலர்கள் என்றால் வேதனை தோன்றாதா? இந்தப் பேரளவு தேனீக்கள் படுகொலையே அரசு இந்தப் பிரச்னை குறித்து வேகமாக நடவடிக்கை எடுக்கவும் தூண்டியுள்ளது.    

ஆனால் இப்பகுதியின் தேனீ பண்ணையாளர்கள், சமீபத்திய வன்முறை நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்பதை அறிவார்கள். ஏனெனில் இப்பகுதியில் கூடிவரும் தேனீக்களின் படுகொலை, தேனீக்கள் திருட்டு, தேன் திருட்டு உள்ளிட்ட அனைத்துக்கும் காரணம் மனுகா  செடி
யிலிருந்து  எடுக்கப்படும் தேன்தான். 

எப்படி?நியூசிலாந்தில் கடந்தாண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட தேனின் அளவு 20 ஆயிரம் டன்களாகும். இது முந்தைய ஆண்டை விட 15 சதவீதம் அதிகம். அடுத்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து, சீனா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேனின் அளவு 400 மில்லியன் டாலர்களாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு 1 கிலோ மனுகா தேனின் விலை கிலோ 2 ஆயிரத்து 503 தான். ஆனால் இன்று ஒரு கிலோ தேனின் விலை 6 ஆயிரத்து 675 ரூபாய் என எவரெஸ்ட் உயரம் தொடுகிறது என்றால் அப்படி அந்த தேனில் என்ன விசேஷம்? என்று உங்களுக்குள் கேள்வி வந்திருக்கவேண்டுமே?   

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வளரும் தாவரமான மனுகாவின் (Leptospermum scoparium) ரோஸ் நிறம் கலந்த வெள்ளை நிறப் பூக்களிலிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் தேனுக்கு, காயங்களை ஆற்றும் சக்தி உண்டு என்று செய்தி வெளியானதுதான் தாமதம். மனுகா தேன் விற்பனை உலக மார்க்கெட்டில் தடதடக்க, பிறகுதான் மேலே சொன்ன அனைத்து குற்ற நிகழ்ச்சிகளும் தினசரி நிகழத்தொடங்கின. 

முதன்முதலில் தேன் சேகரிப்பை நார்த்லேண்ட் கடல்புரத்தில் தொடங்கிய டேவிட் யாங்கி 5 கி.மீ தொலைவில் அதற்கான உரிமத்தை முதன் முறையாகப் பெற்றவராவார். இன்று உலகசந்தையில் மனுகா தேன் சக்கைப்போடு போடத்தொடங்கியதும், இப்பகுதியில் மட்டும் 56 தேனீ வளர்ப்போர் தற்போது உரிமம் பெற்று எக்கச்சக்கமாக தேனீக்களை வயலெங்கும் பறக்கவிட்டு வருகின்றனர். 

தேனீக்கள் ஏராளமாக வளர்ப்பது ஓகே. மனுகா பூக்கள் சாகுபடி குறைவாக இருந்தால் என்னவாகும்? அதேதான். பொறாமையோடு போட்டியும் ஒன்றிணைய, குற்றங்கள் தொடங்கின. மெல்ல மனுகா தேன் விற்பனையில் உச்சம் தொட, அன்றிலிருந்தே நார்த்லேண்ட் மக்களின் தூக்கமும் தொலைந்துபோனது.  

சில மாதங்கள் கழித்து டேவிட்டின் தேனீப் பண்ணையில் கம்பி வேலிகள் நாசூக்காக அறுக்கப்பட்டு, தேனீக்கள் திருடப்பட்டி ருந்ததைக் கண்டு அவர் அதிர்ந்து போனார். ஆனால் அம்மாதத்திலேயே 5 முறை அன்லிமிடெட் களவுகள் நடக்க, பாதுகாப்பு கேமரா பொருத்தியும் திருடர்கள் எப்படி திருடுகிறார்கள் என்று டீட்டெய்லாகப் பார்க்க முடிந்ததே  தவிர அதனால் வேறு உபயோகம் ஏதுமில்லை.

‘‘தேன் கிலோ  667 ரூபாய்க்கு விற்கும்போதிலிருந்து இந்த வியாபாரத்தில் இருக்கிறேன். அதுவே அதிக விலை என்று நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இன்று 1 கிலோ தேன் 13 ஆயிரத்து 359 ரூபாய்க்கு விற்கப்படுவது மனதுக்கு திகில் தருகிறது. மேலும் ராக்கெட் வணிக வேகம் முட்டாள்தனமானது’’ என்கிறார் 1948 ஆம் ஆண்டிலிருந்து தேன் வணிகத்திலிருக்கும் மூத்த தேனீ பண்ணைக்காரரான  ப்ரூஸ் ராபின்சன்.

 இவரின் 3 ஆயிரம் தேனீ கூண்டுகளைக் கொண்ட பண்ணையில் மாதத்திற்கு 4 திருட்டுகள் நடந்து 20 ஆயிரத்து 305 ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திருடர்கள், பண்ணையில் பாதுகாப்பு கேமராக்களை உடைத்தும், மறுமுறை பொருத்தியதைத் திருடியும் சென்று
விட்டனர்.   

அரசின் விதிப்படி ஹெக்டேருக்கு ஒரு தேனீ கூண்டு வைக்கலாம். 1 கிலோமீட்டரில் இரு தேனீ வளர்ப்போர் இருந்தால்  என்ன செய்வது? எனவே,  இச்சட்டத்தை சரியானபடி முறைப்படுத்துவதில் நிறைய சிக்கல் உள்ளது. ‘‘மனுகா  தாவரத்திற்கு 200 மீட்டர் தள்ளி தேனீ 
கூண்டுகளை அமைத்திருக்கிறோம். 

ஆனால் முந்தைய நாட்கள் போல நிம்மதியான தூக்கமில்லை’’ என முந்தைய காலத்தை முகத்தில் தேக்கியபடி பேசுகிறார் ராபின்சன். ஜிபிஎஸ், பெட்டிகளுக்கு வண்ணம் தீட்டுதல், எண்களை அச்சிடுதல் இவையெல்லாம் பண்ணையாளர்களுக்கு செலவு வைக்கிறதே தவிர திருட்டுகளின் எண்ணிக்கை குறைவதில்லை. 

ஏனெனில் தொழில் போட்டியினால் தேனீக்களை மட்டும் விஷமருந்து தெளித்து நுணுக்கமாகக் கொன்றுவிடுகின்றனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை நியூசிலாந்து காவல்துறையில் இதுதொடர்பாக நார்த்லேண்டு மற்றும் மத்தி ஓடாகா பகுதியில் மட்டும் 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிசாசுத்தனமான கருணையற்ற வணிகப்போட்டியின் தூண்டிலில் மீட்கவே முடியாத இயற்கையின் கொடையான தேனீக்கள் மாட்டிக்கொண்டு இறப்பதுதான் பரிதாபம்.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.