News
Loading...

முகநூல் மூலம் ஏழைகளுக்கு உதவும் பெண் போலீஸ்

முகநூல் மூலம் ஏழைகளுக்கு உதவும் பெண் போலீஸ்: பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்தது

சத்தீஸ்கரில் முகநூல் மூலம் மருத்துவ நிதியுதவி பெற்று ஏழைகளுக்கு உதவி வருகிறார் பெண் போலீஸ் ஸ்மிதா தண்டி. இதனால், மிகவும் பிரபலமாகி விட்ட ஸ்மிதாவை முகநூலில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் துர்க் நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் ஸ்மிதா தண்டி. இவரது தந்தை சிவக்குமார் தண்டி, சத்தீஸ்கர் மாநில காவல்துறையில் காவலராக பணியாற்றினார். ஒரு விபத்தில் சிக்கிய சிவக்குமாரின் உடல்நிலை மோசமானது. இதனால் கடந்த 2007-ல் அவர் கட்டாய ஓய்வு பெற்றுக்கொண்டார். அதேசமயம், ஸ்மிதாவும் காவல்துறையில் பணியாற்ற விரும்பியதால் கடந்த 2013-ல் காவலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான பயிற்சியில் ஸ்மிதா ஈடுபட்டிருந்தபோது, சிவக்குமாரின் உடல்நிலை மேலும் மோசமானது. அவரை குணப்படுத்த தேவையான பணம் ஸ்மிதாவிடம் இல்லாததால் அவர் தனது தந்தையை இழக்க வேண்டியதாயிற்று.

இந்நிலையில் தனது நிலை வேறு எந்த ஏழைக்கும் வரக்கூடாது எண்ணிய ஸ்மிதா, நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து கடந்த 2015-ல் முகநூல் கணக்கு தொடங்கினார். இதில் நட்பு வட்டாரத்தை வளர்த்து ஏழைகளுக்கு உதவத் தொடங் கினார். ஸ்மிதாவின் கோரிக்கையை ஏற்று பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர். இதனால் பிரபலம் அடைந்த ஸ்மிதாவை முகநூலில் பின்தொடர்வோர் எண்ணிக்கை தற்போது 7,20,129 ஆக உயர்ந் துள்ளது.

ஸ்மிதா மூலம் உதவி பெற்ற, பிலாய் நகரின் தினேஷ் பிரதாப் சிங் கூறும்போது, “எனது 13 வயது மகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஆட்டோ ஓட்டும் என்னிடம் சிகிச்சைக்கான பணம் இல்லை. ஸ்மிதா செய்யும் உதவிகள் பற்றி அறிந்து அவரை சந்தித்தேன். அவர் நேரில் வந்து பார்த்துவிட்டு உதவ முன்வந்தார். எனது மகளுக்கு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது குணம் அடைந்துள்ளார்” என்றார்.

இதனிடையே ஸ்மிதா செய்துவரும் உதவிகளைப் பாராட்டிய சத்தீஸ்கர் காவல்துறை உயரதிகாரிகள், அவரை பிலாய் மாவட்ட சமூக இணையதளப் புகார் பிரிவில் பணியமர்த்தி உள்ளனர். இந்தப் பணியுடன் ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்யும் பணியையும் ஸ்மிதா தொடர்ந்து வருகிறார். இதனால், சத்தீஸ்கர் மாநிலத்தையும் தாண்டி வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியிலும் ஸ்மிதா பிரபலமாகி விட்டார். இதற்கு இணையதளம் பயன்படுத்துவதில் ஸ்மிதாவுக்கு உள்ள திறமையும் ஒரு காரணம்.

இது குறித்து ஸ்மிதா தொலைபேசியில் கூறும்போது, “உதவி என்ற பெயரில் ஏமாற்றி நிதியை பெறுவது தற்போது அதிகரித்துவிட்டது. எனவே என்னிடம் உதவிக் கேட்டு வருபவர்களிடம் நானே நேரில் சென்று அவர்கள் சொல்வது உண்மையா என விசாரிக்கிறேன். அதன்பிறகு அவர்களுக்கு உதவுமாறு எனது முகநூலில் பதிவுகள் இடுகிறேன். எனது இந்த செயல்முறையில் நம்பிக்கை வைத்து நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து உதவி வருகிறார்கள். எனது தந்தைக்கு வந்த நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதே இதன் நோக்கம்” என்றார்.

சத்தீஸ்கர் மாநில கைப்பந்து விளையாட்டு வீராங்கனையாகவும் ஸ்மிதா உள்ளார். இதனால் அவர் விளையாடச் செல்லும் இடங்களிலும் பலர் அவருக்கு உதவ முன்வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...