News
Loading...

அன்பைப் பரப்பும் முயல்!

அன்பைப் பரப்பும் முயல்!

நவம்பர் மாதத்தின் முதல் நாள் காலை 8 மணி. வரலாற்றுச் சிறப்புமிகுந்த தேம்ஸ் நதியின் ஆற்றுப்பாலத்தை ஒட்டிய சாலையில் வாகனங்கள் அதிவேகமாக விரைகின்றன.  பாலத்தைக் கடக்க சில மீட்டர் தூரம்தான் இருக்கிறது. 

வேகமாக வந்த வாகனங்கள், திடீரென மெதுவாக நகர்கின்றன. பயணிகள் எல்லோரின் பார்வையும் பாலத்தின் மீது அமர்ந்திருக்கிற முயல் போலத் தோற்றமளிக்கும் ஆறடி உயரமுள்ள ஒரு உருவத்தின் மீது படர்கிறது. ‘ஹாலிவுட் சினிமாக்களில் வருகின்ற ஏலியனோ’ என்று படபடத்து அதன் அருகில் செல்லும்போதுதான், அது முயல் போல வேடமிட்டிருக்கும் மனிதன் என்று தெரிய வருகிறது. சிலர் அந்த முயல் மனிதனுடன் கைகுலுக்கி, செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். பலர் பயந்துபோய் அப்படியே தங்களின் பயணத்தைத் தொடர்கின்றனர். 

ஸ்பைக் மெக்லாரிட்டி லண்டனில் வசிக்கின்ற நாடகக் கலைஞர். விதவிதமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பதில் தீராத காதல் கொண்டவர். இவர்தான் அந்த முயல் மனிதன். ‘‘இப்போது மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் சுவாரசியம், மகிழ்ச்சிக்கான தருணங்களே காணாமல் போய் விட்டன. பயங்களாலும், வெறுப்புகளாலும் சூழப்பட்டிருக்கிறோம். பார்த்ததையே திரும்பத் திரும்ப தினந்தோறும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதனால் வாழ்க்கை  சீக்கிரத்திலேயே சலிப்பு தட்டிவிடுகிறது. 

இங்கே காட்சிகளுக்கான பெரிய வெற்றிடம் நிலவுகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்பி, மனிதர்களுக்குக் காட்சி விருந்தளிக்கவும், மக்கள் மத்தியில் அன்பை பரப்பவும்தான் இப்படிச் செய்கிறேன்’’ என்கிறார் ஸ்பைக். கடந்த ஒரு வருடமாக, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் காலையிலும்  தேம்ஸ் நதியின் ஆற்றுப்பாலத்தில் முயல் வேடத்தில் ஆஜராகிறார் ஸ்பைக். இதற்காக பிரத்யேகமாக காஸ்ட்யூமைக்கூட  தயார் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் யாராலும் இவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. 

‘I AM White Rabbit’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து அதில் முயல் வேடமிட்ட புகைப்படங்களைப் பகிர்ந்தபிறகே இவரை மக்கள் அடையாளம் கண்டிருக்கின்றனர். ‘‘என்னைப் பார்ப்பவர்கள் தங்களின் நண்பர்களிடமோ, குழந்தையிடமோ ‘காலையில் வண்டியில் போய்க்கொண்டிருந்தபோது பாலத்தின் மேலே முயல் போல ஒரு பெரிய உருவத்தைப் பார்த்தேன்’ என்று ஆச்சர்யமாகச் சொல்வார்கள். ஏதோவொரு வகையில் நான் அவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறேன். இதுவே எனக்குப் போதும்’’ என்கிறார் அவர். அடுத்த மாதத்தின் முதல் தேதியில் ஆற்றுப்பாலத்துக்கு வருவார் முயல் மனிதர்.  பரவட்டும் அன்பு!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...