News
Loading...

புதுமை திருவிழாக்கள்

புதுமை திருவிழாக்கள்

உலகில் திருவிழாக்கள் இல்லையென்றால் குதூகலமும், உற்சாகமும் ஏது? தென்இந்தியாவில் தீபாவளி, பொங்கல், ஓணம், வடக்கே நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி போல் உலகமெங்கும் உள்ள பல்வேறு மத, இனக்குழுக்களுக்கு பல்வேறு புகழ்பெற்ற விழாக்கள் உண்டு. அப்படி கொண்டாடப்படும் புதுமையான திருவிழாக்களை ஃபோகஸ் செய்து பார்ப்போம் வாருங்கள்.

உருவ எரிப்பு கலைவிழா, அமெரிக்கா

1986ம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவின் பேகர் கடற்கரையில் லாரி ஹார்வி நண்பர்களால் முதன்முதலாக ‘பர்னிங் மேன் விழா’ சிறியளவில் உற்சாகமாக நடத்தப்பட்டது. விழா ஹிட்டடிக்க, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிறு தொடங்கி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள்கிழமை (அமெரிக்க தொழிலாளர் தினம்) வரை இவ்விழா நடைபெறத் தொடங்கியது. 

சனிக்கிழமை இரவில் மரத்திலான பெரிய மனித உருவம் நிறுத்தப்பட்டு தீ வைக்கப்பட்டு விழா கோலாகலமாகத் தொடங்கும்.   அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் ஆகஸ்ட் -  செப்டம்பர் மாதங்களில் நடக்கும் இந்த பர்னிங் மேன் திருவிழாவில் பிரமாண்ட கலையம்சமான கண்காட்சியும் உண்டு. கட்டிடம், நடனம், ஓவியம் என கிரியேட்டிவிட்டியின் கொடி உயரே பறக்கும் இவ்விழாவில் பங்கேற்க உலகெங்குமிருந்து 70 ஆயிரத்திற்கும்  அதிகமான மக்கள் கூடுகிறார்கள். 

இறந்தவர்கள் நினைவு விழா, மெக்சிகோ

மெக்சிகோவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31 - நவம்பர் 2 வரை ‘Day of the Dead’ விழா நடைபெறுகிறது. இறந்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் நினைவாக, அவர்கள் விரும்பிய உணவைப் படைத்து வழிபடுவர். எலும்புக்கூடு உடை, மண்டையோட்டு முகமூடி அணிந்து 1 கி.மீ தூரத்திற்கு ஊர்வலமாய் மக்கள் நடந்து வர, ஊரே அல்லோலகல்லோலப்படும். 

இறப்பை அங்கீகரித்து கௌரவிக்கும் இவ்விழாவில் நவம்பர் 1  இறந்துபோன குழந்தைகள், சிறுவர்களுக்கும், நவம்பர் 2  பெரியவர்களுக்கும் என கடைப்பிடிக்கப்படுகிறது. நவம்பர் 2 அன்று புனிதர்களின் நாளும் நினைவு விழாவோடு இணைத்து கொண்டாடப்படுகிறது.  

ஊர்வலத்தின்போது மக்கள் திகில் உடையில் ஆடியபடியும், சிரித்த படியும்,  சர்க்கரை எலும்புக் கூடுகளைத் தின்றபடியும் நடப்பது கண்கொள்ளாக் காட்சி. விழாவின் இறுதியில் கல்லறையில் பிரார்த்தனைகளும் உண்டு. 2008ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பும் மனிதநேய கலாசார நிகழ்வாக இதனை அங்கீகரித்துள்ளது.

குழந்தை அழுகை விழா, ஜப்பான்

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரலில் குழந்தைகளை சுமோ வீரர்கள் மிரட்டி பயமுறுத்தி அழ வைக்கும் போட்டி நடைபெறுகிறது. ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இப்போட்டியில் விதிகளும் மாறுபடுகிறது. 

400 ஆண்டு பழமையான விழாவுக்குப் பின்னணி, ‘அழும் குழந்தை வேகமாக வளரும்’ என்ற சிம்பிளான பழமொழிதான். குழந்தையை கர்ணகொடூரமாக ஹைடெசிபலில் அழ வைக்கவேதான் இந்த திருவிழா. 100 குழந்தைகளை வட்டமாக நிறுத்தி வைத்து முதலில் சுமோ வீரர்களைப் பார்த்து பயந்து வீறிட்டழும் குழந்தைக்குத்தான் அழுகை சாம்பியன் பட்டம்.  குழந்தை அழவில்லையா? நடுவரே டிரெடிஷனல் டிரெசில் வந்து குழந்தையை அதட்டி மிரட்டி கண்களை உருட்டி அழ வைப்பார். 

புதுமை திருவிழாக்கள்

புனித கும்பமேளா, இந்தியா

ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் மற்றும் அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா சுழற்சி முறையில் கொண்டாடப்படுகிறது.  கோடிக்கணக்கிலான இந்துக்கள் இதில் கலந்துகொண்டு கங்கையில் குளிக்கத் தவறுவதில்லை. புதன், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று கோள்களின் நகர்வு கணிக்கப்பட்டு கும்பமேளா நடைபெறும் நாள் குறிக்கப்படுகிறது. ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அரை கும்பமேளா ஹரித்வாரிலும், அலகாபாத்திலும் நடைபெறுகிறது.  

ஹரித்வாரின் கங்கைதான் இதில் முக்கியமான நதி. அலகாபாத்தின் சரஸ்வதி (கற்பனை நதி), நாசிக்கின் கோதாவரி, உஜ்ஜயினியில் ஷிப்ரா ஆகிய நதிகளிலும் மக்கள் குளித்து புண்ணியம் தேடுகிறார்கள். 144 வருடங்களுக்கு ஒரு முறை வரும், மகா கும்பமேளா இதில் அதி விசேஷம். 2013ம் ஆண்டு அலகாபாத்தில் நடந்த மகா கும்பமேளாவில் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள் என்பதே கும்பமேளாவின் பெருமைக்கும் புகழுக்கும் சான்று. 

லத்மார் ஹோலி, உத்தரப் பிரதேசம்

ஒவ்வொரு ஆண்டும் நந்தாகான், பர்சானா, மதுரா பகுதியில் வெகு சிறப்பாக நடைபெறும் திருவிழா இது. ஆண்கள் கையில் தோல் கவசத்துடன் பர்சானா நகரில் நுழைய, அவர்களுக்காக குச்சியோடு காத்திருக்கும் பெண்கள் அக்குச்சியால் இவர்களைத் தாக்குகின்றனர். இந்த அடியை நந்தாகான் ஆண்கள், டிராவிட் போல தோல் கவசத்தை சுவராக்கி  அடியை  தடுக்கிறார்கள். 

பெண்களிடம் யாராவது ஒரு ஆண் தனியாக சிக்கி விட்டால் அவருக்கு பெண்களின் உடை அணிவித்து அனைவரின் முன்னிலையில் நடனமாடவிட்டு பெண்களின் ஆடம் டீசிங் தொடங்கும். யாதவ குலத்தில் பிறந்த கிருஷ்ணர் தன் காதலி ராதாவை சந்திக்க அவளது கிராமமான பர்சானா சென்று அவளையும் அவளது தோழிகளையும் கேலி செய்கிறான். 

இதனால் சூடான பர்சானா கிராமப் பெண்கள் ஒன்று சேர்ந்து கிருஷ்ணனை விரட்டியடிக்கும் நிகழ்வே லத்மார் ஹோலி விழா பிறக்கக் காரணமாகும். இந்தியாவிலேயே இங்கு மட்டுமே ராதாவுக்கென தனி கோயில் உள்ளது. லத்மார் ஹோலி விழா தொடங்குவதும் இங்குதான். லத்மார் ஹோலிக்காக பெண்கள் ஒரு மாதத்திற்கு முன்பே நன்கு சாப்பிட்டு பலமாக்கிக்கொண்டு லத்தியோடு ஆண்களை வெளுக்கத் தயாராகிறார்கள். 

ஹோலா மொகல்லா, இந்தியா 1700ம் ஆண்டு, ஹோலி பண்டிகைக்கு அடுத்த நாள், சீக்கிய குருவான கோவிந்த் சிங், மூன்று நாள் கண்காட்சியை நடத்தி சீக்கியர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்தார். 

இதனை நினைவூட்டும் விதமாக இன்றும் கண்காட்சி, நீலநிற உடையணிந்த சீக்கியர்களின் ராணுவப் பயிற்சி ஊர்வலம், குச்சிகளை பயன்படுத்தி செய்யப்படும் தந்திரங்கள், விளையாட்டுகள் என அனந்தபூர் சாஹிப் பஞ்சாப் அமர்க்களப்படுகிறது. குருத்வாராவில் சைவ உணவும் உண்டு. நிகாங் என்ற சீக்கிய அமைப்பு இந்த பிரமாண்ட ஊர்வலத்தை நடத்துகிறது. பாரம்பரிய கருவிகளைப் பயன்படுத்துவது எப்படி எனவும் இந்த ஊர்வலத்தில் மக்களுக்கு லைவ் டெமோ உண்டு.

ஹைலைன் திருவிழா, இத்தாலி

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைச் சிகரங்களுக்கு இடையே உச்சிக்கு உச்சி பயணிக்கும் எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட் நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. கடல் மட்டத்திலிருந்து அதிஉயரத்திலுள்ள மலையில் கயிற்றைக் கட்டி இசை, யோகா, கயிற்றில் நடப்பது என நெஞ்சில் தில் உள்ளவர்களுக்கான திக் திடுக் திருவிழா இது. 

எதற்கு இந்த விழா? முதல் உலகப்போரின்போது தோராயமாக 15 ஆயிரம் வீரர்கள் மான்டே பியானாவிலிருந்து தம் வாழ்வைத் தொலைத்து இருக்கிறார்கள். அவர்களை நினைவுகூரும் விழா இது. இதில் உயிரைத் துச்சமாக மதித்து உலகெங்குமிருந்து வந்து பங்கேற்பவர்கள் ஏராளம்!

குரங்கு ஓட்டம், இங்கிலாந்து

லண்டனில் கடந்த 14 வருடங்களாக செப்டம்பர் மாதத்தில் ‘கிரேட் கொரில்லா குரங்கு ஓட்டம்’ 8 கி.மீ தொலைவுக்கு நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கில் கொரில்லா முகமூடி மற்றும் குரங்கு பாணி ஆடைகளை அணிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக வந்து பணம் சேகரிக்கிறார்கள். 

எதற்கு? வேகமாக அழிந்து வரும் மலைவாழ் கொரில்லா குரங்குகளை பாதுகாக்கத்தான். இதுவரை  கொரில்லா ஓட்டத்தின் மூலம் 2 மில்லியன் டாலர்கள் சேகரிக்கப்பட்டு மத்திய ஆப்பிரிக்காவிலுள்ள கொரில்லாக்களை பாதுகாக்க செலவிடப்பட்டுள்ளது.

சாம் நடனம், திபெத்திபெத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் புத்த துறவிகள் பங்கேற்று ஆடும் பாரம்பரிய சாம் நடனம் நடைபெறுகிறது. துறவிகள் வண்ண முகமூடியும் உடைகளும் அணிந்து இசை மீட்டியபடி ஆடலோடு கடவுளை வணங்கும் இந்நடனம், கி.பி. 765ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. திபெத்தியர்களின் பாரம்பரிய கலை நடனமான இது, பூடானிலும், இந்தியாவின் சில பகுதிகளிலும் நடைபெறுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.