News
Loading...

நிலை தடுமாற வேண்டாம் பிரதமரே!

நிலை தடுமாற வேண்டாம் பிரதமரே!

“இனி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி பெரும்பான்மையான இந்தியர்கள் அமைதியாகத்தான் தூங்கினார்கள். ஆனால், சிலர்தான் இதுநாள் வரை தூக்கம் இல்லாமல் தடுமாறுகிறார்கள்’’ - கோவாவில் மோபா கிரீன்ஃபீல்டு விமானநிலையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது இது.

‘500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்பது பற்றி மனம் திறந்த மோடி, ‘‘இதனை நாங்கள் இத்தோடு விடப்போவதில்லை. பினாமி சொத்துக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகிறோம். ஊழலையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்க இது ஒரு முக்கியமான முன்னெடுப்பு. இந்தியாவில் மோசடி செய்து சம்பாதித்த பணம், இந்திய எல்லையைத் தாண்டிச் செல்லுமாயின் அதனையும் கண்டுபிடிப்பது எங்கள் கடமை. இந்த நாட்டு மக்கள், ‘நான் என்ன செய்ய வேண்டும்’ என்று என்னிடம் ஆட்சியை ஒப்படைத்தார்களோ, அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன். சில சக்திகள், எனக்கு எதிராகத் திரள்கின்றன என்பதை நான் அறிவேன். என்னை அவர்கள் வாழவிடமாட்டார்கள். என்னை நாசம் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களது 70 ஆண்டுகாலக் கொள்ளை என்னால் பிரச்னையாகி உள்ளது. ஆனால், நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. அனைத்துக்கும் தயாராக இருக்கிறேன். நான் எந்தவொரு உருப்படியான பணியையும் செய்யாமல் நாற்காலியில் வெறுமனே அமர்வதற்காகப் பிறக்கவில்லை. என் குடும்பம், என் வீடு என அனைத்தையும் என் தேச நலனுக்காகத் தியாகம் செய்துவிட்டேன். சாமான்ய மக்களின் இன்னல்களைப் புரிந்துகொள்கிறேன். அவர்களின் அதே வலியை நானும் உணர்கிறேன். என்னுடைய அகந்தையைக் காட்டுவதற்காக, நான் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. நானும் வறுமையைப் பார்த்தவன். எனக்கும் மக்களின் கஷ்டங்கள் புரியும். மக்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், இந்த இன்னல்கள் எல்லாம் இன்னும் 50 நாட்களுக்குத்தான். அதன்பிறகு, இந்த நாட்டை ஊழலற்ற நாடாக மாற்றுவேன். உங்களுக்கு என்னுடைய குறிக்கோள்களில், நோக்கங்களில் ஏதேனும் தவறு என்று பட்டால் என்னை பொது இடத்தில் தூக்கிலிடுங்கள்” என முழங்கினார் மோடி.

உணர்வுபூர்வமான உரை. இதை, அவர் வெறும் வார்த்தைகளைக் கோத்து மட்டும் பேசவில்லை. அதில், கண்ணீரைத் தடவிப் பேசினார். பேசும்போதே குரல் உடைந்தது. கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. தொலைக்காட்சியில் பார்த்தவர்கள்; இணையத்தில், நாளிதழில் படித்தவர்கள் என அனைவரும் உருகிப்போனார்கள். 

அதே இந்தியப் பிரதமர் ஜப்பானில் என்ன பேசினார்? இந்த உரை நிகழ்த்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், ஜப்பானில் உள்ள இந்தியர்கள் மத்தியில் மோடி பேசினார். ஆனால், அது வேறு மாதிரி. தான் எடுத்த நடவடிக்கை குறித்து பெருமிதமாகப் பேசினார். அந்த உரையில் சாமான்ய மக்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மாறாக, அந்த உரையில் மகிழ்ச்சி இருந்தது. எள்ளல் இருந்தது. ஓர் எல்லையில், அவர் கிண்டலான உடல்மொழியில், ‘கர்மெ ஷாதி ஹை... பைசா நஹி ஹை’ (வீட்டில் திருமணம். ஆனால், பணம் இல்லை) என்றார் சிரித்தவாறு. கூடி இருந்த கூட்டமும் சிரித்தது.

நிலை தடுமாற வேண்டாம் பிரதமரே!

யார் குறித்த கிண்டல் இது? யார் பணம் இல்லாமல் திருமணத்துக்குக் கஷ்டப்படுகிறார்கள்? பி.ஜே.பி-யைச் சேர்ந்த முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழில் அதிபருமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் திருமணம் 650 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது. ‘கையில் பணம் இல்லை. 4,000 ரூபாய்தான் தருகிறார்கள்’ என அவருடைய மகள் திருமணம் தள்ளிவைக்கப்படவில்லை. ஆனால், சாமான்ய மக்கள் திருமணத்தை எப்படி நடத்த முடியாமல் தத்தளிக்கிறார்கள். அவர்களைப் பார்த்து மோடி சிரிக்கிறார்.

500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையில், 33 பேர் ஏ.டி.எம்., வங்கி வரிசைகளில் காத்திருந்ததாலும், பணம் கிடைக்காத அதிர்ச்சியிலும் இறந்து போயிருக்கிறார்கள். திருமணத்தைத் தள்ளிவைத்துவிடலாமா? மருத்துவச் செலவுக்கு என்ன செய்வது என மக்கள் கையைப் பிசைந்து கொண்டிக்கும்போது நம் பிரதமர் நாட்டுக்கு ஒரு பேச்சு பேசுகிறார். ஊருக்கு ஊர் சீதோஷ்ண நிலை மாறலாம். உணர்வுகள் மாறலாமா? ஏ.டி.எம் மையத்தில் பணத்தை எடுத்துவிட்டு, ஐந்து முறை சிவப்புப் பொத்தானை அழுத்தும் எளிய இந்தியன் உங்களிடம் எதிர்பார்ப்பது கண்ணீரையோ அல்லது எள்ளலான சிரிப்பையோ அல்ல. இந்தச் சூழ்நிலையைக் கையாள ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை. அதை செய்வதை விடுத்து நாட்டுக்கு, நாடு ஒரு பேச்சு பேச வேண்டாம். ஏ சென்டர், சி சென்டர் என மக்களைப் பிரித்து சினிமாக்காரர்கள் வேண்டுமானால் படம் எடுக்கலாம். ஆனால், ஒரு தேசத்தின் பிரதமர், ஒரு நடவடிக்கை குறித்துத் தன் பார்வையாளர்களுக்கு ஏற்றதுபோல பேசலாமா?

நிலை தடுமாற வேண்டாம் பிரதமரே.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.