News
Loading...

உயிர் குடித்த செல்லாக் காசு!

உயிர் குடித்த செல்லாக் காசு!

ஆயிரம், ஐந்நூறு ரூபாய்கள் செல்லாது’ என்ற அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ம் தேதி இரவு முதல் இந்த நிமிடம் வரை இந்தியாவில், இன்னல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. திருமணம் போன்ற விசேஷங்களை ஏற்பாடு செய்தவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். ஏ.டி.எம். வாசலிலோ, ‘பணம் இல்லை’ என்ற நிரந்தர போர்டு.

தினசரி வாழ்வில், ஒவ்வொரு இந்தியனும் இந்த செல்லாக்காசு பிரச்னையினால், மன அழுத்தத்தில் சிக்கித் தவித்துவருகிறான். கறுப்புப் பண முதலைகளை நோக்கி செலுத்தப்பட்ட ‘செல்லாக்காசு அம்பு’, குறி தவறி குடிமகன்களின் உடம்பில் தைத்து உயிர் குடிக்கும் வேதனை ரிப்போர்ட் இது....

உத்தரப்பிரதேசம்: பிரதமர் மோடியின், ‘செல்லாது’ அறிவிப்பை தொலைக்காட்சியில், பார்த்த சிறுவணிகர் நெஞ்சுவலியால் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளிக்க புதிய ரூபாயைக் கட்டணமாக கேட்டது தனியார் மருத்துவமனை. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்துபோனது குழந்தை. பழைய 1000 ரூபாய் நோட்டுகள் இரண்டை வங்கியில் டெபாசிட் செய்ய சென்றுள்ளார் ஒரு பெண். வங்கி ஊழியர்களோ, ‘இது செல்லாது’ எனக்கூற, அதிர்ச்சியடைந்த அந்த ஏழைப் பெண் அந்த இடத்திலேயே உயிரிழந்துபோனார்.

தெலங்கானா: மகள் திருமணம், கணவரின் மருத்துவச் செலவு போன்ற தேவைகளுக்காக தனது சொந்த நிலத்தை 54 லட்சம் ரூபாய்க்கு விற்ற பெண் ஒருவர், ‘செல்லாது’ அறிவிப்பால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கர்நாடகா: உடுப்பியில், புதிய பணத்தைப் பெறுவதற்காக வங்கியின் வரிசையில் காத்திருந்த 96 வயது முதியவர் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளார்.

மத்தியப்பிரதேசம்: புதிய பணம் பெறுவதற்காக வங்கி வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் மயங்கி விழுந்து மரணம்.

போபால்: ஸ்டேட் வங்கி காசாளர், பொதுமக்களுக்கு பண விநியோகம் செய்து கொண்டிருந்தபோது ‘பணிச்சுமை’ காரணமாக மாரடைப்பால் மரணமடைந்தார்.

மும்பை: புதிய ரூபாய் நோட்டினை கட்டணமாக செலுத்தாததால், பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க மறுத்துள்ளது தனியார் மருத்துவமனை. உரிய நேரத்தில், சிகிச்சை கிடைக்காத காரணத்தால், குழந்தையும் இறந்துபோனது. வங்கியில் பணம் செலுத்த வரிசையில் நின்ற முதியவர் மாரடைப்பால் மரணம்.

ஆந்திரா: விசாகப்பட்டினத்தில் ஒன்றரை வயதுக் குழந்தைக்கு மருந்து வாங்க, பழைய ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு பெற்றோர் திரிந்த வேளையில், நோய்க்கொடுமை தாளாமல், பரிதாபமாக இறந்துபோனது குழந்தை.

ராஜஸ்தான்: தாய்-சேய் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உள்ளூர் தனியார் ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். கட்டணமாக புதிய ரூபாய் நோட்டைக் கேட்டு வர மறுத்துள்ளனர் ஆம்புலன்ஸ் நிறுவனத்தினர். கால தாமதத்தால், குழந்தை மரணம்; தாய் உடல் நிலை மோசம்.

மேற்குவங்கம் : வங்கியில் கூட்டம் அதிகம் இருந்ததால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வீடு திரும்பினார் மனைவி. “இதைக்கூட உன்னால் செய்ய முடியவில்லையா?” எனக்கேட்டு அடித்துக்கொன்றார் அவரது கணவர்.

பீகார்: மகளுக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டார் ‘பழைய பணத்தை வரதட்சணையாக வாங்கிக் கொள்வார்களா, மகளின் திருமணம் நடக்குமா’ என்று புலம்பி வந்தவர் மாரடைப்பால் மரணம்.

கேரளா: வங்கியில் செலுத்துவதற்காக கைவசம் இருந்த 5 லட்சம் ரூபாயுடன் சென்றவர், வங்கியின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம்.

குஜராத்: வங்கியில், பணம் செலுத்த நீண்ட வரிசையில் நின்ற விவசாயி மாரடைப்பால் மரணம்.

கேரளா: ஆலப்புழாவில், வங்கியில் புதிய பணம் பெற காத்திருந்த 75 வயது முதியவர் மயங்கி விழுந்து மரணம்.

தமிழ்நாடு: கன்னியாகுமரி அருமனை அருகே மஞ்சாலுமூடு ஸ்டேட் வங்கியில், ஓய்வின்றி பணியாற்றியதால், 2 பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்தனர். கோவை சின்னியம் பாளையத்தில் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம். வாசலில் நின்ற பொதுமக்கள் மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

கறுப்புப் பண மீட்பு நடவடிக்கையில், வெற்றி பெற்றுவிட்டதாக... லட்சம் கோடிகளை மீட்டெடுத்துவிட்டதாகப் பொருளாதாரப் புள்ளிவிவரம் காட்டுகிறார்கள். எந்த சம்பந்தமும் இல்லாமல், அப்பாவிகள் உயிரிழந்துபோன இந்தப் புள்ளிவிவரங்களையும் அந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.