News
Loading...

நேர்வழியில் சம்பாதித்து பெரும் தொகை வைத்திருப்போர்: என்ன செய்யலாம்?

நேர்வழியில் சம்பாதித்து பெரும் தொகை வைத்திருப்போர்: என்ன செய்யலாம்?

நேர் வழியில் சம்பாதித்து பெரும் தொகையை வைத்திருப்போர், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் வங்கியில் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நவம்பர் 8-ம் தேதி இரவு, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பழைய நோட்டுகள் தற்போது வங்கிகளில் பெறப்பட்டு வரும் நிலையில், ஒரு நபர் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தும்போது, அது அவரது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் இருந்தால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப் படும். வருமானவரித் துறை விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் மட்டுமல்லாது, நேர் வழியில் சம்பாதித்து, வங்கி பரிவர்த்தனை பழக்கம் இல்லாததால், கையில் பெரும் தொகை வைத்திருப்போருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு நேர் வழியில் சம்பாதித்த பெருந்தொகையை, உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், வங்கிகளில் செலுத்த முடியாமல் தவிக்கும் மக்கள், வங்கி தவிர்த்த மற்றவற்றில் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறதா? என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழக பொருளாதாரத் துறை இணை பேராசிரியர் இராம. சீனுவாசன்:

நேர்மையான வழியில் பணம் சம்பாதித்தவர்கள் அதை வங்கியில் எளிதாக முதலீடு செய்யலாம். உதாரணமாக, ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்ய தங்களுடைய ஆதார் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள சான்றிதழைக் காண்பித்தால் போதுமானது. முறைசாரா தொழில்புரிபவர்கள் உதாரணமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் ஆட்டோ ஓட்டி சம் பாதித்த ரூ.3 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்ய விரும்பினால் அவர் தனது ஆட்டோ ஓட்டுநர் உரிமத்தைக் காட்டி பணத்தை டெபாசிட் செய்யலாம். ரியல்எஸ்டேட் முகவர்கள், முகவர் தொழில் மூலம் கிடைத்த தரகு தொகையை, நிலம் விற்றோர், வாங்கியோரிடமிருந்து கடிதம் பெற்று, வங்கியில் டெபாசிட் செய்யலாம்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் சிவ.ராஜசேகரன்:

விவசாய வருமானத்துக்கு, வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் தாம் சம்பாதித்த தொகை இன்ன விவசாய நிலத்தில் விவசாயம் செய்ததன் மூலம் சம்பாதித்தது என்பது குறித்த ஆதாரத்தை அளிக்கலாம். குத்தகை விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சிட்டா, அடங்கல் போன்ற ஆவணங்களை ஆதாரமாக தரலாம். மேலும் சிறு வணிகர்கள், மளிகைக் கடைக்காரர்கள், தினசரி வருவாயை வங்கியில் செலுத்தும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்கள் கையில்தான் பணம் வைத்திருப்பார்கள். அவர்கள் விளக்கக் கடிதம் ஒன்றை வங்கியில் செலுத்தினால் போதும். அவரவர் செய்து வரும் தொழில் தொடர்பாக விளக்கக் கடிதம் அளிக்கலாம்.

மூத்த வழக்கறிஞர் எஸ்.ரமேஷ்:

ரியல் எஸ்டேட் துறையை பொறுத்தவரை ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் ஏற்கப்படும் என்பது தவறான கருத்து. சட்டப்படி செல்லுபடியாகாத ரூபாய் நோட்டுகளை அரசு சொல்லியுள்ள வழிகளில் தான் மாற்ற முடியும்.

சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்த குமார்:

ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால், அனைவரது பெயரிலும் பிரித்து போடலாம். இது யாரையும் ஏமாற்றும் நோக்கம் அல்ல. அது மட்டும் அல்லாமல், எந்த காலத்திலும் தங்கத்தில் செய்யும் முதலீடே சிறந்தது. முதலீடு செய்த தங்கத்தை பாதுகாப்பாக வைக்கவும் பல வழிகள் உள்ளன.

ஒருவர் நியாயமாக சம்பாதித்த பணத்துக்கு வருமான வரி செலுத்தியிருந்தால், அதை சட்டப்படி முதலீடு செய்ய முடியும். கணக்கில் காட்டப்படாத பணத்தைக் கொண்டு நகை, வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்ய முடியாது. அப்படியே செய்தாலும், பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீ.கண்ணதாசன்:

இந்தியன் வங்கியின் ஆலோசகர் ஒருவர் கூறும்போது, “ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்பவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படாது. வங்கியில் அதிக தொகையை செலுத்தும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் பெறப்பட்டு, அவற்றை ஆய்வு செய்யும்போது உரிய ஆவணங்கள் இல்லையென்றால் மட்டுமே அபராதம் விதிக்கப்படும். மேலும், இன்றைய சூழலில் அதிக தொகை இருந்தால் அதை வங்கியில் டெபாசிட் செய்வதைத் தவிர வேறு சட்டபூர்வ வழிகள் இல்லை. வேண்டுமானால், வீட்டில் 5 பேர் இருந்தால் அவர்கள் அனைவரின் வங்கிக் கணக்கிலும் தனித்தனியே மொத்த தொகையை பிரித்து டெபாசிட் செய்யலாம்” என்றார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.