News
Loading...

இது கொள்கை கூட்டணி... தேர்தல் கூட்டணி அல்ல!

இது கொள்கை கூட்டணி... தேர்தல் கூட்டணி அல்ல!

“தேர்தல் அரசியலைத் தாண்டி, பொதுப் பிரச்னைகளில் அரசியல் கட்சிகள் ஒரு தளத்தில் நின்று பணியாற்ற வேண்டிய தேவையை உணர்த்துவதற்காக” என்ற அறிவிப்போடு பொதுச் சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டை சென்னையில் நடத்தியுள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி. 

“பொதுச் சிவில் சட்டம் இந்த நாட்டுக்கு தேவை என்பதைவிட பி.ஜே.பி-யின் வகுப்புவாதத்துக்குத்தான் தேவையாக உள்ளது” என்பதே  தலைவர்கள் பேச்சின் சாரம்சம்.

இயக்குநர் அமீர் பேசியபோது “பாபர் மசூதியை இடித்து ஒரு வகுப்புவாதத்தை ஏற்படுத்தி வளர்ந்த கட்சி பி.ஜே.பி. ஆனால், அந்தப் பிரச்னையை சரியான கோணத்தில் இஸ்லாமியர்கள் அணுகவில்லையோ என்று தோன்றுகிறது. பாபர் மசூதி இடத்தில் அவர்கள் கோயில் கட்டுவோம் என்று சொல்லும்போது, அதை சகிப்புத் தன்மையோடு விட்டுக்கொடுத்து அதற்கு அருகில் வேறு இடத்தில் மசூதிகட்டியிருந்தால், இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டிருக்கும். சரிக்குச் சரியாக நின்றதால் அவர்களின் பிரித்தாலும் சூழ்ச்சி வெற்றி பெற்றுள்ளது. மோடியின் அறிவிப்புக்கு முதல் குரலாக ஆதரவு தெரிவித்த ரஜினி இந்த நாட்டில் எத்தனை அக்கிரமங்கள் நடந்தபோதும் வாய்திறக்காததன் ரகசியம் என்ன? புதிய இந்தியா பிறந்துள்ளது எனச் சொல்லும் ரஜினி அவர்களே, உங்கள் கபாலி படத்தின் டிக்கெட் விலை என்ன தெரியுமா?” என்று அதிர வைத்தார்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேடையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாங்கள் இணைந்துள்ளோம் என்கிறார்கள். தலித் இஸ்லாமியர்கள் பந்தத்துக்கு இடையே இடைவெளி எப்போதும் கிடையாது. அது நீண்டகால பந்தம். இந்த மேடையில் அமர்ந்திருக்கும் கட்சிகள் சிறுபான்மையினருக்கு  ஒரு பிரச்னை என்றால் எஃகு அரணாக முன்னால் வந்து  நிற்பார்கள் என்பதை மத்திய அரசு உணர்ந்துகொள்ளட்டும்” என்றார்.

தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை எம்.பி. கனிமொழி பேசியபோது, “இந்த நாட்டில்  பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிக்கும் மோடியின் அரசு,  சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாகக் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை.அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று கொண்டு வந்த சட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் தடுப்பது இவர்களைச் சார்ந்தவர்கள்தானே? பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தை நசுக்கும்போது, அந்த சிறுபான்மை சமூகத்துக்கு ஆதரவாக இருப்பது பெரியார் கொள்கை. அதை தி.மு.க கடைபிடிக்கும்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, “இன்று நாட்டுக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை மதத்தால் பிளவுபடுத்தும் நிலை உள்ளது. இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். திப்பு சுல்தானுக்கு விழா கொண்டாடக் கூடாது என்று எதிர்க்கிறார்கள். சிவாஜியைப் பற்றி எழுதிய எழுத்தாளர் கொல்லப்படும் நிலை. நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. மதவெறி இந்த நாட்டில் தலைதூக்கிவிடக் கூடாது. வகுப்புவாத சக்திகளை விரட்டும் பொறுப்பு நமக்கு இருக்கிறது” என்றார். 

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், “இங்கு கூடியிருக்கும் கட்சிகள் அரசியல் கூட்டணி அல்ல. ஆனால், இது தமிழக நலனுக்கு தேவையான கூட்டமைப்பு இது. இந்த அமைப்பு தேர்தலைக் கடந்து நாட்டின் நலனுக்காக தொடரவேண்டும். பி.ஜே.பி-யினர் சொல்லும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இனம் என்கிற கனவும் ஒருபோதும் நிறைவேறாது. உலக நாட்டை சுற்றி பார்க்கும் மோடி முதலில் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கட்டும். அப்போதுதான் இந்த நாடு வேற்றுமையில் ஒற்றுமையாக உள்ளது என்பது அவருக்குப் புரியும்” என்றார். 

நிறைவாகப் பேசிய திருமாவளவன், “இந்த மாநாடு நடத்துவதற்கு நான்கு காரணங்கள் உள்ளன. ஒன்று... பொதுச் சிவில் சட்டத்தை எதிர்ப்பது இஸ்லாமியர்களுக்கு மட்டும் கடமை அல்ல; நம் அனைவருக்கும் இருக்கிறது. இரண்டு... தேர்தல் அரசியல் தாண்டி, பொதுப் பிரச்னையிலும் அரசியல் கட்சிகள் இணைந்து பணியாற்றும் தேவை இருக்கிறது. மூன்று... பொதுச் சிவில் சட்டத்தை கொண்டுவர அம்பேத்கர் விரும்பியதாகத் தவறான விளக்கத்தை தருகிறார்கள், அதை பொய் என நிரூப்பிதற்கு. நான்கு... சிறுபான்மையினருக்குப் பிரச்னை வரும்போது எல்லாம் தோள் கொடுக்க விடுதலைச் சிறுத்தைகள் நிற்போம் என்பதை உணர்த்துவதற்காக” என்று மாநாட்டின் நோக்கத்தை விளக்கினார்.

‘‘நீங்கள் அழைக்கும் போதெல்லாம் நாங்கள் வருகிறோம். நாங்கள் அழைக்கும்போது நீங்கள் ஏன் வர மறுக்கிறீர்கள்?” என்று கனிமொழி, திருமாவளவனைக் குத்திக் காட்டியதுதான் மாநாட்டின் ஹைலைட்!  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.