News
Loading...

ஆழ்கடலில் மீன்பிடிக்க உதவி

ஆழ்கடலில் மீன்பிடிக்க உதவி

ரப்பராக இழுத்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு, டெல்லியில் 2 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தை ஒரு தீர்வைக் கண்டுவிடும். அல்லது தீர்வுக்கான வழியைக் காட்டி விடும் என்று எல்லோரும் எதிர்பார்த்தது பெரும் ஏமாற்றமாக போய் விட்டது. 2–ந்தேதி டெல்லியில் இலங்கை மீனவர்கள், தமிழக மீனவர்கள் உட்கார்ந்து பேசினார்கள். நேருக்கு நேர் நடந்த பேச்சுவார்த்தையே பலன் ஒன்றையும் காணாமல் முடிந்து விட்டது. தொடர்ந்து 5–ந்தேதி இருநாட்டு அரசுகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையை எல்லோரும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தார்கள். இந்தக் கூட்டத்தில், இந்தியா தரப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில், வேளாண்துறை மந்திரி ராதா மோகன்சிங், மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி மங்கள சமரவீரா, மீன்வளத்துறை மந்திரி மகிந்தா சமரவீரா, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இருநாட்டு தரப்பிலும், உயர்மட்ட அளவில், மந்திரிகள் கலந்துகொண்ட இந்த பேச்சுவார்த்தையில், முக்கிய தீர்வுகள் காணப்படாமல், மீண்டும் இருநாட்டு வெளியுறவு அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றின் உயர்அதிகாரிகள் இடம்பெறும் கூட்டு நடவடிக்கைக்குழு ஒன்றை அமைக்கவும், இந்தக்குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து மடிவலைகளுடன்கூடிய இழுவைபடகுகளின் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டுவருவது, இருதரப்பிலும் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவித்து, திரும்ப ஒப்படைப்பது தொடர்பான விதிமுறைகளை உருவாக்குதல், கண்காணிப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றை ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல், இருநாட்டு மீன்வளத்துறை மந்திரிகளும், 6 மாதங்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 80 நாட்களுக்கு மட்டும் மீன்பிடித்துக்கொள்ள அனுமதியளிக்கவேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கைகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என்பதையெல்லாம் இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆக, மீனவர்களும், இருநாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் சந்தித்து ஒரு சுமூகமான தீர்வு ஏற்படாத நிலையில், பேச்சுவார்த்தைகளால் உடனடியாக நாம் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கப் போவதில்லை என்ற நிலையில், இனி மத்திய அரசாங்கம் செய்ய வேண்டியது, தமிழக மீனவர்கள், இலங்கை கடற்பகுதிக்கு செல்லாமல், தொலைதூரம் சென்று ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்கு தேவையான படகுகளையும், உபகரணங்களையும் குறைந்த விலைக்கு வழங்குவது, அதற்கான கடன் உதவிகளையும் பெற்றுத் தருவது, இது போன்ற தொலைதூர ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்கு தேவையான பயிற்சிகளை வழங்குவது ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு சார்பில், மத்திய அரசாங்கத்திடம் மீனவர்கள் ஆழ்கடலில் போய் மீன் பிடிப்பதற்கான இதுபோன்ற திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதிஉதவி கோரப்பட்டுள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா பலமுறை கோரிக்கைகள் விடுத்திருக்கிறார். அதையும் பரிசீலித்து விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். 

அடுத்து, ஜனவரி மாதம் 2–ந்தேதி இருநாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களின் முதல்கூட்டம் கொழும்பு நகரில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 115 படகுகளையும் மீட்பது குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 115 படகுகளையும் உடனடியாக விடுவிக்க முடிவு எடுக்க வேண்டும். பழுதடைந்த 18 படகுகளுக்கும் இழப்பீடு வேண்டும் என்பது பொன்.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையாகும். மற்றப் பிரச்சினைகளுக்கெல்லாம் இப்போது தீர்வு கிடைக்க சாத்தியமில்லை என்ற நிலையில், இந்த 115 படகுகளையாவது உடனடியாக மீட்டு தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். நடந்து முடிந்த 2 நாள் கூட்டங்களிலும், இருநாட்டு மீனவர்களும், இருநாட்டு மந்திரிகளும் பேசினார்கள், கூட்டம் முடிந்தது என்ற வகையில், உடனடி பயன் எதுவும் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.