News
Loading...

அப்போலோவில் அம்மா... எட்டு பேர் கையில் ஆட்சி!

அப்போலோவில் அம்மா... எட்டு பேர் கையில் ஆட்சி!

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு, 40 நாட்கள் ஓடிவிட்டன. அவருக்கு சிகிச்சை எப்போது முடியும்; அவர் எப்போது வீடு திரும்புவார் என்பது ‘டாப் சீக்ரெட்’. ஆனால்கூட, இதுநாள்வரை ஜெயலலிதாவையே மையமாக வைத்துச் சுழன்ற அ.தி.மு.க-வும், தமிழக அரசாங்கமும் இப்போது எட்டு பேரை சுற்றி சுழன்று கொண்டிருக்கின்றன. இதைவிட ஆச்சர்யம், கட்சியிலும் ஆட்சியிலும் அதிரடியாக சில முடிவுகள் எடுக்கப்படுகின்றன; அவை அவசர அவசரமாக நிறைவேற்றவும் படுகின்றன.    

அ.தி.மு.க-வை நன்கு அறிந்தவர்களுக்குத்தான் தெரியும், இதற்குள் ஒளிந்திருக்கும் புதிரின் சிக்கல். உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமானால், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா மூன்று மாதங்களாக தன்னைத்தானே வீட்டுச் சிறையில் அடைத்துக் கொண்டார். அந்த வழக்கில் இருந்து விடுதலையாகும் வரை அவர் வெளியில் வரவில்லை. அந்த நேரத்தில், இப்போதுபோல், எந்தத் திட்டத்தையும் அமைச்சர்கள் அறிவிக்கவில்லை; அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தவில்லை; செயல்படுத்திய திட்டங்களை முழுமையாக முடிக்கவில்லை. எல்லாவற்றையும் கிடப்பில்போட்டு, ‘அம்மா வரட்டும்!’ என்று காத்திருந்தனர். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. இப்போது, அ.தி.மு.க என்ற கட்சியையும் அரசாங்கத்தையும் பின்னால் இருந்து பரபரப்பாக இயக்கும் சக்திகளாக சசிகலா,  ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகனராவ், சசிகலாவின் தம்பி திவாகரன், சசிகலாவின் அண்ணி இளவரசி, அவரது மகன் விவேக் ஜெயராமன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருக்கின்றனர். இவர்களில் சிலரின் வாரிசுகளும் திரைமறைவில் களத்தில் நிற்கின்றனர்.  

சசிகலா கடந்த 30 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் நிழலாகத் தொடர்பவர் சசிகலா.  ஜெயலலிதாவின் அன்றாட செயல்பாடுகள் அனைத்திலும் சசிகலா இருப்பார். பல சமயங்களில், ஜெயலலிதாவின் துன்பங்களுக்கே சசிகலாதான் காரணமாக இருப்பார்.  தற்போது,  ஜெயலலிதா  மருத்துவமனையில் செயற்கை சுவாசத்தில் இருக்கிற நிலையில், அ.தி.மு.க என்ற கட்சியை தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறார் சசிகலா. அதேபோல், தமிழக அரசையும் வழிநடத்துகிறார். அரசின் மிக முக்கிய அதிகாரிகளைத் தன் விரல் நுனியில் ஆட்டிப்படைக்கிறார். சசிகலாவின் சம்மதம் இல்லாமல், ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையைக்கூட அப்போலோவால் ரிலீஸ் செய்யமுடிவதில்லை. அந்தளவுக்கு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் குழுவை கன்ட்ரோலில் வைத்துள்ளார் சசிகலா.  

முதல்வர் ஜெயலலிதாவின் இலாகாக்கள்,   ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதற்குக் காரணம் மத்திய அரசுதான். அது சசிகலாவின் விருப்பத்துக்கு எதிராக நடந்தது என்றுகூட தகவல்கள் வந்தன. சசிகலா பயன்படுத்தும் ‘ரப்பர் ஸ்டாம்ப்’ ஆக பன்னீர்செல்வம் இருப்பார் என்கிற உத்தரவாதத்துக்குப் பிறகுதான், அதுவும்கூட நடந்தது.  தற்போது, ‘வெள்ளை வேஷ்டி - வெள்ளைச் சட்டை’ அணிந்த இளைஞர்கள் படை ஒன்று சசிகலாவைச் சுற்றி எப்போதும் இருக்கிறது. இந்தப் படை சசிகலாவுக்காக மன்னார்குடி தரப்பு அனுப்பியதாகப் பேசிக்கொள்கிறார்கள். இவர்கள்தான் தலைமைக் கழகத்துக்கும், தலைமைச் செயலகத்துக்கும் சசிகலாவுக்கும் இடையில் ‘கூரியர் சர்வீஸ்’ போல செயல்பட்டு தகவல்களைக் கொண்டு சேர்க்கின்றனர். தலைமைச் செயலகத்தில் இருந்து கோப்புகளை வாங்கி வருகின்றனர். சசிகலா சம்மதம் சொன்னபிறகு அந்தக் கோப்புகளை கூரியர் பாய்ஸ்தான், தலைமைச் செயலகத்துக்கு கொண்டு போய்ச் சேர்க்கின்றனர். 

தற்போது, தமிழக அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளே, சசிகலா குடும்ப நலனை முன்னிறுத்தியே எடுக்கப்படுகின்றன என்கின்றனர் விவரமறிந்தவர்கள். தற்போது தமிழக அரசு அவசர அவசரமாக இரண்டு திட்டங்களில் இணையப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஒன்று உதய் திட்டம், மற்றொன்று உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுதல். இந்த இரண்டு திட்டங்களிலும் இணையாமல் கடைசிவரை ஜெயலலிதா பிடிவாதமாக இருந்தார். ஆனால், தற்போது ஜெயலலிதா செயற்கை சுவாசத்தில் இருக்கும் நிலையில், மத்திய அரசு,  சசிகலா மூலம் ஓ.பன்னீர்செல்வத்தைப் பகடைக் காயாக்கி அந்தத் திட்டங்களை சாதித்துக்கொள்ளப் பார்க்கிறது. அதற்கு மறுத்த நேரத்தில், சில சட்டச் சிக்கல்களை சசிகலாவுக்கு உண்டாக்கப்போவதாக மத்தியில் இருந்து  மிரட்டல்களும் வந்ததாம். அதன் விளைவாகவே, சசிகலா அதற்கு அசைந்து கொடுத்துள்ளார். இதையடுத்து, சசிகலாவின் உத்தரவின் பேரில், இந்த இரண்டு திட்டங்களும் அவசர அவசரமாக சில நிபந்தனைகளின் பேரில் நிறைவேற்றப்படும் நிலையில் உள்ளன. ஆக, ஜெயலலிதா இல்லாத இடத்தில், சசிகலாவின் வார்த்தைகள்தான் இப்போது செல்லுபடியாகின்றன.

அப்போலோவில் அம்மா... எட்டு பேர் கையில் ஆட்சி!

ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன்

‘அதிகாரத்தோடு இரு; அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களோடு நெருக்கமாக இரு’ என்பதுதான் அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணனின் தாரக மந்திரம். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஷீலா பாலகிருஷ்ணன். 1976-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ்.அதிகாரி. இவருடைய கணவர் பாலகிருஷ்ணனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவரின் ஒரே ஸோர்ஸ்... சென்னை மாநகர போலீஸின் உயர் அதிகாரி ஒருவர்தான். அவரை அந்த இடத்தில் உட்கார வைத்தவரே ஷீலா பாலகிருஷ்ணன்தான். அதற்குக் காரணம், தனக்கு வரும் தகவல்களை அந்த போலீஸ் அதிகாரி மூலம் கிராஸ் செக் செய்துகொள்வார்.  தற்போது அரசுத் துறை தொடர்பான விஷயங்களில் சசிகலாவுக்கு ஆலோசனைகள் சொல்வதும்,  சசிகலா சொல்வதை உயர் அதிகாரிகளுக்கு சொல்வதும் ஷீலா பாலகிருஷ்ணன்தான். அப்போலோவில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் சொல்லும் திட்டங்கள் - நடவடிக்கைகளைத்தான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் செயல்படுத்துகிறார். ஷீலா பாலகிருஷ்ணனுக்கு தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள் பற்றிய விவரங்கள் அத்துப்படி. தற்போது ஜெயலலிதா செயற்கை சுவாசத்தில் உள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் அவை தொடர்பான விவகாரங்களை ஷீலா பாலகிருஷ்ணனை வைத்துத்தான் சசிகலா சமாளிக்கிறார்.

ஷீலா பாலகிருஷ்ணனுக்கு அடுத்து வெங்கட்ரமணன் முக்கிய ரோல் வகிக்கிறார்.  முதல்வரின் செயலாளர்களில் இவரும் ஒருவர்.  1987-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரி. ‘ஜெயலலிதா விசுவாசம்’ என்ற வார்த்தைக்கு வெங்கட் ரமணன் பெயரை அதிகாரிகளின் அகராதியில் பொறிக்கலாம்.  ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பிடிக்க அந்தத் தகுதியைத் தவிர வேறு என்ன வேண்டும்? ஜெயலலிதா நலமுடன் இருந்தபோது, கட்சி மாவட்டச் செயலாளர்கள், மந்திரிகளை கண்காணித்து அறிக்கை கொடுத்து வந்தார். ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெங்கு இருக்கின்றன. எந்தச் சொத்துக்கள் யார் பெயர்களில் இருக்கின்றன போன்ற விவரங்கள் எல்லாம் வெங்கட்ரமணனுக்குத்தான் அத்துப்படி. அதனால், சசிகலா இவரை தனது கண் பார்வையிலேயே வைத் துள்ளார். ஷீலா பாலகிருஷ்ணனிடம் ஆலோசனை கேட்பதுபோல், ஒவ்வொரு விஷயத்திலும் வெங்கட் ரமணனையும் ஆலோசிக்கிறார் சசிகலா.

தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ்

‘என் வழி தனிவழி’ என்பதுதான் தமிழக அரசின் தலைமைச் செயலாளரான ராமமோகன ராவ் ஸ்டைல். ஆந்திராவைச் சேர்ந்த ராமமோகன ராவ் 1957-ம் ஆண்டு பிறந்தவர். 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பேட்ச். முந்தைய அ.தி.மு.க ஆட்சிகளில் செல்வாக்கு இல்லாத பதவிகளில் இருந்தவர். தி.மு.க ஆட்சியில் முக்கியமான துறைகளைக் கையில் வைத்திருந்தவர். மீண்டும், ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்த பிறகு ராமமோகன ராவை தனது செயலாளர்களில் ஒருவராக நியமித்தார். முதல்வரின் முதல் நிலை செயலாளர் என்கிற அந்தஸ்தும் வந்து சேர்ந்தது. ஆனால், முதல்வர் அலுவலகத்தில் இருந்த  இன்னொரு கோஷ்டியான ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன் அணிக்கு ராமமோகன ராவ் வேண்டாதவர். இவரை முதல்வர் அலுவலக கேபினில் வைத்துக்கொள்வது சரியல்ல என்று முடிவெடுத்த அவர்கள், சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தனர். அந்த நேரத்தில், தலைமைச் செயலாளர் பதவி காலியானது. அதை சாக்காக வைத்து, முதல்வர் ஜெயலலிதாவிடம் சொல்லி ராமமோகன ராவை முதல்வர் அலுவலகத்தில் இருந்து மாற்றி, தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு கொண்டுபோனார்கள். முதல்வர் இலாகாக்கள் ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதற்குக் காரணம், ராமமோகன ராவ்தான் என்று பன்னீரின் அனுதாபிகள் நம்புகிறார்கள். கவர்னர், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா என மூவரிடமும் ஆளுக்குத் தகுந்தாற்போல எந்த விஷயமானாலும் பேசி சம்மதிக்க வைப்பதில் கைதேர்ந்த அனுபவம் மிக்கவர். தற்போது, மத்திய அரசுக்கும் மன்னார்குடி குடும்பத்துக்கும் பாலமாக இருந்து இவர்தான் பல விவகாரங்களை நடத்திக் கொடுக்கிறார். ஜெயலலிதா நலமுடன் இருந்தபோது, பிடிவாதமாக ஒதுக்கித் தள்ளிய சில மத்திய அரசின் திட்டங்களை தற்போது தமிழக அரசு நிறைவேற்றித் தர தயாராகிவிட்டது என்றால், அது ராமமோகனரா வின் கைங்கர்யம்தான். அதுபோல, கவர்னர் வித்யாசாகர் ராவ் கொடுக்கும் பிரஷர்களை சமாளித்து, ஜெயலலிதா அரசாங்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் ராமமோகன ராவ். இவர் எந்த நேரத்தில் அழைத்தாலும், அடுத்த நொடியில் ஓடிவந்து ஆஜராகிறார் ஓ.பன்னீர் செல்வம். ஆந்திராவைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இவர் ஆசியில் தமிழகத்தில் வலம் வருவதை தலைமைச் செயலகத்திலுள்ள உயர் அதிகாரிகள் சிலர் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து வருகிறார்கள்.

அப்போலோவில் அம்மா... எட்டு பேர் கையில் ஆட்சி!

திவாகரன், ஜெயானந்த் திவாகரன், தேவா

சசிகலாவின் சகோதரர் திவாகரன்.  ஜெயலலிதாவால் போயஸ் கார்டனில் இருந்து 1990-க்கு முன்பே துரத்தி அடிக்கப்பட்டவர். அதன்பிறகு, இப்போதுதான் கார்டன் பக்கம் இவரது காற்று அடிக்கிறது. தற்போது திவாகரனுக்கு வலதுகரமாக இருக்கிறார் அவருடைய மகன் ஜெயானந்த். மன்னார்குடி குடும்பத்தில் சசிகலாவைப்போன்று ஒரு அதிகார மையமாக மாறத் துடிக்கும் ஜெயானந்த், அப்போலோவில் வலம் வருகிறார். இவரை இயக்கும் ரிமோட், திவாகரன் கையில் இருக்கிறது.  

இவருடைய ஃபேஸ்புக் பதிவுகள் சிலவற்றைப் பார்த்தாலே, இவரின் பவரைத் தெரிந்துகொள்ளலாம். சசிகலா புஷ்பாவின் பேட்டியை மேற்கோள்காட்டி, ‘ஜோக் ஆஃப் புஷ்பா’ என்று கிண்டலடித்திருந்தார். ஜெயலலிதாவின் பழைய பேட்டி ஒன்றை மேற்கோள்காட்டி, ‘சசிகலாவை தனது தாய் என்று முதல்வரே சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகளே எங்களுடைய ஆன்மாவை அவருக்கு அர்ப்பணித்த தற்கு போதும்’ என்றும் ஜெயானந்த் பதிவு செய்திருந்தார். திவாகரனுக்கு ஜெயானந்த் போல, ஜெயானந்துக்கு அவரின் நண்பர் தேவா வலதுகரமாக இருக்கிறார். ஏனென்றால், ஜெயலலிதா அப்போலோவுக்குப் போன சில நாள்களில் திவாகரனின் நடமாட்டம் இருந்தது. ஆனால், அதன்பிறகு பத்திரிகைகளில் செய்திகள் வந்ததும் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும், அப்போலோ டாக்டர்கள் குழுவில் இருந்த திவாகரனின் மகள் ராஜமாதங்கி, மருமகன் விக்ரமும் இப்போது அப்போலோவில் அதிகம் தென்படுவதில்லை. அதனால், முதலமைச்சரின் உடல்நிலை, கட்சிக்குள் நடக்கும் விஷயங்களைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள ஜெயானந்த் பிரயத்தனப்படுகிறார். 

அதற்கு அவர் அனுப்பியுள்ள நபர் தேவா. ராமநாதபுர மாவட்டத்துக்காரர். இவரும், ஜெயானந்த்தும் அப்போலோ வில் நடத்தும் ‘உள்ளே வெளியே’ ஆட்டத்தால் அரண்டுபோய் கிடக்கின்றனர் அ.தி.மு.க-வின் சீனியர்கள். 

தேவா தற்போது, அ.தி.மு.க-வின் தென்சென்னை வடக்கு மாவட்டத்தில், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளராக இருக்கிறார். சென்னை மாநகராட்சிக்குப் போட்டியிடும் அ.தி.மு.க கவுன்சிலர்கள் பட்டியலிலும் இவரின் பெயர் இருந்தது. சசிகலாவின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லித் திரிகிறார்கள். முன்னாள் தி.மு.க அமைச் சரின் பினாமி இவர் என்று ஒரு தகவல் இருந்தது. அதனால், கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புப் பறிபோனது. ஆனால், அதை உடைத்து ஏறத்தாழ, சசிகலா குடும்ப வட்டத்துக்குள் வந்துவிட்டார்.

அப்போலோவில் அம்மா... எட்டு பேர் கையில் ஆட்சி!

இளவரசி, அவரது மகன் விவேக் ஜெயராமன்

அப்போலோ மருத்துவமனையில், சசிகலாவைப் போல், எப்போதும் உடன் இருக்கும் இன்னொரு அதிகாரம் படைத்த நபர் இளவரசி. அவருடைய மகன் விவேக் ஜெயராமன். ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்து சில மாதங்களுக்கு முன்பு விவேக் விலக்கி வைக்கப்பட்டார். இருந்தாலும்கூட அப்போலோவில் அடிக்கடி வலம் வருகிறார். இளவரசியின் மகனான இவரது மேற்பார்வையில் தான் போயஸ் கார்டனின் பிஸினஸ் விவகாரங்கள் எல்லாம் நடக்கின்றன. இவர்  திருமணத்துக்கே ஜெயலலிதா செல்லவில்லை. ஜெயலலிதாவுக்கு உடல்நிலை மோசமான நேரத்தில், ஹனிமூன் ட்ரிப்பில் வெளிநாட்டில் இருந்தார் விவேக். அங்கிருந்து சென்னை திரும்பி யவரின் கார், அப்போலோ மருத்துவமனைக்குள் சாதாரணமாகப் போய் வந்தது.  இந்தோனேஷியாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள், சிங்கப்பூர், மலேஷியா மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள வியாபாரத் தொடர்புகளை விவேக் ஜெயராமன் கவனிக்கிறாரா? என்றெல்லாம் மத்திய உளவுத்துறை யினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளது வேறு விஷயம். 

இந்த அதிகார மையங்களைக் கடந்த மிச்ச அதிகாரங்கள்தான் ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும். பன்னீர், கட்சி ரீதியாக செய்ய வேண்டியதை சசிகலாவிடம் கேட்டுச் செய்கிறார். பன்னீரை பிடிக்காதவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்குகிறார். முக்குலத்தோர்- கவுண்டர் மோதலை சமாளிக்க இவர்கள் இருவரையும் பயன்படுத்துகிறது அதிகார மையம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.