News
Loading...

தங்கத்திற்கு மாற்று லூமினக்ஸ் யூனோ?

தங்கத்திற்கு மாற்று லூமினக்ஸ் யூனோ?

இந்தியப் பெண்களின் வாழ்க்கையில் தங்கம் முக்கியப் பங்காகவே மாறிவிட்டது. நாளுக்கு நாள் ஏறிவரும் சவரன் விலையால், நடுத்தர மக்களுக்குக் கூட தங்கம் ஒரு கனவாகவே போய்விடும் போலிருக்கிறது. இந்நிலையை மாற்ற மார்க்கெட்டிற்கு வந்துவிட்டது தங்கத்திற்கு மாற்று உலோகமான ‘லூமினக்ஸ் யூனோ’. லைட் வெயிட் கோல்டு வாங்கும் விலையில் செம ஸ்டைலீஷான லூமினக்ஸ் யூனோ ஆபரணங்கள் வாங்கிவிட முடியும்.

‘‘அதென்ன ‘லூமினக்ஸ் யூனோ’?’’ என விசாரித்தால் தகவல்கள் வியக்க வைக்கின்றன. சர்வதேச நகைக் கூட்டமைப்பான ‘லீடிங் ஜுவல்லர்ஸ் ஆப் தி வேர்ல்டு’ இப்படி ஒரு மாற்று உலோகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மின்னுவதெல்லாம் பொன்னல்லதான். ஆனால், லூமினக்ஸ் ஆபரணங்கள் பொன்னைப் போல் ஜொலி ஜொலிக்கின்றன. இது தங்கத்திற்கு மாற்று உலோகம்தான் என்றாலும் கூட இந்த உலோகத்தில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், பலேடியம் ஆகிய உலோகக் கலவை இருக்கிறது. 

ஒரு கிராம் தங்கத்தின் விலையே மூவாயிரத்தைத் தொடுகிறது. ஆனால் 10 கிராம் லூமினக்ஸ் யூனோவின் விலை 1,250 ரூபாய் மட்டுமே என்கிறார்கள். ‘‘இந்த ஆபரணத்தின் முதன்மை நிறம் வெள்ளை என்றாலும், தங்கத்தைப் போன்றும், ரோஸ் கோல்டு போன்றும் வடிவமைத்துள்ளனர். இன்னும் பரபரப்பு விற்பனை அடையாத இந்த உலோகம் தற்போது கோல்ட் பிஸ்கட்கள் போல கட்டிகளாகவும், நாணயங்களாகவும் மட்டுமே பெருமளவில் கிடைக்கிறது. 

வட இந்திய நகைக் கடைகள் சிலவற்றில் இந்த உலோகம் கம்மல், வளையல், நெக்லஸ் என வெரைட்டியான ஆபரணங்களாகவும் விற்பனைக்கு வந்துவிட்டது’’ என்கிறார் இந்தத் துறையில் உள்ள வல்லுநர் ஒருவர். ‘‘நான்கு உலோகங்களின் கலவை என்பதால் நீண்ட நாட்களுக்கு இதன் ஷைனிங் போகாது’’ என பேச ஆரம்பிக்கிறார் சர்வதேச நகை கூட்டமைப்பின் இயக்குநர் சஞ்சீவ் அகர்வால்.

‘‘இது மதிப்புமிக்க ஆபரண உலோகங்களுக்கு மாற்றான ஒரு கண்டுபிடிப்பு. தங்கம் விலை தொடர்ந்து உயர்வதால், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை லூமினக்ஸில் செலுத்தி பயனடையலாம்’’ என்கிறார். பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் பேசினால், ‘‘தங்கத்தில் முதலீடு என்பதே அதற்கு சமூக அங்கீகாரம் இருப்பதால்தான். அந்தச் சமூக அங்கீகாரமும் கால ஓட்டத்தில் கிடைத்தது. 

காரணம், அரிய வகையில் கிடைப்பதாலும், எளிதில் உற்பத்தி செய்ய முடியாது என்பதாலும்தான் இந்த அங்கீகாரம். அதே அங்கீகாரம் இந்த உலோகத்திற்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது’’ என்கிறார் சிரித்துக்கொண்டே! சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் சாந்தகுமாரிடம் பேசினோம். ‘‘தங்கத்துக்குனு தனி மவுசு இருக்கு. பொதுவா, தங்கத்தின் குணாதிசயத்தை ஒத்து இருந்தாதான் லூமினக்ஸைக் கொண்டாட முடியும். 

ஆனா, லூமினக்ஸ் யூனோனு சொல்ற இந்த உலோகம் கவரிங் மாதிரியான ஒரு வகை டைப்தான். இதுக்கு ரீசேல் வேல்யூ கிடையாது. ரீசேல் மதிப்பில்லாத பொருள் பெரிசா சந்தையில நிற்காது. இதை, ஒரு வியாபாரத்துக்காகக் கொண்டு வந்திருக்காங்க. அழகுக்காக வேணா மக்கள் வாங்கி யூஸ் பண்ணலாம்’’ என்கிறார் அவர். ‘‘எல்லாம் சரி. நம்மூருக்கு வரட்டும். அப்புறம் மெச்சலாம்’’ என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.