News
Loading...

எம்.எல்.ஏ மகனுக்கு ஒரு நீதி... ஏழைக்கு ஒரு நீதியா?

எம்.எல்.ஏ மகனுக்கு ஒரு நீதி... ஏழைக்கு ஒரு நீதியா?

ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் மைனர் மகன் ஓட்டிச்சென்ற பைக் மோதி விபத்துக்குள்ளான விவகாரம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த வடக்குசாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞர் அக்டோபர்  24-ம் தேதி பைக்கில் மண்ணச்சநல்லூர் சென்றுள்ளார். அய்யம்​பாளையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, இவரது பைக் மீது ஹோண்டா ஆக்டிவா ஒன்று பயங்கரமாக மோதியது. ராஜேஷுக்கு பலத்த அடி ஏற்பட்டது. 

விபத்தை ஏற்படுத்திய அந்த ஹோண்டா ஆக்டிவாவில் இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் இருவரும், பள்ளிச் சீருடையில் இருந்த மாணவர்கள். கீழே விழுந்ததில் இவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.இரு தரப்பும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். 
ராஜேஷிடம் பேசினோம்.

“ரோட்டை கிராஸ் பண்றதுக்கு, இண்டிகேட்டர் போட்டுட்டு, வண்டியைத் திரும்பப்போனேன். அப்போ, பின்னால வந்த பசங்க, என் வண்டி மேல வேகமாக மோதிட்டாங்க. அந்த வண்டியில் வந்தவங்க மண்ணச்சநல்லூர் எம்.எல்.ஏ-வோட மகன்கள். என்னால எழுந்திருக்கவே முடியல. ‘கண்ணுல பூச்சி விழுந்துடுச்சி. அதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியல’னு அந்தப் பையன் சொன்னான். காயமடைந்த எங்களை, மண்ணச்சநல்லூர் கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப்போனாங்க. எனக்குதான் அதிகமான காயம். ஆனா, என்னை விட்டுட்டு எம்.எல்.ஏ மகன்களையே அதிகமா கவனிச்சாங்க. அப்புறம், அந்தப் பையன்களை எம்.எல்.ஏ ஆளுங்க கூட்டிட்டுப் போயிட்டாங்க. எனக்கு காயம் அதிகமாக இருந்ததால, திருச்சி அரசு மருத்துவமனைக்கு என்னை அனுப்பினாங்க.

அன்னைக்கு நல்லா வைத்தியம் பார்த்தாங்க. என்ன நடந்ததுன்னே தெரியல, மறுநாள் காலை 5 மணிக்கு, ‘உனக்கு எல்லாம் சரியாகிடுச்சு. நீ வீட்டுக்குப் போகலாம்’னு டாக்டர்கள் சொன்னாங்க. ‘என்னால் நடக்கவே முடியல, இந்த நிலையில என்னைப் போகச் சொல்றீங்களே’னு கேட்டேன். என்னை வலுக்கட்டா யமாக அனுப்பிட்டாங்க. எனக்குச் சிகிச்சை கொடுத்த சீட்டு, மருந்து மாத்திரை என எதுவும் தரல.

வீட்டுக்கு வந்தப்புறம் வலி தாங்காமத் துடிச்சேன். இந்த நிலையில, ‘வழக்கை வாபஸ் வாங்கு’னு எம்.எல்.ஏ ஆட்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சாங்க.. என்னால நடக்கவே முடியல. இதை யாரும் கண்டுக்கல. ஆனா, அவங்களை காப்பாத்துறதுக்குத் துடிக்கிறாங்க. எனக்கோ, எங்க குடும்பத்துக்கோ ஏதாவது நடந்தால் அதுக்கு எம்.எல்.ஏ-தான் பொறுப்பு” என்று வேதனையுடன் சொன்னார் ராஜேஷ்.


ராஜேஷின் தாயார் கமலம், “ஆஸபத்திரியில இருந்து வந்ததும், எங்க வீட்டுக்கு வந்த போலீஸ்காரங்க, வெத்துப் பேப்பரில கையெழுத்து வாங்கிக்கிட்டு, ‘அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக சொல்லுங்க’னு சொல்லிட்டுப் போனாங்க. எம்.எல்.ஏ-வும், அவங்க ஆளுங்களும், ‘வழக்கை வாபஸ் வாங்குங்க. செலவை ஏத்துக்கிறோம்’னு சொன்னாங்க.  நாங்க ஒத்துக்கல. காசு, பணம் இருக்குற எம்.எல்.ஏ மகனுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதியா? எம்.எல்.ஏ மகனுக்கு 13 வயசுதான் ஆகுது. அந்தப் பையன் பைக்  ஓட்டிவந்து மோதியிருக்கான். அதை, அரசாங்க டாக்டர்களும், போலீஸ்காரங்களும் மூடிமறைக்கப் பார்க்குறாங்க. இப்போ ராஜேஷ் மேலயே  கேஸ் போட்டிருக்காங்களாம்” என்றார் அப்பாவியாக..

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அலாவுதீன், “ராஜேஷ் கொடுத்த புகாரின்படி வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர் சொன்னபடிதான் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகுதான் மோதியது யார் என்பது தெரியவரும்” என்றார்.

எம்.எல்.ஏ பரமேஸ்வரி, “பையன்கள் அந்த வழியே போனபோது, முன்னாடிப்போன அந்தப் பையன், இண்டிக்கேட்டர் போடாமல் திரும்பியதால் பைக் மோதியிருக்கு. இருவருக்கும் காயம். பையன்களுக்கு மருத்துவமனையில் காட்டி தையல் போட்டிருக்கு. நாங்கள் யாரையும் மிரட்டல. அந்தப் பையனுக்கு லைசென்ஸ் இல்லையாம். அந்தப் பையன்தான் பிரச்னையை முடிச்சிக்கலாம்னு பேசினார். எங்கள் மீது தவறு இல்லை” என்றவரிடம், “13 வயது சிறுவர்கள் பைக் ஓட்டியது தவறில்லையா?” என நாம் கேட்டவுடன், “அதை, தவறு இல்லைன்னு யாருங்க சொன்னா?” என்றபடி போன் இணைப்பைத் துண்டித்தார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.