News
Loading...

முதலில் லோக்பால் கொண்டு வாங்க மோடி ஜீ..!

முதலில் லோக்பால் கொண்டு வாங்க மோடி ஜீ..!

புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துவிட்டு, புது 500, 2000 ரூபாய் தாள்களை கொண்டு வருவதன் மூலம் கறுப்பு - கள்ளப் பணத்தை ஒழித்துவிடலாம், பொருளாதாரத்தை மேம்படுத்திவிடலாம்’ என்பதுதான் மத்திய அரசின் வாதம்; மகிழ்ச்சி!

பதுக்கப்பட்டிருக்கிற பணம் வெளியே வர வேண்டும் என்பதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், கறுப்புப் பணத்தை ஒழிக்க இது மட்டும்தான் வழியா? முறைகேடாக சம்பாதித்ததைப் பணமாகப் பதுக்கி இருப்பவர்கள், இந்தியாவில் மிகவும் குறைவு. நிலமாக, தங்கமாக, பினாமி பெயர்களில் பதுக்கி இருப்பவர்கள்தான் அதிகம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். சரி ஒரு வாதத்துக்கு இது சரியென்று வைத்துக் கொண்டாலும், நாளை புது 2,000 ரூபாய் தாள்களாகப் பதுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ‘கறுப்புப் பணத்தை முழுவதுமாக ஒழிக்க மத்திய அரசு விரும்பினால் அது முதலில், கொண்டு வர வேண்டியது ஜன் லோக் பால் மசோதாவைத்தான்’ என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். 

“இந்தியா இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே தாராளமய பொருளாதாரக் கொள்கையைத் தழுவிக் கொண்டது. இந்தப் பொருளாதாரக் கொள்கையில், லஞ்சமும், ஊழலும் ‘லாபி’ என்ற சொல்லுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. பெரும் நிறுவனங்கள் ஒப்பந்தங்களைப் பெற, லஞ்சம் அளிப்பதற்காகவே நிதி ஒதுக்குகிறார்கள். இதை lobbying என்கிறார்கள். பெரும் நிறுவனங்கள் மட்டும் அல்ல, சாமான்யன் லஞ்சம் கொடுப்பது குறித்தும் எந்தக் கவலையும் இல்லை. கடந்த ஆண்டில் மட்டும் 43 சதவீதம் இந்தியர்கள் லஞ்சம் கொடுத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. உண்மை நிலை இப்படியிருக்க 500, 1000 ரூபாய் தாள்களை திரும்பப் பெறுவதால் மட்டும் கறுப்பு பணம் ஒழியுமா?” என்கிறார் செயற்பாட்டாளர் க.அருணபாரதி.

“உண்மையில் அரசு, கறுப்புப் பணத்தை ஒழிக்க விரும்பினால், வேர்களில் வேலை செய்ய வேண்டும். வேர்களை செல்லரிக்க விட்டுவிட்டு, கிளைகளில் மட்டும் மருந்து தெளிப்பது எந்தப் பலனையும் நிச்சயம் தராது. ஊழல், லஞ்சமாக பெறப்படும் பணம்தான் இங்கு கறுப்புப் பணமாகப் பதுக்கப்படுகிறது. இவற்றை ஒழிக்க எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்காமல், எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? ஊழலை ஒழிக்க  இப்போது நம்மிடம் இருக்கும் ஆயுதம் ‘ஜன் லோக்பால்’. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது மோடி தன் கம்பீரமான குரலில் சொன்னார், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வலுவான ‘ஜன் லோக்பால்’ மசோதா நிறைவேற்றப்படும். அதன் மூலம், நாட்டில் லஞ்சம், ஊழல் ஒழிக்கப்படும். ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், புகார் தெரிவிக்கப்பட்ட 2 ஆண்டுகளில் கைது செய்யப்படுவார்கள். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்’ என்றெல்லாம் முழங்கினார். ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த மசோதாவை நிறைவேற்ற அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?”   என கேள்வி எழுப்புகிறார் க.அருணபாரதி.

இதே போன்ற கருத்தைத்தான் அறப்போர் இயக்கத்தின் நிறுவனர் ஜெயராமும் முன் வைக்கிறார். “அரசு திட்டமிட்டே ‘ஜன் லோக்பால்’ மசோதாவை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தி வருகிறது. உறுதியான மசோதா நிறைவேற்றப்பட்டால், எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் சொத்துக் கணக்கையும் காட்ட வேண்டும் என்கிறது ஒரு ஷரத்து. இதற்கு பலமான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் நமது எம்.பி-க்கள். உண்மையில் இந்த அரசுக்கு ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எந்த விருப்பமும் இல்லை” என்கிறார்.

முதலில் லோக்பால் கொண்டு வாங்க மோடி ஜீ..!

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ‘வலுவான லோக்பால் கொண்டு வர வேண்டும்’ என அகில இந்திய அளவில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்த அன்னா ஹசாரே இந்த ஆண்டின் துவக்கத்தில், மோடிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘நீங்கள் ஜன் லோக்பாலை கொண்டு வருவதாக கூறினீர்கள், சத்தியம் செய்தீர்கள். மக்கள் உங்களை நம்பினார்கள். வாக்களித்தார்கள். ஆனால், நீங்கள் ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்கள் ஆகப் போகிறது. நீங்கள் உங்கள் சத்தியத்தை மறந்துவிட்டீர்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். 

மறந்து விட்டீர்களா?... சத்தியம் நினைவிலேயே இல்லையா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.