News
Loading...

இந்திய கரன்சியை அச்சடித்ததா பாக்.?

இந்திய கரன்சியை அச்சடித்ததா பாக்.?

இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் வகையில், கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் பாகிஸ்தான் புழக்கத்தில் விடுகிறது என்று சொல்லப்படும் விவகாரமும், 500, 1000 ரூபாய் நோட்டுகளை இந்திய அரசு வாபஸ் பெற்றதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று. கள்ள நோட்டுகளைத் தயாரிப்பது முதல் அதை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுவது வரை பாகிஸ்தான் பக்காவாகச் செயல்படுகிறது என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ), இந்திய உளவுத் துறையான ‘ஐ.பி’, ‘ரா’ உளவு அமைப்புகள், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு, சி.பி.ஐ ஆகியவை ஒருங்கிணைந்து மத்திய அரசிடம் சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தன. அந்த அறிக்கையில், அதிரவைக்கும் பல தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

என்.ஐ.ஏ விசாரணையில் கைப்பற்றப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. பாகிஸ்தானில் அந்த நாட்டு அரசின் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் அதே தாளைக் கொண்டுதான், இந்தியாவின் 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை பாகிஸ்தான் தயாரித்திருப்பது தெரியவந்தது.   ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கப் பயன்படுத்தப்படும் தாளின் ஜி.எஸ்.எம் அடர்த்தி உள்ளிட்ட நுணுக்கங்கள், பாகிஸ்தான் நாட்டு கரன்சியில் பயன்படுத்தப்படும் நுணுக்கங்கள் போன்றவை விசாரணையில் தெரியவந்துள்ளன.

இந்தியாவில் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடும் நபர்களைச் சுற்றிவளைத்துக் கைதுசெய்தும்கூட, புழகத்தில்விடப்படும் கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இதிலிருந்தே, இது இந்தியாவுக்கு வெளியே அதாவது, பாகிஸ்தானில்தான் இத்தகைய கள்ள நோட்டுகள் தயாரிக்கப் படுகின்றன என்பது தெளிவாகிறது. 

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு நிறுவனத்தால் இயக்கப்படும் ஒரு சிண்டிகேட்தான், கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விடுகின்றது. அந்த சிண்டிகேட்டில் இக்பால் கன்னா, சுபா பாய், அஸ்லாம் சவுத்ரி, சேக் சஃபி மற்றும் சிக்கந்தர் ஆகியோர் இருக்கின்றனர். இந்த சிண்டிகேட்டை சேர்ந்தவர்கள் நேரடியாக பாகிஸ்தானில் இருந்து இயங்க மாட்டார்கள். இவர்கள் எல்லோரும் ஐக்கிய அரபு எமிரேட், பங்களாதேஷ், நேபாளம், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, சீனா ஆகிய நாடுகளில் இருந்து இயங்குவார்கள். அங்கிருந்து இந்திய கள்ள நோட்டுகளைப் பல ஏஜென்ட்கள் வழியே இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடுகின்றனர். 

இந்தியாவுக்குள் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட்டதாக, கடத்தல் மன்னன் தாவூத் இப்ராஹிம் குரூப்பைச் சேர்ந்த டி.கம்பெனி ஆட்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். லஷ்கர் இ தொய்பா, அல் பதார், ஹூஜி அமைப்புகளின் தீவிரவாதிகளிடம் இருந்தும் கள்ளநோட்டுக்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. மும்பை தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட டேவிட் ஹேட்லி, தமது இந்தியப் பயணத்தின்போது 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகளைப் பயன்படுத்தியதாக போலீஸார் கண்டு பிடித்துள்ளனர்.

10 லட்சம் இந்திய நோட்டுக்களில் சராசரியாக,  250 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் ரூ.70 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இந்தியாவில் புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்தியாவுக்குள் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதன் மூலம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவு அமைப்புக்கு ஆண்டுதோறும் ரூ.500 கோடி வருமானம் கிடைக்கிறது. 1,000 ரூபாய் நோட்டு ஒன்றைத் தயாரிக்க, 39 ரூபாயை பாகிஸ்தான் செலவிடுகிறது. அதை, ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கிறார்கள். 

அப்துல் கரீம் என்ற லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி, டெல்லி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “கள்ள நோட்டு நெட் ஒர்க்கை இயக்குவது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐதான். இந்த நெட் ஒர்க்கின் மிகப் பெரிய ஏஜென்ட் இக்பால் கன்னா என்பவர்தான். ஐ.எஸ்.ஐ-யிடம் இருந்து பெறப்படும் கள்ள நோட்டுகள் பங்களாதேஷ், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் புழக்கத்தில் விடப்படு கின்றன” என்று சொல்லி யிருக்கிறார். பங்களாதேஷில் 2013-ம் ஆண்டு மார்ச் 30-ல் ஒரு தீவிரவாதக்குழு பிடிபட்டது. அந்தக் குழுவில் இருந்தவர்களிடம் இருந்து ரூ. 1.3 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பிடிபட்டன. 

2006-2013 காலகட்டத்துக்கு இடையே ரூ.62 கோடி மதிப்புள்ள கள்ளநோட்டுகளை வெளிநாடுகளில் இருந்து இந்திய உளவுப்பிரிவான ரா கைப்பற்றி உள்ளது. அரசு மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்தப் பணப்புழக்கத்தில் 0.21 சதவிகித நோட்டுகள் கள்ளநோட்டுகள் என்று கூறப்படுகிறது. இவ்வளவு விஷயங்களையும் கண்டுபிடித்த மத்திய அரசால், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதைத்  தடுத்துநிறுத்த முடியவில்லை. 

பாகிஸ்தான் நடத்தும் இந்தப் பொருளாதார தாக்குதலுக்கு பதிலடிதான் இப்போது மோடி செய்த அதிரடி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.