News
Loading...

கன்டெய்னரில் இருந்தாலும் கடுகு டப்பாவில் இருந்தாலும் அது கறுப்புப் பணம்தான்!

கன்டெய்னரில் இருந்தாலும் கடுகு டப்பாவில் இருந்தாலும் அது கறுப்புப் பணம்தான்!

வங்கிகளின் முன்னால் மக்கள் தவம் கிடக்கும் நிலையில் எதிர்க் கட்சிகளும் மோடியை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதுகுறித்து பி.ஜே.பி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசினோம்.

‘‘கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கை மீது கடும் விமர்சனங்கள் எழுகின்றனவே?’’

‘‘இது நேர்மையான ஒரு பிரதமரால், துணிச்சலாக எடுக்கப்பட்ட முடிவாகும். இது பதுக்கலுக்கும், கள்ள நோட்டுக்கும், லஞ்சத்துக்கும், மக்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வு களுக்கும் ஒரு முடிவு கட்டும். எப்படி 1,000 ரூபாய் செல்லாமல் போய் 100 ரூபாய் மதிப்பு பெற்றிருக்கிறதோ, அதைப்போல் இனிமேல் பதுக்கலாலும், முறையற்ற முயற்சிகளாலும் செல்வந்தர்களாக ஆனவர்கள், வலுவிழந்து போவதற்கும், நேர்மையாக பணம் ஈட்டியவர்கள் வலிமை பெறுவதற்குமான சீரிய முயற்சி இது. அனைவருக்கும் சுகாதாரம், கல்வி, போன்றவை சமமாக கிடைப்பதற்கே இந்த நடவடிக்கை. அதனால், இது அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின்  வாழ்க்கையில் ஒளியேற்றுவதற்கான முயற்சி.’’

‘‘கறுப்புப் பண முதலைகளை குறிவைத்ததில் சாதாரண மக்கள் சிக்கி தவிக்கிறார்களே?’’

‘‘நம் கையில் இருக்கும் பணம், அதே மதிப்பில் நமக்குத் திரும்பக் கிடைக்கும். ஆக கணக்கிலடங்கா பணம் கணக்குக்குள் வந்து கணக்கு காட்டப்படும் கட்டாயத்துக்கு வருவது கவனிக்கத்தக்கது. தேசத்தின் வருங்கால பொருளாதாரத்தை வலுவாக கட்டமைக்க, சின்னச் சின்ன பிரச்னைகளை, சிக்கல்களை இப்போது சந்திக்க வேண்டியிருக்கலாம் என்பது உண்மை. ஆனால், இது நெடு நாளைய பிரச்னைகளுக்கும், சிக்கல்களுக்கும் தீர்வு ஏற்படுத்தும் என்பதால் நாம் அனைவருமே மகிழ்ச்சியடைய வேண்டும். நம் வருங்கால சந்ததியினர் சுகமாக வாழவே இந்த நடவடிக்கை என்பதை மக்கள் இப்போது புரிந்திருக்கிறார்கள். நாளை மிகப் பெரிய நோய் தாக்காமல் இருக்க இன்று போடப்படும் தடுப்பூசியாக இந்த நடவடிக்கையை எடுத்துக்கொள்ள வேண்டும்.’’ 

‘‘பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக பி.ஜே.பி செயல்படுவதாகக் குற்றச்சாட்டுகள் வருகின்றனவே?’’

‘‘பாட்டாளிகளோடுதான் நாங்கள் கூட்டணி வைத்துள்ளோம். பெரும் முதலாளிகளோடு சேர்ந்து, எங்களுக்கு பணத்தை பதுக்கவும் தெரியாது, ஒழித்து வைக்கவும் தெரியாது. யாருக்கு பின்னாலும் இருக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மோடி தலைமையில் ஆட்சி அமைந்தபோது, `பொருளாதார நடவடிக்கையை சீரமைப்போம்’ என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலர் பாதிக்கப்படலாம். அதற்காக வருத்தம் தெரிவிக்கிறோம். அரசின் அறிவிப்புக்கு சில அரசியல்வாதிகள் குமுறுவதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். பெரும் முதலாளிகள், கறுப்பு பணம் வைத்திருப்போர், பதுக்கல்காரர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால், தங்கம் மற்றும் பல்வேறு பொருட்களின் விலைகள் குறையும். பதுக்கல்காரர்கள் தப்பிக்க முடியாது. கள்ளப் பணம் ஒழிந்துவிடும். ஏழைகள் பாதிக்கப்பட மாட்டார்கள்.’’ 

‘‘ ‘ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் வழங்க முடியவில்லை’ என தமிழக அரசு சொல்கிறதே?’’

‘‘இடைத் தேர்தலை முன்னிட்டு அமைச்சர் செல்லூர் ராஜூ இவ்வாறு கூறுகிறார். ஓட்டுக்காக இப்போது நோட்டு பிரச்னையை அ.தி.மு.க அரசு கையில் எடுத்துள்ளது. தமிழக அரசு மூலம் உரிய தகவல் கிடைக்காததால்தான் பயிர்க்காப்பீட்டுத் தொகை கிடைக்குமோ கிடைக்காதோ? என்ற பயத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை கோடிக் கணக்கில் உள்ளது. இவர்கள்தான் விவசாயிகள் மீது திடீர் பாசமழை பொழிகிறார்கள்.’’

‘‘எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று கடும் எதிர்ப்புகளை காட்டுகிறார்களே?’’

‘‘மத்திய அரசுக்கு எதிராக பிரச்னைகளை கிளப்பிவிட ஓர் அணியாக செயல்படுகிறார்கள். இவர்களுக்கு எதிராக பி.ஜே.பி-யிடம் மிகப் பெரிய கூட்டணி உள்ளது. ஆம், கறுப்புப் பணத்தை ஒழிக்க மோடி எடுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பி.ஜே.பி பக்கம் நாட்டு மக்கள் மாபெரும் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.’’

‘‘தமிழக மக்களைப் பிச்சைக்காரர்கள் போல் வரிசையில் மோடி நிற்க வைத்து விட்டார் என்று  குற்றம்சாட்டி உள்ளாரே ஸ்டாலின்?’’

‘‘இலவசங்களை கொடுத்து தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கியது யார்? திராவிட கட்சிகளின் ஓட்டு வங்கி அரசியலால் தமிழகம் தரை தட்டி கிடக்கிறது. இன்று வங்கிகளில் வரிசையாக நின்றாலும் தாங்கள் சம்பாதித்த பணத்தை செலுத்தவும், அதை எடுக்கவும்தான் வரிசையில் நிற்கின்றனர். கள்ள ஓட்டுக்களை தடுக்க கைவிரலில் மை வைப்பதுபோல சட்டத்துக்கு புறம்பாக கள்ளத்தனமாக நோட்டுகளை மாற்றிவிடக்கூடாது என்றுதான் கைவிரலில் மை வைக்கப்படுகிறது. ‘கடுகு டப்பாவில் இருக்கும் சாமான்யனின் பணத்தை எடுத்த மோடி கன்டெய்னர் லாரியில் உள்ள பணத்தை எப்படி எடுக்க போகிறார்’ என ஸ்டாலின் கேட்கிறார். கணக்கில் காட்டாத கறுப்புப் பணம் கடுகு டப்பாவில் இருந்தாலும், கன்டெய்னர் லாரியில் இருந்தாலும் செல்லாது என்பதை ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மோடி எடுத்த அதிரடியால் கன்டெய்னர் லாரியில் இருக்கும் பணம் இன்று சாதாரண மக்கள் வீட்டு கடுகு டப்பாவுக்கும் வரப்போகிறது.’’

மக்களை வதைக்காமல் கறுப்புப் பணம் வெள்ளையானால் சரி!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.