News
Loading...

மொபைல் கேம் தயாரிப்பில், உலக அளவில் அசத்தும் சென்னை இளைஞர்கள்!

மொபைல் கேம் தயாரிப்பில், உலக அளவில் அசத்தும் சென்னை இளைஞர்கள்!

இப்போது இளசுகளை முழுமையாக ஆக்கிரமித்திருப்பது மொபைல் கேம்கள்தான். புதுப்புது மாடல் போன்கள் வருவதுபோல் மொபைல் கேம்களும் எக்கச்சக்கமாக வர ஆரம்பித்துவிட்டன. சமீபத்தில் ஐபோன் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேகமாக ‘Twisty Board’ என்ற கேம் வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சம், இந்த கேமில் வரும் 30 கேரக்டர்களில் ரஜினிகாந்தும் ஒரு கேரக்டராக வருகிறார். 154 நாடுகளில் வெளியான இந்த கேம் ஒரே மாதத்தில் 9 லட்சம் டவுன்லோடுகளைக் கடந்துள்ளது. 

உலக அளவில் ஐபோன் கேம்களின் வரிசையில் டாப் 90ல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த இளைஞரான கிருபா ஷங்கர் மற்றும் அவரது இளம் குழுவினர்தான் இந்த கேமை உருவாக்கியிருக்கிறார்கள். ‘‘2008-ல் ஆரம்பிச்ச பயணம். இப்போ முழுமையா இருக்கற மாதிரி உணர்வு. இதுல பெரிய சந்தோஷமே எங்க கேம் அமெரிக்காவுல கிளாசிக் ஹிட். எனக்கு  13 வயசு இருக்கும். அப்போ இந்த ‘சூப்பர் மரியோ’ வீடியோ கேம் பிரபலம். என்னுடைய கோடைகால விடுமுறைய முழுமையா அந்த கேம் ஆக்கிரமிச்சிடுச்சு.

ஸ்கூலுக்கு போகணும் வாடான்னு அப்பா என்னை இழுத்துட்டுப் போனாரு. அப்போ இந்த வீடியோ கேம், மொபைல் கேம் மேல ஆரம்பிச்ச காதல் இப்போ இங்க வந்து நிறுத்தியிருக்கு. ஆரம்ப காலத்துல எங்க வீட்ல என்னுடைய பெட்ரூம்தான் எனக்கு ஆபீஸ். ஏழு கம்ப்யூட்டர். அந்தக் கம்ப்யூட்டர்கள் சுத்தி இருக்கும் தரையிலதான் படுக்கை. இப்படிதான் ஒவ்வொரு புராஜெக்டா செய்ய ஆரம்பிச்சேன்.

மொபைல் கேம் தயாரிப்பில், உலக அளவில் அசத்தும் சென்னை இளைஞர்கள்!

2009ல அப்படியே என்னுடைய ரூமையே ஆபீஸ் மாதிரி மாத்திக்கிட்டேன். அப்பா, அம்மா, அண்ணா நல்ல சப்போர்ட் பண்ணினாங்க. இதை நான் போராட்டம்னு சொல்ல மாட்டேன். எனக்குத் தேவைப்பட்டுச்சு, என்னுடைய விருப்பம் அது. இப்போ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் இந்த ஆபீஸ். எனக்கு ஆர்டர் கொடுத்தவங்க கூட வீட்டுக்கு வந்து வாங்கிட்டு போவாங்க. 

அப்புறம் அருண் என்கூட இணைஞ்சாரு. அவரு இல்லைன்னா எதுவுமே இல்லை. எனக்கு ஒவ்வொரு கட்டத்துலயும் தூண் மாதிரி இருந்தார்’’ என்று உற்சாகமாகப் பேசுகின்ற கிருபா ஷங்கர் ‘லவ் ஹேண்டில் டெவலப்பர்ஸ்’ என்ற நிறுவனத்தின் நிர்வாகியாக இருக்கிறார் ‘‘மூவாயிரத்து ஐந்நூறுக்கும் மேலான விளையாட்டுகளை உருவாக்கிட்டோம். ட்விஸ்டி போர்டு ஒரு ஆர்கேட் கேம். அமெரிக்கா, சீனா நாடுகள்ல அதிகமா டவுன்லோட் ஆகியிருக்கு. நான் மிகப்பெரிய தலைவர் ரசிகர். அதான் ரஜினி சாரையும் ஒரு கேரக்டரா உள்ள கொண்டு வந்தோம். சூப்பர் ஸ்டாரையும் சேர்த்து மொத்தம் 30 கேரக்டர்கள். 

ஒரு கேம் உருவாக்க தீம் ரெடி செய்துட்டா அடுத்து அத முடிக்கிறவரைக்கும் ஓய மாட்டோம். நேரம் பார்க்காம வேலை செய்வோம். எனக்குக் கிடைச்ச டீம் கூட அப்படி தான். கொஞ்சம் கூட சோர்ந்து உக்கார மாட்டாங்க. அப்படியே ரிலாக்ஸ்னா கூட மத்தவங்க க்ரியேட் பண்ணின கேம் தான் எங்களுக்கு டைம் பாஸ். மொபைலுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. உலகமே மொபைல், கணினியா மாறிடுச்சு. இது சார்ந்த படிப்பு படிக்கிறேன்னு உங்க குழந்தைகள் ஆசைப்பட்டா யோசிக்காம விடுங்க. 

ஆனால் மொபைல் ஆப்ஸ் மேக்கிங், கேம் மேக்கிங்ல முக்கியமான விஷயம் C++, JAVA இந்த ரெண்டுலயும் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கணும். அத மட்டும் மனசுல வெச்சுக்கங்க. நாம இதுக்கு புதுசு. அனுபவம் இல்லையேன்னு யோசிக்காதீங்க. எல்லாமே பயிற்சிதான். அதுலயும் இந்தியாவ இனி அடுத்த தலைமுறை மொபைலும், மொபைல் சார்ந்த தொழில்நுட்பங்களும் தான் ஆக்கிரமிக்கப் போகுது. 

பட்டையக் கிளப்பலாம். இன்னும் இதெல்லாம் எங்களுக்கு பெரிய வெற்றியா தெரியல. சூப்பர் மரியோ, ஆங்ரி பேர்ட்ஸ், கேண்டி க்ரஷ் மாதிரி ஹிட் கொடுக்க முயற்சி செய்துட்டு இருக்கோம். நம்ம அரசர் கால கதைகள், மன்னர் கால கிளாசிக் வெர்ஷன தீமா வெச்சு ‘Clash Of Clans’  ஸ்டைல்ல ஒரு கேம் ரெடி செய்யணும். அதுதான் எதிர்காலத் திட்டம். அதுக்கு முன்னாடி இந்த Twisty Board ஆண்ட்ராய்டு வெர்ஷன்ல நவம்பர் 17 ரிலீஸ் பண்றோம். அது வெற்றி அடையணும். இப்போதைக்கு இதுதான் டார்கெட்.’’ என்றார் நிறைவாக! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.