News
Loading...

பணமுதலைகளுக்கு பிரதமர் கொடுத்த சவுக்கடி! விளாசும் ஹெச்.ராஜா

பணமுதலைகளுக்கு பிரதமர் கொடுத்த சவுக்கடி! விளாசும் ஹெச்.ராஜா

பிரதமர் மோடி அறிவிப்பால் புத்துணர்வு பெற்றுவிட்டது பி.ஜே.பி. ‘நாட்டின் பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை தூக்கி நிறுத்தும்’ என்று பலரும் சொல்லிவர, ‘பி.ஜே.பி-யையும் இந்த அஸ்திரம் தூக்கி நிறுத்தும்’ என்று அந்தக் கட்சியினர் சொல்லி வருகிறார்கள். இதுபற்றி பி.ஜே.பி-யின் தேசிய செயலாளரும், ஆடிட்டருமான ஹெச்.ராஜாவிடம் கேட்டோம்.

‘‘பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை ஒரு ஆடிட்டர் என்ற முறையில் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?”

‘‘வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு இது. இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்க வேண்டும் என நினைத்து கள்ளப்பணம், கறுப்புப் பணம், சிவப்புப் பணம் (தீவிரவாதிகளிடம் உள்ள பணம்) இவற்றை பொருளாதாரச் சிக்கலில் இருந்து நீக்கவேண்டும் என்பதற்காக அரசாங்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. மோடி அரசு ஆட்சிக்கு வந்தபோதே இந்த கள்ளப் பணங்களை  ஒழிப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்தது.இந்த பணங்களை முழுமையாக இந்திய பொருளாதாரத்தில் இருந்து நீக்குவதற்காகத்தான், சிறப்புப் புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்தது. மோடி ஆட்சிக்கு வந்ததும் முதலில் போட்ட கையெழுத்தே இந்தக் குழு அமைப்பதற்குத்தான். அதோடு வறுமைகோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற திட்டத்தை கொண்டு வந்து 22 கோடியே 60 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. அதன் பிறகு  தானாக முன்வந்து கறுப்புப் பணத்துக்கு வரிகட்டலாம்  என்ற அறிவிப்பை கொண்டுவந்தார். அதன் பிறகும் வரிகட்டாதவர்களின் பணத்தை செல்லாத பணமாக மாற்றுவதற்குத்தான் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.”

 ‘‘500, 1000 நோட்டுகளை செல்லாது என்று சொல்லிவிட்டால் கறுப்புப் பணம் ஒழிந்துவிடுமா?”

‘‘நமது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகள் மொத்தம் 16 லட்சம் கோடி. அதில் 85 சதவிகிதம் 500, 1000 நோட்டுகள்தான். இவ்வளவு அதிகமான அளவு புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளைத்தான் பதுக்கவும் முடியும். எனவே, செல்லாத பணத்தைவைத்துக்  கொண்டு அவர்கள் என்ன செய்யமுடியும்? அதே நேரம் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் கையாளப்பட்ட பணம் எவ்வளவு ரூபாயாக இருந்தாலும் அந்தப் பணத்தை  மாற்றி கொள்ளலாம். ஏ.டி.எம்-களில்கூட பணம் எடுக்கலாம். அதாவது, இந்த அறிவிப்பினால் ஏழை எளிய நடுத்தர மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் மொத்தப் பணத்தையும் இழப்பார்கள். இந்த அடிப்படையில் அவர்கள் வைத்துள்ள கறுப்புப் பணம் ஒழிந்துவிடும்.”

‘‘இந்த நடவடிக்கைகள் இந்தியப் பொருளாதாரத்தை நிச்சயம் மேம்படுத்தும் என்று நம்புகிறீர்களா?”

‘‘நிச்சயமாக. மோடியின் நீண்ட கால கனவு இது. கறுப்புப்  பணத்தை ஒழித்த இந்திய பொருளாதாரத் தன்னிறைவைத்தான் அவர் விரும்பினார். இந்த அறிவிப்பால் கண்டிப்பாக இந்தியப் பொருளாதாரம் மேம்படும். ஊழல், லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் யோசிப்பார்கள். அதனால் ஊழல், லஞ்சம் குறைய வாய்ப்பு இருக்கிறது. இன்றைக்கு நடுத்தர மக்கள் வீடுகட்டும் கனவை சிதைப்பதே இடத்தின் விலை அதிகமானதுதான். இனி அதுவும் குறையும். தங்கம் விலைகூட ஒருநாள் மட்டும் ஏறியுள்ளது. அதற்குக் காரணம் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற பைத்தியக்கார நடவடிக்கைதான். அதுவும் மாறிவிடும். பதுக்கல் பணம் வெளியே வந்துவிடும் என்பதால்  விலைவாசியும் குறைவதற்கு வாய்ப்பு கண்டிப்பாக உண்டு.”

‘‘சாமான்யர்களும் பாதிக்கப்படுகிறார்களே?”

‘‘இந்த அறிவிப்பால், கொஞ்சம் பாதிக்க பட்டவர்கள் பயணத்தில் இருந்தவர்கள்தான். அவர்கள் ஒருநாள் பாதிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால், மறுதினமே அனைத்து வங்கிகளிலும் பணம் மாற்றப்பட்டதால் அவர்களும் சிரமத்தில் இருந்து விரைவில் மீண்டுவிடுவார்கள்.”

‘‘ப.சிதம்பரம், ‘மோடியின் அறிவிப்பு கறுப்புப் பணத்தை ஒழிக்குமா?’ என்று சந்தேகம் எழுப்பியுள்ளாரே?”

‘‘சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தவர். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தானாக முன்வந்து வரிசெலுத்தும் முறையை அவரே கொண்டுவந்துள்ளார். அவரே இதைப் பற்றி சந்தேகம் எழுப்பி இருப்பதுதான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதனுடைய  பலன் என்பது வீடுகளில் யார் ஒருவர் பணமாகவே கட்டுகளாகக் கட்டி வைத்துள்ளார்களோ. அந்தப் பணங்கள் எல்லாம் புழக்கத்தில் இருந்து வெளியேறிவிடும். அவர்கள் பதுக்கிவைத்த பணங்கள் இனிமேல் எரியூட்டும் பணிக்குத் தவிர வேறு எதற்கு பயன்படாது. அதில் சிதம்பரம் உள்ளிட்ட யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.”

 ‘‘மோடியின் அறிவிப்பை சில அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்களே?”

‘‘மோடியின் அறிவிப்பு ஒரே நாளில் இந்திய பொருளா தாரத்துக்கு மிகப்பெரிய எழுச்சி தான். காங்கிரஸ் கட்சிக்கு திருடவும் தெரியும், திட்டவும் தெரியும். அதனால்தான் அவர்கள் இந்த அறிவிப்பை முழுமையாக எதிர்க்கவில்லை. மாநிலக் கட்சிகள் இதை எதிர்க்கிறார்கள் என்றால் அவர்களிடம் காசு கூடுதலாக இருக்கிறது என்று அர்த்தம். அந்தப் பதற்றத்தில்தான் அவர்கள் இதை எதிர்க்கிறார்கள். ஆனால், நாட்டு மக்கள் மோடியின் திட்டத்தைக் கொண்டாடுகிறார்கள். மொத்ததில், மோடி சர்க்காரின் இத்தகைய முயற்சி  பணத்தை பெருமளவில் பதுக்கி இருக்கும் பணமுதலைகளுக்கும், கள்ளப்பணத்தை சந்தையில் மாற்றும் பாகிஸ் தானிய தரகர்களுக்கும் சவுக்கடியாக அமைந்துள்ளது.” 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்