News
Loading...

இருபது காதலர்கள்... இருபது ஐபோன்... ஒரு வீடு!

இருபது காதலர்கள்... இருபது ஐபோன்... ஒரு வீடு!

சீனாவின் தென்பகுதியில் அமைந்திருக்கிறது அழகான சென்ஜென் நகரம். வானுயர்ந்த கட்டிடங்களுக்கும், சுரங்கத் தொழிலுக்கும், சுற்றுலாத்தலங்களுக்கும் பெயர்போன அந்த நகரத்தில் வசித்து வருகிறார் ஷியோலி என்ற இளம்பெண். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவரின் தந்தை சுரங்கத்தில் வேலை செய்து வருகிறார். ஷியோலிக்கு புது வீடு வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. 

இன்றைக்கு பலரின் கனவும் அதுவாகத்தான் இருக்கும். வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி, ஹோம் லோன்  வாங்கி, பத்து இருபது வருஷ சேமிப்பைப் போட்டு வீடு  வாங்கியவர்களைத்தான் பார்த்திருப்போம். ஆனால் ஷியோலி   யாருமே நம்பமுடியாத ஒரு செயலைச் செய்து தனது கனவை நிறைவேற்றியுள்ளார். ஷியோலிக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். அதில் இருபது நண்பர்களிடம் லாவகமாகப் பேசி ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு 7s ஐபோனை வாங்கியிருக்கிறார். 

இருபது ஐபோன்கள் சேர்ந்த பிறகு ஒவ்வொன்றாக ஆன்லைனில் விற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 14 லட்ச ரூபாய் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டுதான் நகரத்துக்கு வெளியே ஒரு வீட்டை வாங்கியிருக்கிறார். ஐபோன் 7s விற்பனைக்கு வந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோனை வாங்குவதற்காக கிட்னியை விற்ற கதையைத் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஐபோனை விற்று வீடு வாங்கிய கதை பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

‘எனக்கு ஒரு காதலன் கூட இல்லை. ஆனால் இவருக்கு 20 காதலன்கள். அந்த இருபது காதலன்களிடமிருந்து 20 ஐபோன்களை வாங்கியிருக்கிறார். இந்த வித்தையை எனக்கும் கொஞ்சம் கற்றுக் கொடுங்கள்’ என்று ஒரு பெண் சமூக வலைத்தளத்தில் ஷியோலியை  மெச்சியிருக்கிறார். சிலர் ‘இது பெரும் அவமானகரமான செயல்’ என்று சாடியும் இருக்கின்றனர். 

ஐபோன்களை விற்று  வீடு வாங்கிய கதையைப் பற்றி  தன் தோழியிடம்  சொல்லியிருக்கிறார் ஷியோலி. தோழி தனது பிளாக்கில் எழுதவே, இந்த விஷயம்  சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியிருக்கிறது. அவரின்  உண்மையான பெயர் கூட இன்னும் வெளியில் வரவில்லை. ‘ஷியோலி’ என்பது மாற்றப்பட்ட பெயர்தான். கொஞ்சம் அப்படியும் இப்படியுமாக விஷயத்தை அறிந்துகொண்ட அந்த இருபது ஆண் நண்பர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...