News
Loading...

கான்ஷியஸ்... அன்கான்ஷியஸ்?

கான்ஷியஸ்... அன்கான்ஷியஸ்?

செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அக்டோபர் 22 முடிந்து நவம்பரும் தொடங்கிவிட்டது. ஆனால் ஜெயலலிதா நலம்பெற்று எப்போது அழைத்துவரப்படுவார் என்ற குழப்பம் அ.தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு, ‘‘ஜெயலலிதா நன்கு பேசுகிறார்” என்று அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு பீதியை அதிகப்படுத்தியது. ‘‘நன்கு பேசுகிறார்” என்று மருத்துவமனை இப்போது அறிவிக்கிறது என்றால் இதுவரை அவர் பேசாமல் இருந்தாரா? என்ற கேள்வி கிளம்பி தொண்டர்களை இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது. தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் அங்கீகார விண்ணப்பத்தில் கையெழுத்துப் போடாமல் கைநாட்டு வைத்தார் ஜெயலலிதா. இது அ.தி.மு.க. தொண்டர்களிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் இன்னும் அதிகப்படுத்தியது. ‘‘அம்மா பேசுகிறாரா, உத்தரவுகளைப் போடுகிறாரா, பேசுகிறார் என்றால் தீபாவளி வாழ்த்து ஏன் சொல்லவில்லை?” என்றெல்லாம் சந்தேக ரேகைகள் பலராலும் பரப்பி விடப்படுகின்றன. 

‘‘இரண்டு நாளில் வந்துவிடுவார்” என்று அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். எப்போது வேண்டுமானாலும் சிங்கப்பூருக்கோ, லண்டனுக்கோ அவரை அழைத்துச் செல்ல இருக்கிறார்கள் என்றும் செய்தி பரவி வருகிறது. ‘‘நவம்பர் 15ம் தேதிக்குள் போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். ஆனால் முன்னைப் போல ஆக்டிவாக அவரால் இருக்க முடியாது. முழு ஓய்வில் அப்படியே இருப்பார்” என்று இன்னொரு தரப்பு சொல்ல ஆரம்பித்து உள்ளது. இந்த செய்திகள் அனைத்தும் தொண்டர்களை அதிகமாக குழப்பம் அடைய வைத்துள்ளது.

‘‘லண்டன் கொண்டு வாருங்கள்!”

அப்போலோ மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் உள்ள எம்.டி.சி.சி.யு வார்டில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் கருவிகள் உதவி தேவைப்படுகிறது. கால் மற்றும் கைகள் இயக்கத்துக்கு பிசியோதெரப்பி செய்யப்படுகிறது.  ஜெயலலிதாவின் கழுத்தில் இணைக்கப்பட்டுள்ள செயற்கை  மூச்சுக்குழாயை (tracheostomy) தற்காலிகமாக எடுத்துப் பார்க்கிறார்கள். முழுமையாக அக்கருவி இல்லாமல் அவரால் சில நிமிடங்கள்கூட இயங்க முடியவில்லை என்பதுதான் மருத்துவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நேரங்களில் கான்ஷியஸ் ஆகவும் சில நேரங்களில் அன்கான்ஷியஸ் ஆகவும் மாறிமாறி இருக்கிறார். அதனால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை என்று மருத்துவர்களுக்குள் சொல்லிக் கொள்கிறார்கள்.‘‘என்னால் முடிந்த அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்துவிட்டேன். இதற்கு மேல் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமானால் லண்டனுக்கு வந்தால்தான் செய்ய இயலும்” என்று மருத்துவர் ரிச்சர்டு பியெல் சொல்லிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக!

அப்போலோவுடன் தொடர்பில் உள்ள மருத்தவர்கள் சிலரிடம் பேசியபோது, “ ஜெயலலிதாவுக்கு தேவைப்படும் செயற்கை சுவாசத்திற்கான வென்டிலேட்டர் இணைப்பு நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இயற்கையான சுவாசத்துக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ள வகை செய்யும் வகையில் ஜெயலலிதாவை பழக்கி வருகிறார்கள். தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த மூச்சுக்குழாய் இணைப்பு இன்னும் சில நாட்களுக்கு அப்படியே இருக்கும். நுரையீரல் தொற்றுப் பிரச்னை சரியாகும்போது அதையும் எடுத்துவிடுவார்கள். இதய செயல்பாட்டிற்கான பேஸ்மேக்கர் கருவி உதவி தரப்பட்டுள்ளது” என்கிறார்கள்.

கார்டனா, லண்டனா?

‘‘ஒரு வார காலம்  ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றத்தை கண்காணித்துவிட்டு சில முடிவுகளை எடுக்க நினைக்கிறார்கள். அப்போலோவில் இருந்து நேராக லண்டன் போக சசிகலா தரப்பினர் விரும்பவில்லை. போயஸ்கார்டன் வீட்டில் சில நாட்கள் ஜெயலலிதா தங்கியிருந்தாலே, அவருக்கு மனோபலம் அதிகரிக்கும்; தைரியமாகிவிடுவார் என்பது அவர்களின் தியரி. ஆனால், லண்டன் டாக்டர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போலோவில் இருந்து நேராக லண்டன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரவேண்டும் என்கிறார்கள். இந்த இழுபறியில், அப்போலோ நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட எந்த முடிவையும் எடுக்கவில்லை. ரிச்சர்ட் பியெல், சசிகலா ஆகிய இரண்டு தரப்பின் முடிவை அப்போலோ நிர்வாகம் ஏற்றுக்கொள்ள நினைக்கிறது.  ஜோதிடர்கள் குறித்துக்கொடுத்த தேதிகளான நவம்பர் 14 - 16. இடைப்பட்ட நாட்களில் நள்ளிரவு நேரமாக பார்த்து ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்ய அப்போலோ மருத்துவர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். நவம்பர் 18-ம் தேதி நல்ல நாள் என்று சசிகலா தரப்பினர் நினைக்கிறார்கள் “ என்று சொல்லப்படுகிறது.

சிறுதாவூர் வேண்டாம்!

‘‘சிறுதாவூர் பங்களாவுக்கு ஜெயலலிதாவை அழைத்துச் செல்லப் போவது இல்லை. ஏதாவது மருத்துவ அவசரம் என்றால், அங்கிருந்து  சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து வர ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். ஆனால், போயஸ்கார்டன் வீடு அப்படியில்லை. சில நிமிடங்களிலேயே ஆஸ்பத்திரிக்கும் சென்றுவிடலாம். போயஸ்கார்டனில் ஜெயலலிதா வழக்கமாக தங்கும் முதல்மாடி அறையில் இருந்து தரைத்தளத்திற்கு வர ஏற்கனவே இருந்த பழைய ‘லிஃப்ட்டில் செப்டம்பர் 22-ம் தேதி இரவு ஜெயலலிதாவை அழைத்து வர சிரமப்பட்டார்கள். அதனால், ஆஸ்பத்திரி ஸ்டெச்சரை சுமக்கும் அளவிற்கு விசாலமான நவீன ரக லிஃப்ட் அமைக்கும் வேலை முடியும் தறுவாயில் இருக்கிறது. ஆக, ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவார்” என்றும் சொல்கிறார்கள்.

தீபாவளி அன்று!

தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்பு, சசிகலா அவரது குடும்ப உறுப்பினர்கள், முதல்வர் அலுவலக முக்கிய ஊழியர்கள், மருத்துவமனையின் சில ஊழியர்கள்... இவர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ், டிரஸ்... ஆகியவற்றை தீபாவளி பரிசாக அளித்தாராம். திவாகரன் மகன் ஜெயானந்த் திவாகரன் மட்டும் அவரது மன்னார்குடி வீட்டுக்கு தீபாவளிக்கு போய்விட்டாராம். தீபாவளி நேரத்தில் போயஸ் கார்டன் வீட்டில் வழக்கமாக ஏராளமான ஸ்வீட் பாக்ஸ்களை வாங்கி பரிசாக அங்கிருப்பவர்களுக்கு தருவார்கள்.  இந்தமுறை,  மிகக் குறைவான பாக்ஸ்களை வாங்கினார்களாம். சசிகலாவின் குட்பு-க்ஸ்ஸி-ல் இருப்பவர்களின் வீடுகளுக்கே இந்தமுறை தீபாவளி பார்சல் போனதாம். முன்பெல்லாம்,  ஜெயலலிதாவின் குட்புக்ஸ்ஸி-ல் இருப்பவர்களை நேரில் அழைத்து தீபாவளி பரிசுகளை தருவாராம் சசிகலா. 

தீபக் இருக்கிறார்!

அப்போலோ மருத்துவமனையில் உள்ள இரண்டாவது மாடியில் சசிகலா இருக்கும் அறையில் காணப்படும் நபர் - தீபக். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமன் தற்போது உயிரோடு இல்லை. அவருக்கு ஒரு மகன் - தீபக். மகள் - தீபா. இவரை அப்போலோவில் நுழையவிடவில்லை. ‘‘அத்தையை பார்க்கவிடாமல் தடுக்கிறார்கள்” என்று பேட்டி கொடுத்தார். இவரை தடுப்பது சசிகலா கோஷ்டியினர்தான் என்று தீபா  சொல்லி வருகிறார். இந்த நிலையில், தீபக்கை தனது கஸ்டடியில் சசிகலா தரப்பினர் எடுத்துள்ளார்கள். மன்னார்குடி தரப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை தீபக் எடுப்பார் என்கிறார்கள். “ஜெயலலிதாவின் ரத்த சம்பந்தமான உறவு முறையில் வருகிறவர் தீபக். அவர் உதவி இந்த தரப்புக்கு அதிகம் தேவை” என்கிறார்கள். தீபக் எதை செய்தாலும், சட்டரீதியாக எதிர்ப்பு தெரிவிக்க தீபா ரெடியாக இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது!

இரண்டாவது மாடி.. 

மூன்று ‘பவர் ஏஜென்ட்டுகள்’கள் நடமாட்டம்!

ஒருவர் - ‘மெடிக்கல்’ அடைமொழி கொண்டவர். வழுக்குத்தலை... குறுந்தாடி சகிதம் திரியும் இவர் தமிழக  அமைச்சரின் உதவியாளர் என்று சொல்லிக்கொள்வார். அப்போலோவுக்கு வரும் வி.ஐ.பி-கள் இவருக்கு சலாம் போடாமல் போவதில்லை. இவரின் ‘பாஸ்’ தஞ்சாவூரில் இருக்கிறாராம். போயஸ் கார்டனின் நேரடி நியமனம் என்று அமைச்சர்கள் பலரும் இவரை நினைத்துக்கொள்கிறார்கள். ஜெயானந்த் திவகாரனுக்கு இந்த மெடிக்கல் பிரமுகர் நெருக்கமாம். 

இரண்டாவது ஏஜென்ட்... விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்து மற்றும் முஸ்லிம் பெயர்களால் அழைக்கப்படுபவர். சைக்காலஜியுடன் கூடிய சோதிடம் பார்ப்பதில் வல்லவர் என்று நம்ப வைத்து சசிகலா தரப்பினரின் உள்வட்டத்துக்குள் நுழைந்துவிட்டார். வழக்கமாக அ.தி.மு.க வேட்பாளர்களின் ஜாதகங்களை முன்கூட்டியே வாங்கி, வெற்றி வாய்ப்புகளை போயஸ் கார்டனில் கணிப்பார்கள். அந்த வகையில் ஜாதகங்களை பார்ப்பவர்களில் இந்த ஏஜென்ட்  பெயரும் இருக்கும்.

மூன்றாவது ஏஜென்ட் - வாஸ்து பிரமுகராம். இவரும் சசிகலா தரப்பினரின் உள் வட்டத்தில் இருப்பவர். ஜெயலலிதா சிகிச்சை பெறும் அறையில் சில மாறுதல்களை செய்யவேண்டும் என்று இவர் சொல்ல...  மருத்துவமனை நிர்வாகம் விடவில்லையாம். இதைச் செய்யவில்லை என்றால், ஏதாவது ஆபத்து நேரிடும் என்று பயமுறுத்தியே எதிராளியை பணியவைப்பாராம். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.