News
Loading...

அன்பே சிறந்த மருந்து!

அன்பே சிறந்த மருந்து!

புத்தகங்கள் தரும் படிப்பினைகள் எப்போதுமே சிறந்த அனுபவங்களைத் தரும். அதுவும் வாழ்க்கை அனுபவத்தையே புத்தகமாக்கினால் நிச்சயம் நமக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். இந்தியாவில் மட்டும் மார்பகப் புற்றுநோயால் வருடத்திற்கு ஒரு லட்சம் பெண்கள் புதிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் என மருத்துவ ஆய்வுக்குழுவின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. 

சமீபத்தில் இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது அம்மாவைப் பற்றியும், தன்னைப் பாதித்த அதே மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தையும் ‘Two Journeys’ என புத்தகமாக எழுதியிருக்கிறார் உஷா ஜேசுதாசன். ஆங்கிலத்தில் ஏராளமான கட்டுரை மற்றும் வாழ்வியல் நூல்களை எழுதியவர் இவர்.

‘‘மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகள் எனக்கு வந்ததும், அதை எதிர்கொள்ளும் அனுபவநூல்களைத் தேடினேன். ஆனால் அது குறித்த புத்தகங்கள் இங்கே மிகக்குறைவாகவே இருந்தன. எனது டாக்டர் கிருஷ்ணனிடம் இதைச் சொன்னதும், ‘நீங்களே ஒரு எழுத்தாளர்தானே.. எழுதுனா உணர்வுபூர்வமாகவும்,உண்மையாகவும் இருக்கும்’ என்றார். அந்த ஒரு வார்த்தை தான் இந்தப் புத்தகம் உருவாகக்காரணம்.

எப்போதுமே ரொம்ப சுறுசுறுப்பா இருப்பாங்க எங்க அம்மா அமலா. திடீர்னு ஒருநாள், ‘தலை ரொம்ப வலிக்குதுமா’னு சொல்ல, உடனே ஆஸ்பிட்டல் போனோம். செக்கப் பண்ணினால், அவங்க மார்பகப் புற்றுநோயால் ரொம்பவே பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துச்சு. குணப்படுத்தவே முடியாத நிலைமையில் அம்மா ரொம்பவும் கலங்கினாலும், ‘கடைசி நாட்களை உங்களோடவே இருக்க விரும்புறேன்’னு தீர்மானமா இருந்து உயிரை விட்டாங்க. 

அவங்க போனதுக்குப் பிறகு எனக்கும் அதே போன்று அறிகுறிகள் தெரியவர உடனே மெமோகிராபி பரிசோதனை பண்ணிப் பார்த்தோம். இங்கே பல மெமோகிராபி சோதனை மையங்கள்ல ஆண்கள்தான் இருக்காங்க. படிச்சவங்ககூட அவங்க முன்னாடி இந்த சோதனையைச் செய்யத் தயங்குவாங்க’’ என்ற உஷா ஜேசுதாசன் தொடர்கிறார்:

‘‘குழந்தைகளுடைய ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை விட பல மடங்கு பெண்களுடைய ஊட்டச்சத்து நிலைமை மோசமா இருக்கு. காரணம், கணவன், குழந்தைகள், வீட்டில் எல்லாரும் சாப்பிட்டு முடிச்சு மிச்ச மீதிய சாப்பிட்டுக்கிட்டே இருக்கற வாழ்க்கை. இதில் எப்படி போதிய ஊட்டச்சத்து கிடைக்கும்? ஆரோக்கியத்தில் சமநிலையை நாம உணரவேண்டும். நமது மருத்துவர்களே முன் நின்று விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். 

அவர்களின் நேரடி விழிப்புணர்வுகள் நமது பயத்தைப் போக்கும். என்னுடைய புத்தகம் சொன்ன ஒரு விஷயத்தை இங்கே நினைவூட்டுகிறேன். பல நோய்களுக்கு சரியான ட்ரீட்மென்ட் மருந்தல்ல. எந்த நோயையும் தவிடுபொடியாக்கும் சக்தி அன்பிற்கு உண்டு. என்னுடைய ஆதங்கம் எல்லாம் கூடிவந்து சேர்ந்ததே இந்தப் புத்தகம்!’’ என்கிறார் உஷா ஜேசுதாசன்.

அறிகுறிகள்

மார்பில் சின்ன வீக்கம் போன்றோ, அல்லது நிறம் மாறினாலோ அவசியம் மருத்துவரிடம் சோதனை செய்வது நல்லது. சிலருக்கு கைகளின் அடிப்புறத்தின் அக்குள் பகுதியில் வீக்கம் உருவாகும்; நோய் தாக்கப்பட்ட நிலையில் மார்புப்பகுதி முழுவதும் சிவந்து காணப்படும்.

சுய பரிசோதனை 

* மாதத்திற்கு ஒரு முறை கண்ணாடி முன்பு நின்று உங்கள் மார்பகத்தில் சந்தேகத்திற்குரிய மாறுதல்கள் தென்படுகிறதா என சோதனை செய்யுங்கள்.
* உங்கள் கைகளாலேயே மார்புப் பகுதியை மெதுவாக அழுத்தி கட்டி போன்று ஏதும் தென்படுகிறதா என சோதனை செய்யுங்கள்.
* சில கட்டிகள் தென்பட்டால் உடனே அது புற்றுநோய் என முடிவுக்கு வரவேண்டாம். சாதாரண கட்டியாகக் கூட இருக்கலாம். எதுவாயினும் மருத்துவர் ஆலோசனைப்படி நடப்பது நன்று. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.