News
Loading...

கறுப்புப் பணம் பதுக்கும் திருட்டுக் கும்பல்...

கறுப்புப் பணம் பதுக்கும் திருட்டுக் கும்பல்...

‘‘கறுப்புப் பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி மேஜிக் நடத்தினால் அதைத் தகர்க்க கறுப்பு முதலைகள் காய்கள் நகர்த்துவதுதான் பரபர விவகாரமாக இருக்கிறது’’

‘‘நடுத்தர வர்க்கத்தினர் உழைத்து சேமித்து வைத்த 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளின் வாசல்களில் தவம் கிடக்கிறார்கள். ஊழலில் கொள்ளையடித்தவர்களும் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்தவர்களும் பணத்தை மாற்ற செய்யும் தகிடுதத்தங்கள் கண்ணைக் கட்டுகின்றன. மோடி மேஜிக் காட்டினால் இவர்கள் கேடி மேஜிக் காட்டுகிறார்கள். போலீஸைவிட திருடன் எப்போதுமே ஒருபடி மேலேதான் சிந்திப்பான் என்பதை செல்லாத நோட்டு விஷயத்தில் நிரூபித்து வருகிறார்கள்.’’

‘‘கேடி மேஜிக்கா?’’

‘‘அரசாங்கத்தில் நேரடியாகப் பணம் புழங்கும் இடங்கள் மின்சார வாரியம், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள், டாஸ்மாக் கடைகள், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்தான். இது மாநில அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளவை. இதே போல மத்திய அரசுக் கட்டுப்பாட்டிலும் சில துறைகள் உண்டு. இங்கெல்லாம் நேரடியாக மக்கள் பணம் புழங்கி வருகிறது. இந்த ஏரியாக்களைத்தான் கறுப்பு ஆடுகள் குறி வைத்து பணத்தை மாற்றி வருகிறார்களாம். மோடி அறிவிப்பால் இந்தியா ஸ்தம்பித்துவிட கறுப்புப் பண முதலைகள்தான் அதிகம் ஸ்தம்பித்தன. மாநகராட்சிகள், குடிநீர் வாரியங்களில் எல்லாம் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்ற நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் டாஸ்மாக்குகளிலும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தார்கள். அங்கேயெல்லாம் குவிந்த 100 ரூபாய் நோட்டுகள் எல்லாமே 1,000, 500 ரூபாய் நோட்டுகளாகத்தான் வங்கிகளில் செலுத்தப்பட்டிருக்கிறதாம். அதாவது 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு 1,000, 500 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கிறார்கள். இப்படி வைத்தவர்கள் அதிகார வர்க்கத்தினர்தான்.’’

‘‘ம்’’ 

‘‘தருமபுரியைச் சேர்ந்த போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் இது. ‘தருமபுரி கோட்டத்துல 16 போக்குவரத்து கிளைகள் உள்ளன. ஒரு நாளைக்கு ஒரு கிளையில் சராசரியா 8 லட்சம் வரையில் கலெக்‌ஷன் ஆகும். 500, 1,000 செல்லாது என அறிவிப்பு வந்ததுமே, அந்த நோட்டுகளை வாங்கக்கூடாது என ஆர்டர் போட்டார்களாம். அதனால் கலெக்‌ஷன் ஆனது எல்லாமே 100 ரூபாயும் அதற்குக் குறைவான ரூபாய் நோட்டுகளும்தான். அந்த நோட்டுகளை எல்லாம் டிப்போவில் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வங்கியில் கட்டியதில், பல 500, 1,000 ரூபாய் நோட்டுகள்தான். இப்படி பல டிப்போகளில் நடைபெற்றிருக்கின்றன. எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 22,501 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு மட்டும் வசூலாகும் தொகை 20 கோடி ரூபாய்க்கும் மேல். இந்த 20 கோடி ரூபாயில் அதிகமாக வருவது 100 ரூபாய் நோட்டுகள்தான். இந்த நோட்டுகளை அதிகாரிகளின் துணையோடு அதிகார வர்க்கம் அள்ளிச் சென்றுவிட்டதாம். அதிகார வர்க்கம் போக அதிகாரிகள் வட்டாரமும் தன் பங்குக்கு கைங்கரியத்தை நடத்தியது.’’

‘‘டாஸ்மாக் நிலவரத்தைச் சொல்லும்” 

‘‘அரசுக்குப் பணம் அதிகம் கொட்டும் இடம் டாஸ்மாக்தான். அங்கேயும் 1,000, 500 ரூபாய் நோட்டுகளை வாங்கவில்லை. அங்கே வந்த 2,000, 100 ரூபாய் நோட்டுகளும் வங்கிகளுக்குப் போகவில்லை. 1,000, 500 பழைய நோட்டுகளைக் கொடுத்துவிட்டு 2,000, 100 ரூபாய் நோட்டுகளை சேகரித்துச் சென்றுவிட்டார்கள். சரக்கு வாங்கப் போன குடிமகன்கள் எல்லாம் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை நீட்டியபோது அதை ஊழியர்கள் வாங்கவில்லை. ஆனால், அந்த ஊழியர்கள் கலெக்‌ஷன் பணம் கட்டுவதற்காக வங்கிகளுக்குப் போனபோது அவர்களிடம் இருந்தது எல்லாமே வெறும் 500, 1,000 ரூபாய் நோட்டுகள்தான். 

இதுபற்றி டாஸ்மாக் சேல்ஸ்மென் ஒருவரிடம் வங்கி ஊழியர் சண்டையே போட்டிருக்கிறார். ‘எங்ககிட்டா நூறு ரூபாயா வாங்கிக்கிட்டு இங்க 500, 1,000 நோட்டா கொண்டு வந்திருக்க’னு கேட்டதற்கு ‘அண்ணே அதிகாரிங்க கொடுக்குறாங்க... நான் கட்டுறேன். ப்ளீஸ் கண்டுக்காதீங்க’னு அவரிடம் கதறியிருக்கிறார். ‘நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியான நாளில் இருந்து வங்கிகளில் கட்டப்பட்ட டாஸ்மாக் செலான்களை சோதித்துப் பார்த்தால் மாட்டப்போவது அப்பாவி சேல்ஸ்மேன்கள்தான்’ என புலம்புகிறார்கள் ஊழியர்கள்’’ என்றவர் அடுத்து அறநிலையத் துறை பற்றிய செய்திகளை சொல்ல ஆரம்பித்தார்.

‘‘அரசு நிறுவனங்களில் இப்படி நடந்து கொண்டிருக்க.... கோயில்களையும் இவ்விஷயம் விட்டு வைக்கவில்லை. அறநிலையத் துறைக்குச் சொந்தமானக் கோயில் உண்டியல்களில் லட்சக்கணக்கில் கரன்சிகள் கொட்டப்படுகின்றன. அதிலும் இதேப் போல 50, 100 ரூபாய் நோட்டுகள் பதுக்கப்பட்டுவிட்டன. பழனி, திருச்செந்தூர், திருத்தணி, ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் லட்சக்கணக்கில் பணம் வசூல் ஆகும். இதுபோன்ற கோயில்களைக் குறிவைத்தும் நோட்டுகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இதே நிலைதான் மாநகராட்சிகளிலும். இப்படி எந்தெந்த வழிகளில் எல்லாம் பணத்தை மாற்ற முடியுமோ அந்த வகையில் எல்லாம் மாற்றி வருகிறார்கள். அதிகார வர்க்கம் அல்லாதவர்கள் நிலையோ வேறு கோணத்தில் உள்ளது. பெட்ரோல் பங்குகள், தியேட்டர்கள், தனியார் பஸ்களில் கிடைக்கும் கலெக்‌ஷன்களை வைத்து கறுப்பை வெள்ளையாக்க முயன்று வருகிறார்கள்.’’

‘‘அவர்கள் எப்படி மாற்றுகிறார்கள்?’’

‘‘1,000, 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு தியேட்டர்கள் மற்றும் தனியார் பேருந்துகளில் சீட்கள் முழுவதுமாக நிரம்பவில்லை. அப்படி நிரம்பாத சீட்கள் நிரம்பியதாகக் காட்டி நாள்தோறும் சில லட்சங்களை மாற்றுகின்றனர். இந்த முறை முழுக்க முழுக்க தியேட்டர் அதிபர்கள் வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மாற்றுவதற்கே போதுமானதாக இருக்கிறது. அதையும் மீறி கிராமப்புறங்களில் காலியாக உள்ள தியேட்டர்கள் மூலம், அந்தப் பகுதியைச் சுற்றி உள்ள கறுப்புப் பணக்காரர்கள் தங்கள் பணத்தை வெள்ளையாக மாற்றுகின்றனர். இதில் தியேட்டர் அதிபர்கள் கட்ட வேண்டிய வருமானவரியும் தியேட்டர் அதிபர்களுக்கான கமிஷனும் சேர்த்து 40 சதவிகிதம் போகிறது. மீதம் உள்ள பணம் நல்ல பணமாகிறது. தனியார் பஸ் கம்பெனி அதிபர்களும், சில தனியார் மருத்துவமனைகளும் இதே முறையைத்தான் கையாள்கின்றன.’’

‘‘ஓஹோ!’’

‘‘கறுப்புப் பணத்தில் பாதி வெள்ளையாகிக் கொண்டிருக்கிறது. அவற்றை மாற்றிக் கொடுப்பதற்கு தரகர்கள் முளைத்துவிட்டனர். வங்கி அதிகாரிகளின் துணையோடு சில இடங்களில் சில லட்சங்கள் மாற்றப்படுகின்றன. வங்கிகளில் அக்கவுண்ட் ஆரம்பிக்க, இதற்கு முன்பு பல ஆயிரம் பேர் தங்களின் அடையாளச் சான்றிதழ் நகல்களை கொடுத்து வைத்துள்ளனர். அவற்றின் மூலம், தினந்தோறும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் கொடுக்கின்றனர். உதாரணத்துக்கு 100 அடையாளச் சான்றிதழ் நகல்களுக்கு ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்ததாகக் காட்டினால், ஒரு நாளைக்கு 4 லட்சம் ரூபாய் வரை கொடுக்கலாம். அப்படியானால் 10 நாட்களுக்கு கொடுத்தால், 40 லட்சம் ரூபாய் கொடுக்கலாம். வெறும் 100 அடையாள நகல்களை வைத்தே இப்படி என்றால் பல ஆயிரம் நகல்களை வைத்து, தங்களுக்கு வேண்டப் பட்டவர்களுக்கு கோடிக் கணக்கில் செய்து கொடுக்கலாம். இதைத்தான் சில வங்கி அதிகாரிகள் செய்து கொண்டிருக்கின்றனர்.’’

கறுப்புப் பணம் பதுக்கும் திருட்டுக் கும்பல்...

‘‘அவ்வளவு அடையாள நகல்கள் வங்கிகளிடம் உள்ளதா?’’

‘‘அது பிரச்னையே இல்லை. ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் கேட்டால், தமிழகத்தில் லைசென்ஸ் வைத்திருப்பவர்களின் நகல் பட்டியல் கிடைத்துவிடும். மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி மண்டல அலுவலகங் களில் தொடர்புகொண்டால், வாக்காளர் அடையாள அட்டைப் பட்டியல் கிடைத்துவிடும். அதைவைத்து செய்து கொடுக்கிறார்கள். இதில் வங்கி அதிகாரிகளுக்கு சில பெர்சன்ட் கமிஷன் போய்ச் சேருகிறது. அதை அவர்கள் வங்கி ஊழியர்களுடன் சேர்த்துப் பிரித்துக் கொள்கின்றனர். இப்படி சில நூறு கோடிகள் கறுப்புப் பணம் வெள்ளையாகிறது. சிறு குறு முதலாளிகள் தங்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் கையில், தங்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தைப் பிரித்துக் கொடுத்து அவர்களை ஒரு வங்கியில் 4 ஆயிரம் ரூபாய் வீதம், தினம்தோறும் மாற்றித் தரச் சொல்கின்றனர். அதோடு ஊழியர்களின் கணக்கில் 2 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்கின்றனர். அதை ஊழியர்களுக்கு கொடுத்த லோன் தொகையாகக் கணக்கில் வைத்து, அவர்களிடம் இருந்து மாதம் மாதம் வசூல் செய்யும் திட்டம் வைத்துள்ளனர். எத்தனை விதமான சில்லரை வழிகள் இருக்கின்றனவோ அத்தனை வழிகளையும் விபரம் தெரிந்தவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த விபரங்கள் தெளிவாகத் தெரியாதவர்கள், மன உளைச்சல், மாரடைப்பில் சிக்குகின்றனர்.’’

‘‘ம்!’’

‘‘இந்தியாவின் புகழ்பெற்ற கார்ப்பரேட் முதலாளிகள் அனைவருமே பொதுத்துறை வங்கிகளில் கடன்களை வாங்கிக் குவித்துள்ளனர். அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படாத வாராக் கடன்களால், வங்கிகள் அனைத்தும் திவாலாகும் நிலையில் உள்ளன. அதில் பாதிக்கப்பட்ட வங்கிகளில் தற்போது, ஏழைகள் மற்றும் முறையாக வருமான வரி செலுத்துபவர்களின் பணம் டெபாசிட் ஆகிறது. இதன்மூலம் வங்கிகளின் பலம் அதிகரித்துள்ளது. இது ஒரு பக்கம் நன்மை என்றபோதும் அதிலும் ஒரு அரசியல் புதைந்திருக்கிறது. தற்போது வங்கிகளிடம் குவிந்துள்ள பணத்தை அப்படியே வைத்திருக்க முடியாது. அதை அவர்கள் கடனாகக் கொடுப்பார்கள். பெரிய கார்ப்பரேட் கம்பெனிகள் தான் கடனை வாங்குவார்கள். மீண்டும் அவர்களுக்கு வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு கடன் கொடுக்கும். அதாவது மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குக் கடனாகக் கொடுக்கும். கடன் வாங்கிய கார்ப்பரேட்டுகள் வழக்கம் போல கம்பியை நீட்டுவார்கள். மீண்டும், வாராக்கடன் கணக்கு வைக்க வங்கிகளைத் தள்ளுவார்கள். மோடியின் அறிவிப்பு கார்ப்பரேட்டுகளுக்கு கொண்டாட்டாம்தான் என ஒரு பக்கம் பேச்சுகள் கிளம்பியிருக்கின்றன.’’ 

‘‘பொருளாதார நிபுணர்கள் என்ன கருதுகிறார்கள்?’’ 

‘‘கார்ப்பரேட் தரப்பினர் மற்றும் பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் இந்த நடவடிக்கையைப் புகழ்கின்றனர். ‘மோடி கொடுத்துள்ள இந்தக் கசப்பு மருந்தின் பலனை இன்னும் 6 மாதங்கள் கழித்துத்தான் இந்த நாடு உணரும் என்கின்றனர். இந்த நடவடிக்கை மூலம் பாதிக்குப் பாதி கறுப்புப் பணம் வெள்ளையாகும். இதன் மூலம் நாட்டுக்கு வருமானவரி 30 சதவிகிதம் வந்துவிடும். அது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்’ என்கின்றனர். ஆனால், ‘மற்றவர்கள் கறுப்புப் பணம் என்பது, கட்டிலுக்கு அடியிலும் தலையணை உறைக்குள்ளும் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும் என்று நம்புவது சுத்த முட்டாள்தனம். இந்த நடவடிக்கை கையில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து வாழ்க்கையை நடத்தும் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை குலைத்துப்போடும் சர்வாதிகார நடவடிக்கை. பெரிய பெரிய கார்ப்பரேட்டுகளிடம் இருந்து வாராக்கடன்களை வசூல் செய்வது, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பது, அதானி, அம்பானி, டாடா குழுமங்களுக்குக் கொடுக்கும் சலுகைகள் மற்றும் அவர்களிடம் இருந்து வரி பாக்கியை வசூல் செய்வது ஆகியவற்றைச் செய்தாலே போதும். ஆனால், அதைச் செய்யாமல் பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கை துக்ளக் தர்பார் நடவடிக்கைகளுக்கு ஒப்பானது’ என்கின்றனர்.’’ 

‘‘புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எப்படி இருக்கின்றன?’’

‘‘வந்தவாசியில் ஒரு குடிமகன், 2,000 ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து, இரவில் டாஸ்மாக்கில் 220 ரூபாய் சரக்குப் பாட்டிலை வாங்கிவிட்டு, மீதம் சில்லறையும் வாங்கிச் சென்றுவிட்டார். ஜெராக்ஸுக்கும் ஒரிஜினலுக்குமே சரியாக வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத நிலையில்தான் அந்த நோட்டுகள் இருக்கின்றன. கள்ள நோட்டுகளை அச்சடிப்பதில் கைதேர்ந்த கலைஞர்கள்(!) தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கினால், 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுகளின் நிலை பரிதாபமாகிவிடும். அந்த நோட்டில் உள்ள வைலட் கலர் சாயம் போய் வெளுக்கிறதாகவும் தகவல்கள் வருகின்றன. அப்படி சாயம் போன ரூபாய் நோட்டு்களை கள்ள நோட்டுகள் என நினைத்து வாங்கவும் பலர் தயங்குகின்றனர்’’ 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...