News
Loading...

அதிரவைக்கும் சிறைச்சாலைகள்!

அதிரவைக்கும் சிறைச்சாலைகள்!

வாழும்போதே நரகத்தை உணர விரும்புகிறவர்கள் ஒருமுறை சிறைக்குச் சென்று வந்தால் போதும். நான் கூறுவது நம் நாட்டு சிறைகளல்ல. உலகின் மிக மோசமான மித மிஞ்சிய சித்திரவதையில் பேரளவு புகழ்கொண்ட கீழ்வரும் 5 சிறைகளைத்தான். வாருங்கள்... சிறை விவரங்களை விசாரணை செய்வோம். 

கரன்டிரு பெனிட்டென்ஷியரி, பிரேசில்பிரேசிலின் சாவ் பாலோ நகரத்தில் உள்ள கரன்டிரு சிறைச்சாலை 1920ம் ஆண்டு சாமுவேல்தாஸ் நெவஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1890ம் ஆண்டு நடைமுறையில் இருந்த குற்றவியல் சட்டத்திற்கேற்ப கட்டப்பட்ட முன்னோடி மாதிரி சிறைச்சாலையாகும்.

தென் அமெரிக்காவிலேயே 8 ஆயிரம் கைதிகளுக்கு மேல் அடைத்து வைக்கும் சிறைச்சாலையாக புகழ்பெற்ற இந்த கரன்டிரு சிறைச்சாலை பயன்பாட்டில் இருந்தது 1956 - 2002 வரையிலான காலம்தான். ஏன், என்ன ஆனது? 

1992ம் ஆண்டு அக்டோபர் 2 அன்று சிறையில் நடந்த சிறிய கலவரம்தான் இந்த சிறைச்சாலையின் கதவடைப்புக்கும் காரணமாகிப்போனது. 8 ஆயிரம் கைதிகளை பாதுகாக்க 1000 காவலர்கள் இருந்தால் என்னாகும்? 

அதிரவைக்கும் சிறைச்சாலைகள்!

சிறைச்சாலையின் உள்ளே கைதிகள் பலரும் குழுக்களாகப் பிரிந்து தன்னாட்சியாக அரசே நடத்த, உணவுப்பொருட்கள் பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைத்தன. கைதிகள் பலரும் பட்டினி, ஊட்டச்சத்து பற்றாக்குறையால் மெல்ல செத்துக்கொண்டிருந்தனர். 

மேற்கூறிய தேதியன்று கரன்டிரு சிறைச்சாலையில்  கலவரத்தில்  கைதிகளின் குழுக்கள் ஈடுபட, கட்டுப்படுத்த ராணுவம் உள்ளே நுழைய, பிறகு நடந்த சேதம் அன்லிமிட்டெட்தான். ராணுவத்தினர் 102 முறை அதிகாரபூர்வமாக சுட, அந்த இடத்திலேயே 111 கைதிகள் இறந்துபோக, சக கைதிகளின் தாக்குதலினால் 9 பேர் இறந்தனர். 

இந்தச் சம்பவம் மக்களுக்குத் தெரிய வர, மனித உரிமை மீறல்களுக்காக உலகம் முழுக்க கண்டனங்களை வாரிக் குவித்த இச்சிறைச்சாலை 2002 டிசம்பர் 2 அன்று நிரந்தர மூடுவிழா கண்டது. கைதிகளின் மரணத்துக்குக் காரணமான கைதிகளைச் சுட உத்தரவிட்ட அதிகாரியான உபிரதன் கைமரீஸ் என்பவருக்கு 632 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும், 2006ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். 

பின்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார். மற்ற அதிகாரிகளுக்கும் பின்னர் சிறைத் தண்டனை அறிவிக்கப்பட்டது. பின்னர் கரன்டிரு சிறைச்சாலை கட்டிடங்கள் அழிக்கப்பட்டு, ஒரு கட்டிடம் மட்டும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு மக்கள் பார்வையிட திறந்து வைக்கப்பட்டுள்ளது.  

கேம்ப் 1391, இஸ்ரேல்1930ம் ஆண்டிலிருந்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வடக்கு பகுதியில் நடத்தி வந்த சிறைச்சாலையின் செல்லப்பெயர்தான் ‘கேம்ப் 1391’ ஆகும். நாட்டிற்கு ஆபத்து ஏற்படுத்தும் விஷமிகளை இந்த இஸ்ரேலிய குவாண்டனாமா சிறையில்  அடைத்து அவர்களுக்கு ‘ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்’ செய்து வந்தவர்கள் இஸ்ரேலிய உளவு நிறுவனத்தினர்தான்.

 2003ம் ஆண்டு இஸ்ரேலிய வரலாற்று ஆய்வாளர் காத் க்ரோஸியர் பிரிட்டிஷ் அரசு கட்டிய 62 கட்டிடங்களை (meretz) பழைய வரைபடங்களில் தேடியபோதுதான் இந்த இன்விசிபிள் சிறையைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்தார். இங்கு கைதி ஒருவருக்கு கொடுக்கப்படும் இடமே 2 மீட்டர் X 2 மீட்டர்தான். அதிலும் வெளிச்சம் இருக்காது. சில தனிப்பட்ட கைதிகளை வழிக்குக் கொண்டு வர 2 அறைகள் உள்ளன. 

அதில் அறை முழுக்க ஸ்டீலால் உருவாக்கப்பட்டு, சுவர்கள் கறுப்பு (அ) சிவப்பு வண்ணம் பூசப்பட்டிருக்கும். அறையின் அளவு 1.25 மீட்டர் X 1.25 என பட்ஜெட் கணக்காக அசுர சிக்கனமாக உருவாக்கப்பட்டது. செஞ்சிலுவை சங்கத்தினரை சந்திக்கவெல்லாம் நினைப்பது கடவுளரை நேரில் பார்க்கலாம் என்பது போலத்தான். 

அதற்கு பர்மிஷனும் கூட கிடையாது. 2006ம் ஆண்டு கேம்ப் சிறைச்சாலை மூடப்பட்டது என இஸ்ரேலிய அரசு கூறுகிறது. ஆனால் அதனை பாலஸ்தீனியர்களும், லெபனான் நாட்டினரும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.

கறுப்பு டால்பின் சிறை, ரஷ்யா கஜகஸ்தான் நாட்டு எல்லையில் ஓரென்பர்க்கில் உள்ள இந்த கொடும் சிறை 1745ம் ஆண்டிலிருந்து தொடர் கொலைகாரர்கள், தீவிரவாதிகள் என தீவிர குற்றவாளிகள் பலருக்கும் வீடாக உள்ளது. 

சிறையின் நுழைவாயிலில் சிறைவாசிகளே உருவாக்கிய கறுப்பு நிற டால்பின் மீன்தான் இந்த சிறையின் தனித்துவமான லோகோ.  சிறையில் அறைகள் 3 அடுக்கு இரும்புக்கம்பிகளால் அறைக்குள் அறை என இருக்கும். குட்டியூண்டு அறையில் இரு கைதிகள் இருக்க, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை காவலர்கள் அறையை சோதித்துச் செல்வதோடு 24X7 வீடியோ பாதுகாப்பும் உண்டு. 

அறையிலிருந்து வெளியே வரும்போது சிறை அமைப்பைக் கண்டுபிடிக்காதிருக்க கைதிகளை தலையை குனியச் சொல்லி, கண்களைக் கட்டி அழைத்துச் செல்வார்கள்.  இந்தச் சிறையிலிருந்து தப்பிக்க ஒரே வழிதான்  உண்டு. அது, ‘இறந்துபோவது மட்டுமே’ என்று காவலர் ஒருவர் கூறுவதிலிருந்தே இதன் பாதுகாப்பையும் கொடூரத்தையும் உணரலாம். கண்களைக் கட்டி கைதிகளை இங்கே அழைத்து வருவதால் சிறையின் இடத்தை அவர்கள் அறியவே முடியாது. பின்னே இனி சிறை மீண்டால்தானே இடம் அறியமுடியும்?  

ஹோய்ர்யாங் முகாம், வட கொரியாசட்டசபையில் தூங்கிய உறுப்பினரையே சுட்டுக்கொன்ற ‘என் கடமை’ எம்.ஜி.ஆர் நாடு வட கொரியா. அரசுக்கு எதிராக விரல் நீட்டுபவர்களை சும்மா விடுமா? அதற்காகத்தான் ஸ்பெஷல் சிறையாக, சோதனைக்கூடமாக உள்ளது ஹோய்ர்யாங் முகாம் (அ) ‘கேம்ப் 22.  1965ம் ஆண்டிலிருந்து ஆக்டிவான இந்த சிறைச்சாலை உலகிற்குத் தெரிய வந்தது 2012ம் ஆண்டில்தான். 

பெரும்பாலும் அரசியல் கைதிகளை கைமா செய்யும் இடமான இங்கு 50 ஆயிரம் கைதிகள் இருக்கலாம்  என  யூகிக்கப்படுகிறது. கடுமையான உடலுழைப்பு, மனிதர்கள் மீதான சோதனை, கடுமையான சித்திரவதைகள் என இங்கு வந்தவர்களுக்கு உயிர் போகும் வரை தினம் தினம் யுத்தம்தான். 

15 மணி நேர உழைப்பைத் தொழிற்சாலை, சுரங்கம் உள்ளிட்டவற்றுக்கு கைதிகள் வழங்கினால் அரசு அவர்களுக்கு ஒரு குவளையில் 180 கிராம் அமுத சொட்டுகளாக சோள சூப் மட்டுமே கருணையோடு வழங்குகிறது. ‘2012ம் ஆண்டு இங்குள்ள கைதிகள் வேறிடத்திற்கு மாற்றப்பட்டு சிறை மூடப்பட்டுவிட்டது’ என அரசு கூறினாலும் வேறு வசதியான இடத்திற்கு சிறை மாறிவிட்டது என மக்கள் நம்புகிறார்கள். 

டியாபகிர், துருக்கிநரகம் என்பது இதன் இன்னொரு பெயர். துருக்கி நீதித்துறையின் கீழ் 1960ம்  ஆண்டு கட்டப்பட்ட இ டைப் சிறையான இதில் மேல்தளத்தில் சிறையும், கீழ்தளத்தில் உணவு அருந்தும் அறைகளும் இருக்கும்.

நிர்வாணப்படுத்தி ரப்பர் குழாயால் அடிப்பது, நாயை விட்டு கடிக்கச் செய்வது, சிகரெட் சூடு, ஷாக் வைப்பது, பாலியல் தாக்குதல்கள் என நினைத்துப் பார்க்கமுடியாத எக்ஸ்ட்ரீம் சித்திரவதைகளால் உடலின் ஒவ்வொரு நானோ செல்களையும்  வேதனைப்படுத்தும் சிறைச்சாலையின் தொடக்க ட்ரீட்மென்ட்டே சிறையைப் பற்றிப் புரிய வைத்து விடும். முதலில் சிறைக்குள் வரும் புதிய கைதியை ஜெயிலர் வரவேற்று உள்ளே அனுப்புவார். 

‘குளியலுக்கு தயார்படுத்துங்கள்’ என்ற அவரின் குறிப்பின் அர்த்தம், 20 சிறை அதிகாரிகள் கைதியை சுயநினைவற்று கீழே விழும்வரை அடி, உதை என பின்னி எடுக்கும்போது நிச்சயம் புரியாமலா போகும்? 740 கைதிகள் மட்டுமே தங்க முடியும் சிறையில் 1000க்கும் மேலானவர்கள் உள்ளனர். இங்கிருந்து தப்பும் முயற்சியில் 16 கைதிகள் சுடப்பட்டும், 43 பேர் தற்கொலை செய்துகொண்டும், 14 பேர் பட்டினியாலும் என 300 நபர்கள் இறந்துள்ளனர். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.