News
Loading...

வீட்டுக்குப் பத்தாயிரம்... தங்கக் காசுகள்!

வீட்டுக்குப் பத்தாயிரம்... தங்கக் காசுகள்!

புதுச்சேரி முதல்வர் நாற்காலியில் நாராயணசாமியால் நீடிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை காணப்போகும் இடைத்தேர்தல் என்பதால், நெல்லித்தோப்பில் பரபரப்புக்குப் பஞ்சமில்லை. எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கொண்டிருந்த நாராயணசாமிக்கு அ.தி.மு.க-வின் புதிய வியூகம் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் நாராயணசாமிக்காக தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார், தொகுதி மக்களை இலவசங்களால் வளைத்துப் போட்டுள்ளார். அதனால், நாராயணசாமி தரப்பு கடந்த வாரம் வரை தெம்பாக வலம்வந்துகொண்டிருந்தது. திடீரென, அ.தி.மு.க வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆதரவாக, தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோரை தேர்தல் பணிக்குழுவாக அ.தி.மு.க தலைமை களமிறக்கிய பிறகு காட்சிகள் மாறியுள்ளன. தமிழக அமைச்சர்கள், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

“பணத்தை நம்பியே நாராயணசாமி வெற்றி இருக்கிறது. மூன்று லட்சம் வாக்காளர்களைப் பார்த்த நம்மால் வெறும் 30,000 வாக்காளர்களுக்குப் பணம் வழங்க முடியாதா? அவர்கள் கொடுப்பதைவிட இரு மடங்கு கொடுத்து, மருத்துவமனையில் இருக்கும் அம்மாவுக்கு வெற்றியைப் பரிசாக அளிப்போம்” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

மற்றொருபுறம், தன்னை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், வலிய வந்து அ.தி.மு.க-வுக்கு ஆதரவு என அறிவித்தார், முன்னாள் முதல்வர் ரங்கசாமி. இதன் மூலம் தனது அரசியல் எதிரியான நாராயணசாமியை வீழ்த்தி அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி, மீண்டும் முதல்வராகிவிடலாம் என்ற மனக் கணக்குடன்  ரங்கசாமி காய்நகர்த்துகிறார். தன் சொந்தத் தொகுதியில்கூட வேனை விட்டுக் கீழே இறங்காமல் பிரசாரம் செய்தவர், வீட்டுக்கு வீடு சென்று அ.தி.மு.க வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கிறார். இந்தத் திடீர் திருப்பங்களால் மிரண்டுபோன காங்கிரஸ் தரப்பினர், ‘அ.தி.மு.க-வினர் வாக்காளர்களை மிரட்டுகிறார்கள்’ என்று கதறியதோடு மாநில தேர்தல் ஆணையத்தில் புகாரும் கொடுத்தனர். பதிலுக்கு, ‘நாராயணசாமி முதல் அமைச்சர் அதிகாரத்தை தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்’ என்று டெல்லி தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க புகார் அளிக்க, தேர்தல் நின்றுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார் நாராயணசாமி.

‘‘ரேஷன் கார்டுக்கு இரண்டு சுற்றாக 4 ஆயிரம் ரூபாய் கொடுத்த காங்கிரஸ் தரப்பு, அரசு இயந்திரத்தையும், தேர்தல் ஆணையத்தையும் முடுக்கிவிட்டு அ.தி.மு.க தரப்பை பணம் விநியோகிக்க முடியாதபடி தடுக்க நினைத்தது. ஆனால், தமிழக ஸ்டைலில் அதிகாலை 4 மணிக்கு ஓட்டுக்கு 3,000 ரூபாய் வீதம் வழங்கிவிட்டு, தங்கக் காசுகளை வழங்க அடுத்த சுற்றில் தயாராகிவிட்ட அ.தி.மு.க-வைப் பார்த்து மிரண்டுபோன காங்கிரஸ் தரப்பும் தங்கக் காசுகளையும், மீதம் 6,000 ரூபாயையும் வழங்கத் தயாராகி வருகிறது” என்கிறார் தொகுதிவாசி ஒருவர்.

வீட்டுக்குப் பத்தாயிரம்... தங்கக் காசுகள்!

முதல் அமைச்சராகவே தேர்தலை சந்திப்பது நாராயணசாமிக்கு ப்ளஸ். ஆனால், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் லெட்டர் பேடு கட்சிகள் வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்காளர்களின் வீட்டுக் கதவைத் தட்டி வருவதால் கடுப்பில் இருக்கிறார்களாம் தொகுதி மக்கள். அதேபோல, தமிழக அமைச்சர்களின் பிரசாரம், பணம் இறைப்பு போன்றவை அ.தி.மு.க-வுக்கு சாதகமாக இருந்தாலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரிக்கச் செல்லும் இடத்திலெல்லாம், “அ.தி.மு.க-வுக்கு வாக்கு அளித்தால் மீண்டும் நான்தான் முதல் அமைச்சர்” என்று சொல்வதைக் கேட்டு ‘மறுபடியும் இவரா’ எனத் தெறித்து ஓடுகிறார்கள் மக்கள்.

”சென்றமுறை ஜான்குமார் வாங்கிய 12,141 வாக்குகளைவிட கூடுதல் வாக்குகளை வாங்க வேண்டும் என்று போராடுகிறார் நாராயணசாமி. ஆனால், அ.தி.மு.க கொடுக்கும் கடுமையான நெருக்கடியால் அதற்கான வாய்ப்புகள் குறைவுதான்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

பண விநியோகத்தில் திருமங்கலத்தைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது நெல்லித்தோப்பு. ஆனால் பஜ்ஜி சாப்பிடுவதும், டீ குடிப்பதும் மட்டும்தான் வேலை என்பது போல வெறுமனே சுற்றி வருகிறது தேர்தல் ஆணையம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.