News
Loading...

“கிரண்பேடியைத் தடுக்கும் அதிகாரிகள்!” - புதுச்சேரி அட்ராசிட்டி

“கிரண்பேடியைத் தடுக்கும் அதிகாரிகள்!” - புதுச்சேரி அட்ராசிட்டி

இங்குள்ள கலெக்டரையோ, மற்ற அதிகாரிகளையோ நம்புவதற்கு நான் தயாரில்லை. ஊழலைக் களைவதற்குப் பதிலாக, ஊழலுக்கு அவர்கள் துணை போகிறார்கள்” என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் இளைஞர் ஒருவர் பேசியது காரைக்கால் மாவட்டத்தைக் கதிகலங்கவைத்துள்ளது.  

வாரம்தோறும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் ‘வீடியோ கான்ஃபரன்சிங்’ மூலம் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கிறார், கிரண்பேடி. அந்த நிகழ்ச்சி, கடந்த 20-ம் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட சமூக சேவகரான மௌலி அடுக்கிய புகார்களைக் கண்டு அதிகாரிகள் வட்டமே ஆட்டம் கண்டுள்ளது. அப்படி என்ன பேசினார் மௌலி? அவரிடம் பேசினோம்.

“புதுவை மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்செல்வதே என் தலையாய பணி என்று துணைநிலை ஆளுநர் சொல்கிறார். அதற்கு அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.

நவக்கிரகக் கோயில்களில் புதுவை மாநிலத்தில் இருப்பது திருநள்ளாறு சனி பகவான் கோயில் மட்டும்தான்.  அதிக வருமானம் ஈட்டித்தரும் இக்கோயிலுக்கு வரும் காணிக்கை பணத்துக்கு முறையான கணக்கு இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக அரசின் ‘ஆடிட்டிங்’ நடத்தப்படவில்லை என்பதிலிருந்து இதன் நிர்வாக லட்சணத்தைப் புரிந்துகொள்ளலாம்.    

கடலோரத்தில் ஒரு காலத்தில் உப்பளத் தொழில் கொடிகட்டிப் பறந்தது. மீண்டும் அதை துவக்கினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக இருந்தபோது மரைன் காலேஜ் அமைக்க அடிக்கல் நாட்டினார்.  அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் அந்த விஷயத்தில் அக்கறை காட்டாததால் இன்று வரை மரைன் காலேஜ் அமைக்கப்படவில்லை.  

விமான நிலையங்கள் அமைக்க ‘சூப்பர் ஏர்போர்ட் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற தனியாருக்கு அனுமதி தந்தார்கள். அவர்களும் விவசாயிகளை கட்டாயப்படுத்தி அடிமாட்டு விலைக்கு 500 ஏக்கருக்கும் மேல் விளை நிலங்களை வாங்கிப்போட்டார்கள்.  அதில் தருமபுரம் ஆதீன நிலம் 110 ஏக்கரை முறைகேடாக வளைத்துவிட்டதாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இன்று வரை விமான நிலையம் வருவதற்கான அறிகுறியே இல்லாமல் சாகுபடி செய்துவந்த நிலங்கள் பல ஆண்டுகளாகத் தரிசாக கிடக்கின்றன.   ஏற்கெனவே துறைமுகத்தை ‘மார்க்’ என்ற தனியாரிடம் விட்டதால்தான், அவர்கள் இலாபம் என்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அங்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறார்கள். கரி மாசுபடிந்த காற்றை சுவாசிப்பதால் பொதுமக்கள் எண்ணற்ற நோய்களால் அவதிப்படுகிறார்கள்.  போலகம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தை வளைத்து, அதில் சிப்காட் தொழிற் போட்டை அமைக்கப்படும் என்று அறிவித்தார் அப்போதிருந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.  20 ஆண்டுகள் கடந்தும் அங்கு எந்தத் தொழிற்சாலையும் வராமல் புதர் மண்டிக் கிடக்கிறது.

“கிரண்பேடியைத் தடுக்கும் அதிகாரிகள்!” - புதுச்சேரி அட்ராசிட்டி

ஒரு எஸ்.பி., இரண்டு இன்ஸ்பெக்டர்களை கொண்டு இயங்கி வந்த காவல் துறை, காரைக்கால் மாவட்ட அந்தஸ்து பெற்றவுடன், ஒரு சீனியர் எஸ்.பி., இரண்டு எஸ்.பி.க்கள், நான்கு இன்ஸ்பெக்டர்கள், பல எஸ்.ஐ.க்கள் என அதிகார பதவிகள் அதிகரித்துள்ளன. ஆனால், பற்றாக் குறையாக உள்ள காவலர்களின் எண்ணிக்கையை ஒன்றுகூட கூட்டவில்லை.  மேலே சொன்ன புகார் அனைத்தையும் கவனமாகக் கேட்ட கவர்னர், அவ்வப்போது அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டதற்கு சரியான பதில் கூறாததால் என்னை எழுத்து மூலமாக விரிவாகப் புகார் அனுப்பும்படி உத்தரவிட்டார், நான் அனுப்பிவிட்டேன்.  இதனை தீர விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பார்” என்று முடித்தார் மௌலி.  

இந்தப் புகார்கள் குறித்து மாவட்ட கலெக்டர் பார்த்திபனிடம் பேசியபோது, “திருநள்ளாறு கோயில் ‘ஆடிட்டிங்’ நடந்துகொண்டுதான் இருக்கிறது. போலகத்தில் 650 ஏக்கரில் தொழிற்பேட்டை அமைக்க இடம் இருக்கு.  அதில் தொழிற்சாலை அமைக்க வருபவர்கள் குறைந்தபட்சம் 19 ஆண்டுகள் அனுமதி கேட்கிறார்கள்.  ஆனால் ஓராண்டு கொடுப்பதற்குதான் விதிகளில் இடமிருக்கிறது.  இந்த விதிகளை மாற்றி அமைத்து தொழிற்சாலை கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.  உப்பளத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்பில்லை.  ஏற்கெனவே மார்க் துறைமுகத்தால் கடல் நீர் உட்புகுந்து அருகில் உள்ள விள நிலங்கள் உப்பு நீராகி வருவதாகக் குற்றச்சாட்டு உள்ளது என்று முடித்துக் கொண்டார்.  

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.