News
Loading...

நிஜ ஹீரோ இவர்தான்! மோடி அல்ல!

நிஜ ஹீரோ இவர்தான்! மோடி அல்ல!
உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி,

2008 பிப்ரவரி 25-ம் தேதி. ஆஸ்திரியாவுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு லீக்டென்ஸ்டைன் (Liechtenstein). இங்கு உள்ள எல்.ஜி.டி (LGT) வங்கியில் பல நாடுகளின் பணம் மலையாகக் குவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் யாரெல்லாம் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற கணக்கை ஜெர்மனியின் ரகசிய புலனாய்வு அமைப்பு பெற்றது. அதில் ஜெர்மனியை சேர்ந்தவர்கள், எத்தனைபேர் கறுப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தது. வேறு யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பதையும் பார்த்து, அந்தந்த நாடுகளுக்கும் அந்தத் தகவலை இலவசமாகவே கொடுத்துப் புண்ணியம் கட்டிக்கொண்டது. அதில் இந்தியர்களும் ஏராளமாக இருந்தனர். இந்தத் தகவல் வெளிவந்ததும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐ.ஆர்.எஸ். அதிகாரி அரவிந்த் கேஜ்ரிவால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜெர்மனி அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து விவரங்களைக் கேட்டார். காங்கிரஸ் அரசாங்கம் கொடுக்கவில்லை. அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார் ராம் ஜெத்மலானி. 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, பஞ்சாப் முன்னாள் போலீஸ் இயக்குனர் ஜெனரல் கில், முன்னாள் மக்களவைச் செயலாளர் ஜெனரல் சுபாஷ் காஷ்யப் ஆகியோர் உச்ச நீதி மன்றத்தில் பொதுநலன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். ‘இந்தியர்களில் யாரெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். ஒருபக்கம் ராம் ஜெத்மலானி, எதிர்ப் பக்கம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினர். அதில் அனல் பறந்தது. ஆனால், பட்டியல் வெளியாவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வாய்தா முடிந்து வெளியில் வந்ததும் பத்திரிகையாளர் களைச் சந்தித்த ராம் ஜெத் மலானி, அன்றைக்கு ப.சிதம்பரத்தையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் காய்ச்சி எடுப்பார்.

வேறுவழியில்லாமல், எல்.ஜி.டி வங்கியில் பணத்தைப் போட்டு இருந்த 26 பேரின் பெயர்களை மட்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதர்சன் ரெட்டி, எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய அமர்வில் சமர்ப்பித்த மத்திய அரசு ‘அந்த கவரில் இருக்கும் பெயர்களை வெளியிடக்கூடாது’ என்று வேண்டுகோளும் வைத்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியது. அந்தநேரத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்த பி.ஜே.பி, கறுப்புப் பணம் விவகாரத்தையும் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் சேர்த்துக்கொண்டது. பி.ஜே.பி விசுவாசம் உள்ள ராம் ஜெத்மலானி, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்க மோடியால் மட்டும்தான் முடியும் என்று சொன்னார்; ஊர் ஊராகப்போய் மோடிக்கு வாக்கு சேகரித்தார்.

2014 மே 26-ம் தேதி மோடி பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால், காங்கிரஸ் அரசாங்கம் சொன்னதையே பி.ஜே.பி அரசாங்கமும் உச்ச நீதிமன்றத்தில் சொன்னது. “வெளிநாடுகளில் பணம் வைத்திருப்பவர்களின் முழுமையான பட்டியலை தங்களால் வெளியிட முடியாது” என்று மத்திய பி.ஜே.பி அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல்ரோத்தகியும் சொன்னார். கடுப்பான ராம் ஜெத்மலானி, பி.ஜே.பி அரசையும் பிரதமர் மோடியையும், நிதி அமைச்சர் அருண்ஜெட்லியையும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். கடுப்பான பி.ஜே.பி ராம் ஜெத்மலானியை கட்சியைவிட்டு நீக்கியது. 

அதையடுத்து அக்டோபர் 24, 2014 தேதியிட்டு அருண்ஜெட்லிக்கு ராம் ஜெத்மலானி எழுதிய கடிதத்தில், ‘சுப்ரீம் கோர்ட்டில்  மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ‘வெளிநாடுகளுடன் இந்தியா இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதுவே வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர்களை வெளியிட முடியாததற்கு காரணம்’ என்று ஒரு தவறான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த, பணம் பதுக்கியோர் பட்டியலை ஜெர்மனி வெளியிடத் தயாராக இருந்தது என்பதை அறிவீர்கள். ஆனால், இந்தப் பட்டியலைப் பெற மத்திய அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. மற்றவர்களைப் போல நீங்களும் உண்மை வெளியே வந்துவிடக் கூடாது என்று செயல்பட்டதாக சந்தேகிக்கிறேன். இது தேர்தல் பிரசாரத்தின்போது மோடி அரசு கட்டியெழுப்பிய பிம்பத்தை நிர்மூலமாக்குவதாக இருக்கிறது. மிகப் பெரிய கிரிமினல்கள் தப்பிச் செல்வதற்கு உதவுவதாக இருக்கிறது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த விவகாரங்கள் எல்லாம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்தபிறகு, ராம் ஜெத்மலானியின் கோரிக்கைக்குக் கொஞ்சம் ஆறுதலாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.  ராம் ஜெத்மலானி கேட்டது கடலளவு நடவடிக்கை; அதை செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தும் பி.ஜே.பி அரசு எடுத்துள்ளது துளியளவு நடவடிக்கை.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.