News
Loading...

நியூஸ் வே

நியூஸ் வே

* கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன் மகன் ரொனால்டோ ஜூனியருடன் ஜிம்மில் பயிற்சி செய்யும் புகைப்படம்தான் இப்போதைய இன்ஸ்டாகிராம் வைரல்! இந்தப் படத்தை ரொனால்டோவே தன் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அடுத்த மூன்று மணி நேரத்தில் பத்து லட்சம் பேர் இந்தப் புகைப்படத்தை லைக் செய்துள்ளனர். ஆனால், ‘தனது மகனின் அம்மா யார்?’ என்பது பற்றி மட்டும் இன்றுவரை அவர் வாய் திறக்கவில்லை!

* ‘கிறிஸ்தவ மதம் கருக்கலைப்பை ‘பெரிய பாவம்’ எனும் பட்டியலில் இருந்து  இன்னும் தூக்கவில்லை’ என்று உலகில் உள்ள கிறிஸ்துவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். போப் ஃபிரான்சிஸ் ‘டிசம்பர் 8, 2015 முதல் நவம்பர் 20, 2016’ வரை ‘கருணை ஆண்டாக’  பிரகடனப்படுத்தியிருந்தார். இந்த நாட்களில் கருக்கலைப்புக்கும் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமையோடு கருணை ஆண்டு நிறைவடைந்தது. 

‘வருங்காலத்தில் இந்தப் பாவத்தை செய்பவர்கள் மனம் வருந்தி மன்னிப்புக் கேட்கும்போது இயேசுவைப் போல அவர்களை மன்னிக்க வேண்டும்’ என்று பாதிரியார்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் போப். இது கிறிஸ்துவ மத போதகர்களிடம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
நியூஸ் வே

* சீன ஓப்பன் பேட்மின்டன் போட்டியில் வெற்றி வாகை சூடி அசத்தியிருக்கிறார் பி.வி.சிந்து! ‘சூப்பர் சீரிஸ்’ தொடரில் அவர் வெல்லும் முதல் பட்டம் இது. ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பிறகு டென்மார்க், பிரெஞ்ச் ஓப்பன் என அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டாவது ரவுண்டோடு வெளியேறிய சரிவிலிருந்து மீண்டிருக்கிறது பொண்ணு. ‘‘சந்தோஷமாக இருக்கிறது. அடுத்து, ஹாங்காங், இங்கிலாந்து என நிறைய டைட்டில்கள் காத்திருக்கின்றன. நம்பர் 1 இடத்துக்கு வருவதே என் குறிக்கோள்’’ என நம்பிக்கையாகப் பேசுகிறார் சிந்து!

* கறுப்புப் பண விவகாரத்தால் 500, 1000 ரூபாய் நோட்டுகளை தனியார் நிறுவனங்கள் வாங்க மறுப்பதற்கு பதிலடியாக நடந்த அதிரடி சம்பவம் இது! கடந்த வாரம் கொல்கத்தாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சுகந்தா சாலே என்பவர் தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். நோய் குணமானதும் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் 40 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லியிருக்கிறது. 

கையில் வங்கி கார்டு ஏதுமில்லாத சுகந்தா குடும்பம், பணமாக ஐந்நூறு ரூபாய் தாள்களை நீட்ட, வாங்க மறுத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். ‘செக்’ தருகிறோம் என்றாலும் வாங்கவில்லை. நொந்து போன சுகந்தா வாட்ஸ்அப் நண்பர்கள், உறவினர்கள், அருகிலுள்ளவர்கள் என எல்லோரிடமும் உதவி கேட்க வேகமாய் சேர்ந்திருக்கின்றன சில்லறைகள். 40 ஆயிரத்தையும் சில்லறை பண்டலாகக் கொடுக்க, ‘இப்படி சில்லறை வேண்டாம்’ என மருத்துவமனை மறுத்தபோது, ‘‘போலீஸில் புகார் கொடுத்துவிடுவோம்’’ என சுகந்தா கோபமாகச் சொன்னார். கடைசியில், அந்த சில்லறைகளை ஆறு ஊழியர்களைக் கொண்டு மூன்று மணி நேரம் எண்ணியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம்!

* திருநெல்வேலியின் பாரம்பரிய செம்மறியாடு வகையான ‘செவ்வாடு’ இனத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த செவ்வாடு இனத்தை நாகர்கோவில் கால்நடை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகப்படுத்தி பத்தாண்டுகளாக பல்வேறு ஆய்வுகளை நிகழ்த்தியது. கடந்த செப்டம்பர் மாதம் தேசிய கால்நடை மரபு வள அமைப்பு இதனை தனி இனமாக அங்கீகரித்தது. ‘‘ கலாசார, பொருளாதார முக்கியத்துவம் உடைய இந்த ஆடு, இனக்கலப்பு இன்றி ஆடு இனங்களிலேயே தனித்துவத்துடன் இருக்கிறது’’ என்கிறார் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ரவிமுருகன்.

* இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மறைந்தார். சிறந்த கலை கடினமானதையும் எளிதாகக் காட்டும் என்பதற்கு உதாரணமே அவர்தான்.  முதுமையிலும் இசையின் மீதான அவரின் அக்கறை குறையவேயில்லை. அவருக்கு ஏராளமான சிஷ்யர்கள். அவர் தேடித்தேடி சேகரித்த இசையறிவு, அனுபவம் எல்லாவற்றையும் வழங்கிவிட்டே சென்றார். அறிந்ததையும், உணர்ந்ததையும் இளைய தலைமுறைக்கும், தமிழுக்கும் கொடுத்துவிட்டு போகவேண்டும் என்ற தீராத தவிப்பு அவரிடம் இருந்தது. கர்நாடக சங்கீதம், சினிமா சங்கீதம் எல்லாவற்றிலும் அவருக்கு மேலான இடமே கிடைத்தது. அவர் குரலால் உணர்த்திய கனிவு, இனிமை, மென்மை, வசீகரம், நேர்த்தி நம்மை தென்றலாய் தீண்டிப்போனதை மறப்பதற்கு இல்லை. நுட்பமான தமிழ்ச் சமூகம் அவரை எப்பொழுதும் நெஞ்சில் நிறுத்தும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.