News
Loading...

கறுப்புப் பணமும்... கபாலி படமும்!

கறுப்புப் பணமும்... கபாலி படமும்!

மோடியின் அறிவிப்புக்கு நாடு முழுவதும் பாராட்டுகளை அதிகம் தெரிவித்தவர்கள் திரைத் துறையினர்தான். தமிழ்நாட்டிலும் மோடியின் அறிவிப்புக்கு ஆதரவாக ஓங்கி ஒலித்தன நட்சத்திரங் களின் குரல்கள். கறுப்புப் பணத்துக்கு கருத்து சொல்லப்போய், அந்தக் கருத்துகளே சிலருக்குச் சிக்கலாகப் போய்விட்டன. 

 ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு கடந்த 15-ம் தேதி  செய்தியாளர்கள் அழைக்கப்பட்டார்கள். ஒரு முக்கிய வி.ஐ.பி செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார் என்று அறிவித்தார்கள். ஆனால், அங்கு திடீரென என்ட்ரி கொடுத்ததார் நடிகர் விஜய். மோடியின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் விஜய் விளக்கினார். “மத்திய அரசு எடுத்த இந்த முடிவு நல்ல முடிவுதான். நம் நாட்டுக்குத் தேவையான, துணிச்சலான வரவேற்கத்தக்க முயற்சிதான். இது நம் நாட்டுப் பொருளாதாரத்தை வளர்த்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒரு நோக்கம் பெரிதாக இருக்கும்போது அதற்கான பாதிப்புகள் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். ஆனால், நோக்கத்தைவிட பாதிப்புகள் அதிகம் இல்லாமல் பார்த்து இருக்க வேண்டும். சில விஷயங்களை நாம் தவிர்த்திருக்கலாம். நாட்டில் உள்ள 20 சதவிகிதம் பணக்காரர்களில் ஒரு சின்ன குரூப், செய்யும் தவறுகளால் மீதி இருக்கும் 80 சதவிகித மக்கள் பாதிக்கப்படுகிறார்களே... மற்றபடி அரசின் இந்த முயற்சி இதுவரைக்கும் யாரும் பண்ணாத ஒரு சிறப்பான பெரிய முயற்சி. ஆனால், இப்படி ஒரு பிரச்னைக்குத் தீர்வுகாணும்போது, என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிஞ்சுக்கிட்டு அதற்கான முயற்சியை முன்கூட்டியே எடுத்து பண்ணியிருந்தா இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கருத்தை மட்டும் பதிவுசெய்துவிட்டுச் சென்றுவிட்டார். இவருடைய கருத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்க, பி.ஜே.பி-யினர் ‘விஜய் நிறைய பணம் வைத்திருந்தால் ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டியது தானே’ என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான அமீர், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் பேசியபோது, “மோடியின் அறிவிப்புக்கு தமிழ்நாட்டில் இருந்து, ‘ஹாட்ஸ் ஆஃப்’ என வாழ்த்து தெரிவிக்கிறார் ரஜினி. ‘புதிய இந்தியா பிறந்துள்ளது’ என்கிறார். இந்த நாட்டில் பல அக்கிரமங்கள் நடைபெற்றபோது எதற்கும் வாய்திறக்காத ரஜினி, இதற்கு மட்டும் வாய் திறந்துள்ளார் என்றால் என்ன அர்த்தம்? ரஜினியின் கபாலி படத்தின் டிக்கெட் விலை என்ன தெரியுமா? ரஜினியின் சம்பளம் என்ன தெரியுமா?” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கறுப்புப் பண விவகாரத்துக்கும் கபாலி படத்துக்கும் என்ன சம்பந்தம் என்று அமீரிடம் கேட்டோம். “நான் முஸ்லீம் என்பதால் மோடியின் அறிவிப்பை எதிர்க்கிறேன் என்று கருதவேண்டாம். இந்த அறிவிப்பால் சாமான்யன் நேரடியாகப் பாதிக்கப்படுகிறான். மோடி அறிவிப்பு மூலமாக, டிசம்பர் மாத இறுதிக்குள் இந்தியாவில் கறுப்புப் பணம் ஒழிந்துவிட்டால், நான் பி.ஜே.பி-யில் இணையக் கூடத் தயங்கமாட்டேன். ஆனால், இந்த அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழியப்போவது இல்லை. காரணம், கறுப்புப் பணம் வெறும் பணமாக மட்டும் இந்த நாட்டில் இல்லை. இவர்கள் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட முடிவு செய்தால், அதற்கு முன்னேற்பாடான விஷயங்களைச் செய்துவிட்டு  இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். அதைச் செய்யாமல், அறிவித்ததால்தான் இந்த நாட்டின் அடித்தட்டு மக்கள் நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கபாலி படத்தை நான் முதல் நாள் அன்று 500 ரூபாய் டிக்கெட் எடுத்துப் பார்த்தேன். அரசு நிர்ணயித்த கட்டணம் 150 ரூபாய் மீதி 350 ரூபாய் யாருக்குப் போகிறது? என்ற அர்த்தத்தில்தான் அதை நான் சுட்டிக்காட்டினேன். ரஜனிகாந்த் மோடியின் அறிவிப்புக்கு உடனே பதில் சொல்லியிருக்காமல், மக்கள் நிலை குறித்து அறிந்த பிறகு பதில் சொல்லியிருக்கவேண்டும். அதைத்தான் விஜய் செய்துள்ளார். விஜய்க்கு என்னுடைய வாழ்த்துகள். அவர் கருத்து உண்மையான கருத்து” என்று தெரிவித்தார்.

கறுப்புப் பணமும்... கபாலி படமும்!

கறுப்புப் பண விவகாரத்தில், மோடிக்குப் பாராட்டு தெரிவித்தும், ‘கறுப்புப் பணம் இனி கடலை மடிக்கத்தான் பயன்படும்’ என்றும் சொன்ன  எஸ்.வி.சேகர் ‘128 கோடி பேர் வாழும் நாட்டில் 16 பேர் இறப்பது பெரிய விஷயமல்ல’ என்றும் சொன்னதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இது பற்றி அவரிடம் நாம் கேட்டபோது, ‘‘நாட்டில் கறுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் வேரறுக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் 80 சதவிகிதத்துக்கு மேலான மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. நிதி நிர்வாகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்போது சில சிக்கல்கள் எழுவது இயல்பானது. அவை, சரி செய்யப்பட்டு வருகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது. சினிமாத் துறையில் கந்துவட்டி நபர்களும், கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களும் இனி படம் எடுக்கிறேன் என்று கோடம்பாக்கம் வரமுடியாது. ஒரு டி.வி. விவாதத்தில் மஹாராஷ்டிர மாநிலத்தில் 16 பேர் இறந்தாகச் சொன்னார்கள். அதற்கு நான், ‘128 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், ஒரு மாநிலத்தில் 16 பேர் இறந்ததைப் பெரிதுபடுத்துகிறீர்கள். இது மிகக் குறைந்த சதவிகிதம்’ என்றுதான் சொன்னேன். இவ்வளவு பேசுபவர்கள், சென்னையில் தண்ணீர் லாரி மோதி கல்லூரி மாணவிகள் மூன்று பேர் பலியானதை மறந்துவிட்டார்களே... அந்த மாணவிகளுக்காகப் பெரிய அளவில் குரல் கொடுக்கவில்லையே... அந்த லாரி ஓட்டுனர் மீண்டும் பணிக்கு வந்துவிட்டார்  என்றுதான் விவாதத்தில் சொன்னேன். அதைத் திரித்து சொல்லிவிட்டார்கள்” என்றார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.