News
Loading...

முடங்கிய கூட்டுறவு சங்கங்கள் - காய் நகர்த்தும் ஆளும் கட்சி!

முடங்கிய கூட்டுறவு சங்கங்கள் - காய் நகர்த்தும் ஆளும் கட்சி!

செல்லாத ரூபாய்களை மாற்ற, இந்தியா முழுக்க சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்கள் அனைத்து  வங்கிகளையும் முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர். சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் வங்கிகள் திறந்திருக்க, நீண்ட வரிசையில் நின்று கால்கடுக்க மக்கள் 500,1,000 ரூபாய்களை மாற்றி வருகின்றனர். ஒருவாரம் கடந்துவிட்ட நிலையிலும், பகல் முழுக்க வங்கிகள் முன்பாகவும் இரவில் ஏ.டி.எம்-கள் முன்பாகவும் மக்கள் அலைமோதுகின்றனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துவிதமான கூட்டுறவு சங்கங்களும் பணப் பரிவர்த்தனை இல்லாமல் ஒருவார காலமாக முடங்கியுள்ளன. இதனால் பணப் பரிவர்த்தனையின்றி விவசாயிகள், தொழிலாளிகள் என லட்சக்கணக் கானோர் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 4,480 கூட்டுறவுச் சங்கங்களும் அதன் கீழ் செயல்படும் வங்கிகளும் உள்ளன. தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளுக்குப் பணம் அனுப்பும் ரிசர்வ் வங்கி, கூட்டுறவு சங்கங்களுக்குப் பணம் வழங்கவில்லை. இதனால் கிராமப்புறத்தில் உள்ள விவசாயிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். தங்களிடம் உள்ள சில ஆயிரம் ரூபாய்களை மாற்றவும் வழியின்றி அவர்கள் சிரமப்படுகிறார்கள்.

கடந்த ஒருவாரமாக கூட்டுறவு சங்கங்கள் முடங்கியுள்ளதாகச் செய்திகள் வெளிவந்த நிலையில், இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த தமிழக அரசு, இப்போது 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சங்கங்கள் முடங்கியுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளது.

முடங்கிய கூட்டுறவு சங்கங்கள் - காய் நகர்த்தும் ஆளும் கட்சி!

கடந்த 16-ம் தேதி கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் சென்னையில் ஆய்வுக்கூட்டம் நடந்துள்ளது. அதன்பிறகு வெளியான செய்திக்குறிப்பில், ‘‘இந்திய ரிசர்வ் வங்கியின் இந்தப் புதிய அறிவிக்கையால் பயிர்க்கடன் வழங்குவதில் ஆண்டுக் குறியீட்டினை முழுமையாக எட்ட இயலாத நிலை எழுந்துள்ளதோடு, தமிழகத்தில் உணவு உற்பத்தியும் வெகுவாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெருவாரியான கிராமப்புற மக்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களிலேயே சேமிப்புக் கணக்குகளின் மூலம் பணத்தை செலுத்தி வருகின்றனர். தற்போது எழுந்துள்ள இச்சூழலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்குகளில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து வருவதுபோல கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உறுப்பினர்கள் செலுத்த முடியவில்லை.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு தரமான உரம், விதைகள் வழங்க இயலவில்லை. அத்தியாவசியப் பணிகளும் பாதிக்கப்பட்டு, அனைத்து வகையிலும் கூட்டுறவுச் சங்கங்கள் செயல் இழந்து முழுவதுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், அவற்றின் 813 கிளைகளும், அவற்றின் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் தமிழக மக்களுக்கு சேவைகளை அளிக்க இயலாமல் முடங்கிப்போயுள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு மேற்கொள்ளவேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம்.  “உடனடியாக ரூ.2,000 நோட்டுகள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. உடனடியாகப் புதிய 500, 100, 20, 10, 50 ரூபாய் நோட்டுகள் கூட்டுறவு சங்கங்களுக்குக் கொடுத்தாலே நாங்கள் டர்ன் ஓவர் பண்ணுவோம். அதற்கான பணத்தை, உடனே ரிசர்வ் வங்கி கொடுக்கவேண்டும். விவசாயிகள் பணத்தைச் செலுத்த உரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அதற்காக, ‘விவசாயிகள் உடனே மிரர் அக்கவுன்ட் ஓப்பன் பண்ணுங்க, அதற்கான சலானைக் காட்டிவிட்டு பொருட்கள் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று நெருக்கடி கொடுக்கக்கூடாது. உடனடியாக மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகத் தேவையான பணத்தை வழங்க வேண்டும்.

முடங்கிய கூட்டுறவு சங்கங்கள் - காய் நகர்த்தும் ஆளும் கட்சி!

விவசாயிகள் டெபாசிட் பணம் எல்லாம் முடங்கி இருக்கிறது. அதனால் இந்த வேண்டுகோளை மத்திய அரசு உடனடியாக ஏற்றுக் கொள்ளவேண்டும். கேரள மாநில அரசு, கூட்டுறவு சங்கங்களின் பணப் பரிவர்த்தனைக்கு நெருக்கடி வராமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெளிவாக மத்திய அரசுக்கு எழுதியுள்ளது. ஆனால், தமிழக அரசு இந்த நிலையை இன்னமும் மத்திய அரசுக்குத் தெளிவாகத் தெரிவிக்காமல், ஆய்வுக் கூட்டம் மட்டும் நடத்தியுள்ளது.

மத்திய அரசே முன்வந்து  ‘கூட்டுறவு சங்கங்களில் பழைய ரூபாய் தாள்களை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று கூறுவார்கள் என தமிழக அரசு எதிர்பார்க்கிறது போல. அப்படி நடந்தால் அதில், கறுப்புப் பணம் வெள்ளையாக மாற்றப்படும் ஆபத்து இருக்கிறது. விவசாயிகள் கணக்குகளில் தலா 2 லட்சம் ரூபாய் டெபாசிட் ஆனாலே பல ஆயிரம் கோடி ரூபாய் பதுக்கல் பணம் வெளியில் வரும் சூழல் இருக்கிறது. ஏனெனில் விவசாயிகளுக்கு வருமானவரி கிடையாது. இதனை அ.தி.மு.க-வினர் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, முறைகேடுகள் நடக்காமல் மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு டர்ன் ஓவர் நடக்கிறது. இப்போது கடந்த 9 நாளாக இந்த வர்த்தகம் முடங்கிப்போயுள்ளது. ‘கூட்டுறவே நாட்டுயர்வு’ என்பது காற்றோடு கரைந்துவிடுமோ?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...