News
Loading...

கறுப்புப் பணத்தைப் பதுக்கும் இடங்களை முதலில் ஒழிக்கவேண்டும்!

கறுப்புப் பணத்தைப் பதுக்கும் இடங்களை முதலில் ஒழிக்கவேண்டும்!

லாயல் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மாணிக்கம் ராமசாமி என்ன சொல்கிறார்?

‘`500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒழித்தது குறுகிய காலத்துக்கு நன்மை பயக்கும் நல்லதொரு நடவடிக்கையாகும். கறுப்புப் பணமானது தங்கத்திலும் வைரத்திலும் முதலீடு செய்யப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியம்.  தங்கத்தை வாங்குவதற்கும் மாற்றிக்கொள்வதற்கும் பணப் பரிவர்த்தனை அல்லாத வேறு முறைகளை அனுமதிக்க கட்டாயப்படுத்த வேண்டும். பருத்தி விவசாயிகள்கூட தங்களிடம் உள்ள பருத்தியை ஆலைகளுக்கு விற்கும்போது வங்கி மூலம் பணம் பெறுவதற்கான பரிவர்த்தனைகளை ஒப்புக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது  தங்கம் வாங்கும்போது மட்டும் அவர்களால் வங்கி மூலம் பணம் செலுத்த முடியாது என்கிற வாதம் மடத்தனமானது. 

மேலும், நாடு முழுவதுமுள்ள நிலங்களுக்கு அதனுடைய உண்மையான சந்தை மதிப்பை எடுத்துச் சொல்லும்படியான டிஜிட்டல் மேப் ஒன்றை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அரசாங்கமானது  நிலத்தை எளிதில் கையகப்படுத்த முடியும். இன்றைக்கு பெரு நகரங்களுக்கு வெளியே நிலத்தின் மதிப்பு மிகக் குறைவாக இருப்பதால், கறுப்புப் பணத்தைப் பதுக்க ரியல் எஸ்டேட் என்பது எளிதான வழியாக உள்ளது. 

தங்கக் கடத்தல் மூலம் தீவிரவாதிகளுக்குத் தேவையான பணம் எளிதாகக் கொண்டுபோய் சேர்க்கப்படுகிறது. கறுப்புப் பணத்தைப் பதுக்க கடத்தல் தங்கம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து தங்கத்தைக் கொண்டுவருவதற்கான இறக்குமதி வரியை முற்றிலும் ஒழிப்பதன் மூலமே கடத்தல் மூலம் தங்கம் கொண்டுவருவது தடுக்கப்படும். 

கறுப்புப் பணம் கடத்தல், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. கடத்தல் மூலம் தங்கமானது நம் நாட்டுக்கு வருவதை ஒழித்தால்தான் கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்க முடியும். 

ஆக மொத்தத்தில், கறுப்புப் பணம் பதுக்கும் இடங்களை ஒழிக்காவிட்டால், கறுப்புப்பணம் ஒரு சிறிய இடைவேளைக்குப்பின் மறுபடியும் விஸ்வரூபம் எடுக்கும்!’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...