News
Loading...

கந்து வட்டியில் இருந்து காப்பாற்றிய உழவர் சந்தை!

கந்து வட்டியில் இருந்து காப்பாற்றிய உழவர் சந்தை!

கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி தானியங்கள், காய்கறிகளை உற்பத்தி செய்யும் கிராமப்புற மக்கள் இடைத்தரகர்களிடம் சிக்கி ஏமாறாமல் இருக்க, கருணாநிதி ஆட்சியில் உருவாக்கப்பட்டதுதான் உழவர் சந்தை. தமிழத்தில் முதல் உழவர் சந்தை இதே நவம்பர் மாத்தில்தான் உருவானது. 1999 நவம்பர் 14ம் தேதி உருவான முதல் உழவர் சந்தையின் இன்றைய நிலை என்ன?

விவசாயிகள் உற்பத்திசெய்யும் நெல் உட்பட பயிர், தானிய வகைகளைக் கொள்முதல்செய்ய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மாவட்டம்தோறும் செயல்படுத்தி வரும் அரசு, காய்கறிகளை கொள்முதல் செய்ய எந்த ஏற்பாடும் செய்யாததால், காய்கறி,பழங்களை  அநியாய விலைக்கு தரகு வியாபாரிகளிடம் கொடுக்கும் நிலை இருந்தது. இதனால், உற்பத்திசெய்யும் விவசாயிக்கும் பலனில்லாமல் வாங்குகின்ற மக்களுக்கும் பலனில்லாமல், இடையில் இருக்கும் வியாபாரிகள் கொள்ளை லாபம் பார்த்து கொண்டிருந்தனர். இதை மாற்ற அறிவித்ததுதான் உழவர் சந்தை திட்டமாகும். அதன்படி மதுரை அண்ணா நகரில் முதல் உழவர் சந்தை 14-11-1999-ல் கருணாநிதி வந்து திறந்துவைத்தார்.

இன்று தமிழகம் முழுவதும் 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. முதன்முதலில் திறந்த அண்ணா நகர் உழவர் சந்தை எப்படியுள்ளது என்பதை பார்க்க நேரில் சென்றோம்.  

மதுரை மக்கள் உழவர் சந்தையைக் கைவிடவில்லை. ரொம்ப பிஸியாக இருக்கிறது. மலையில், தோட்டத்தில், வீட்டுக்கொல்லையில் விளைவிக்கப்பட்ட மருந்து போடாத நாட்டுக் காய்கறிகள் பச்சை பசேலென்று பசுமை மாறாமல் குவிக்கப்பட்டிருக்கின்றன. விலை மிக மலிவு, வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த கத்திரிக்காய், வெண்டை, பீர்க்கங்காய், புடலை, கொத்தவரங்காய், தக்காளி என்று 20 ரூபாய்க்கு ஒரு பை நிறைய அள்ளிப்போடுகிறார்கள். மலையில் விளையும், உருளை, கேரட், பீட்ரூட், நூக்கல், காலிஃபிளவர், பட்டர்பீன்ஸ், பச்சைப் பட்டாணி, பச்சை மொச்சை, முள்ளங்கி என்று அங்கு இல்லாத காய்கறிகளே இல்லை. முருங்கை, மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, அகத்தி, வல்லாரை, தண்டு, அரைக்கீரை என்று அனைத்து கீரைகளும் கிடைக்கின்றன. 

பெரியகடைகளில் காய்கறிகளையும், ஃப்ரீசரில் ஸ்டாக் வைத்து விற்பனை செய்து, அதன் உண்மையான சுவையும், சத்துமில்லாமல் விற்பனை செய்து வருகிறார்கள். உழவர் சந்தையில் அனைத்தும் ஃப்ரெஷ், ஃப்ரெஷ்தான்.

அதைப்பற்றி அண்ணா நகர் உழவர் சந்தையின் ஏ.ஓ.சுரேஷிடம் பேசினோம். ‘‘தமிழகம் முழுக்க 180 உழவர் சந்தைகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் ஏழு உள்ளன. இதில் மதுரை மாநகருக்குள் நான்கு. இது தமிழகத்திலயே முதலாவதாகத் திறக்கப்பட உழவர் சந்தைங்கிகிற பேரை பெற்றது. இங்கு மொத்தம் 80 கடைகள். இங்கு வந்து வியாபாரம் செய்கிற அனைவருமே சுற்று வட்டாரத்திலிருக்கும் விவசாயிகள்தான். தோட்டம் வைத்திருப்பவர்கள், வீட்டில் பயிரிடுபவர்கள்தான். உள்ளே வியாபாரிகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தோட்டக்கலைத் துறையினர் வெரிபிகேஷன் செய்து இவர்களுக்கு வெள்ளை அட்டை கொடுப்பார்கள்.  தினமும் சீட்டு குலுக்கிப் போட்டு அதில் வரும் நம்பர் பிரகாரம் கடைகளை போட்டுக்கொள்ள வேண்டும். வியாபாரம் செய்ய அதிகமாக விவசாயிகள் வந்தால், ஒரே கடையை ரெண்டு பேருக்குப் பிரித்து கொடுப்போம். இங்கு கடைகளுக்கு வாடகை இல்லை. தராசுகளை நாங்களே கொடுக்கிறோம். பேருந்தில் கொண்டு வருவதற்கும் அவர்களுக்குக் கட்டணமில்லை. இங்கு கழிப்பறைகளை மெயின்டெயின் பண்ண மகளிர் சுய உதவிக் குழுவிடம் ஒப்படைத்திருக்கிறோம். இங்கு வாகனங்களை நிறுத்துவர்களிடம் பார்க்கிங் கட்டணம் பெற்று அந்த செலவை செய்கிறார்கள்’’ என்றார்.

இங்கு கடை வைத்திருக்கும் சிவனம்மாள், ‘‘என்னோட ஊரு கரடிக்கல். உழவர் சந்தை தொடங்குன காலத்துலருந்து யாவாரம் செய்றேன். ஊருல நாங்க விளைவிச்சு கொண்டாந்து விக்கிறோம். அரசாங்கம் எங்களுக்கு எல்லாம் பண்ணி கொடுத்திருக்காங்க. எந்த கஷ்டமும் இல்லை. ஜனங்களும் நம்பி வாங்குறாங்க’’ என்றார்.

சக்திவேல் என்பவர், ‘‘இந்த உழவர் சந்தையில வியாபாரம் செஞ்சுதான் குடும்பத்தை கஷ்டமில்லாமல் நடத்தி புள்ளைகுட்டிகளைப் படிக்க வெச்சிருக்கோம். மக்களுக்கு நல்ல காய்கறிகளை விலை மலிவா கொடுக்கிறோம். சில மக்கள் பெரிய கடையில காய்கறி வாங்கி பணத்தை அதிகமா செலவு செய்றாங்க. இங்கேவந்து நல்ல காய்கறிகளை வாங்கிட்டு போகலாம்’’ என்றார். 

இதைப்போலவே மதுரை மாநகருக்குள் அமைந்திருக்கும் மற்ற மூன்று உழவர் சந்தைகளும் மக்களால் அதிகம் விரும்பி செல்லும் இடமாக உள்ளது. உழவர் சந்தைகள் வேளாண்மை துறையின் கீழ் வந்தாலும், வேளாண் வாரிய வணிகத்துறை என்ற தனி துறை மூலம் இயங்கி வருகிறது. உழவர் சந்தைகள் கந்து வட்டி கொடுமையிலிருந்து காய்கறி விவசாயிகளைக் காப்பாற்றியுள்ளது. இங்கு இவர்களுக்கு கடன் கொடுக்கவும், சேமிப்புப் பழக்கத்தை உருவாக்கவும் கூட்டுறவு வங்கியும் செயல்படுகிறது. 

திட்டங்களை முடக்காமல் தொடர்ந்தாலே நன்மைதான் என்பதற்கு இது சாம்பிள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.