News
Loading...

‘டமாரம்’ ட்ரம்ப்!

‘டமாரம்’ ட்ரம்ப்!

பரபரப்பான சீட்டுக்கட்டு ஆட்டம் ஒன்றில் யாரும் எதிர்பார்க்காமல் ஒருவர் வெற்றிபெறுவார். அவரிடம் ஒரு ஜோக்கர் கார்டு இருக்கும். அனைவருக்கும் அது ஜோக்கர் கார்டு. ஆனால், வென்றவருக்கு அதுதான் ஹீரோ கார்டு. இதையேதான் அமெரிக்க தேர்தல் முடிவுகளும் நமக்கு விளக்கிக் கூறுகின்றன. தோற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட டொனால்ட் ஜான் ட்ரம்ப் தான் அமெரிக்காவின் 45-வது அதிபர்.

மூன்று விஷயங்கள்!

தேர்தல் நாளுக்கு முதல்நாள் வரை அமெரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் ஹிலரி தான் அடுத்த அதிபர். முதல் பெண் அதிப‌ரை வரவேற்க அமெரிக்கா தயாராகிவிட்டது என்று நினைத்திருந்தனர். அமெரிக்கர்களுக்கும் ட்ரம்ப் போன்றவர்களைத்தான் பிடித்திருக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்கள். ஆரம்பம் முதலே மூன்றே விஷயங்கள்தான் ட்ரம்ப்பின் பிரதானமாக இருந்தது. வெற்றி, ஒப்பந்தம், சுவர் எழுப்புவது இதைத்தான் ட்ரம்ப் வலியுறுத்தி வந்தார். இஸ்லாமியர்களை வெளியேற்றுவேன் என்று சர்ச்சை எழுப்பினார். ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க ட்ரம்ப்பால் மட்டுமே முடியும் என்றனர்.

ட்ரம்ப் பிரசாரங்களில் வாய்க்கு வந்தததை உளறுகிறார் என்றவர்களுக்கு ட்ரம்பின் பதில் ‘ஒரு காலத்தில் அமெரிக்காவின் பொருட்களால் உலகம் நிறைந்திருந்தது. இன்று உலகின் பொருட்களால் அமெரிக்கா நிறைந்துள்ளது’ என்று அமெரிக்காவின் பொருளாதாரம்  வேலைவாய்ப்பு பற்றிச் சொன்னார்.

‘பெண் அதிபர் ஆவதா?’

தான் பேசுவதைவிட தன் மீதான விமர்சனங்களைத் தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார் என்பதுதான் உண்மை. ட்ரம்ப் தனது நிலைப்பாடுகளை எந்த விமர்சனத்துக்காகவும் மாற்றிக்கொள்ளவில்லை. இதுதான் அவரைப் பிடிக்க முக்கிய காரணமானது. ஒரு அமெரிக்கரின் மனநிலை என்பது கொஞ்சம் அழுத்தமானதாகவே இருக்கும். அவர்களுக்கு விடாப்பிடியாக இருப்பவர்களைப் பிடிக்கும். அதோடு வரலாற்றை மாற்றி எழுதவும் விரும்பாத நாடாக இருந்து வந்துள்ளது அமெரிக்கா. ஒரு பெண்ணை அதிபராக்கி பார்க்கக் கூடாது என்பதில் அமெரிக்கர்கள் இன்றுவரை ஆணித்தரமாக இருக்கிறார்களோ என்றும் யோசிக்க வேண்டி உள்ளது.

ட்ரம்பின் வெற்றிக்கு இன்னொரு காரணம், அவரது பிராண்ட் இமேஜ். தன்னைப் பற்றிய தாக்கத்தை மக்கள் மத்தியிலும், அவருக்கு அதிக ஆதரவுள்ள மாகாணங்களிலும் குறையாமல் பார்த்துக்கொண்டார்.

அந்த நாட்டுக்கு அவர்தான் சரி!

அமெரிக்கா ஒரு முதலாளித்துவ நாடு. விடாப்பிடியான ஒரு தலைவர் வேண்டும். அமெரிக்கா தான் கிரேட் என புகழ்பாடும் பிராண்டிங் நபர் வேண்டும். சரியாகச் சொல்லப்போனால் ட்ரம்ப் தன்னை அமெரிக்காவின் பிராண்ட் அம்பாசிடர் என்ற மாடல் ஆக ஆக்கிக்கொண்டார்.

இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் மிகப் பெரிய போர்களை நடத்தி உள்ளார்கள். அப்படி ஒரு போரை ஒரு பெண்ணால் செய்ய முடியாது என்ற எண்ணமும் ஹிலரியின் தோல்விக்கு காரணம் ஆனது. ஹிலரியின் உடல் நிலையும் ட்ரம்புக்கு சாதகமாக அமைந்தது.

ஆரம்பத்தில் இந்தியர்களின் வேலைக்கு உலைவைக்கும் பேச்சுகளை வீசிய ட்ரம்ப், கடைசியில் மோடிதான் பெஸ்ட் என்றார். இந்துக்கள் பற்றி கூறியது, வேலைவாய்ப்பு, அமைதி என பேச்சில் தேன் கலந்தார். ஒபாமா காலத்தில் அமெரிக்கா பெரிதாக வளரவில்லை, மீண்டும் ஜனநாயகக் கட்சிக்கு ஏன் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அமெரிக்கர்கள் நினைத்திருக்கலாம். அதனால்தான் அமெரிக்கர்கள் ‘மேக் அமெரிக்கா க்ரேட் எகெய்ன்’ என்பதை நம்பி இருப்பார்கள். இந்த வெற்றி ட்ரம்பின் மீதுள்ள நம்பிக்கை என்பதைத் தாண்டி ஹிலரியின் மீதுள்ள சந்தேகம் என்பது ட்ரம்புக்கும் நன்றாகத் தெரியும்.

‘டமாரம்’ ட்ரம்ப்!

பொருள் அதிகாரம்! 

அமெரிக்காதான் அனைத்து நாடுகளின் நாணயத்தின் மதிப்பை நிர்ணயம் செய்யும் இடத்தில் உள்ளது. அந்த டாலரில் சிறு ஆட்டம் ஏற்பட்டாலும் அது உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும். அமெரிக்க டாலரின் மதிப்பு, அமெரிக்க மக்களின் வாங்கும் திறன், வேலை வாய்ப்பு, வட்டிவிகிதம், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் உள்ளிட்ட கமாடிட்டிகளின் வர்த்தகப் போக்கு உள்ளிட்ட பல பொருளாதார காரணிகளைச் சார்ந்து இருக்கிறது.

தற்போதைய அமெரிக்க பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை நீண்டகாலத்துக்குத் தாங்கிப் பிடிக்கும் நிலையில் இல்லை. 2008-ல் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அமெரிக்கா தனது பொருளாதார நிலையை வளர்த்திருப்பதற்கான வலுவான காரணிகள் எதுவும் இதுவரை உருவாகவில்லை. எனவே, அமெரிக்கா தனது வருங்கால பொருளாதாரத்தை எந்த வகையில் தக்கவைத்துக்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் வளர்ச்சியும், உலக நாடுகளின் வளர்ச்சியும் இருக்கும். 

பருவநிலை!

இரண்டாவதாக உலகம் சந்தித்து வரும் மிக சிக்கலான பிரச்னை பருவநிலை மாற்றம். இந்தப் பிரச்னை பல வகைகளிலும் உலக நாடுகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. பருவநிலை மாற்றத்துக்கு முக்கிய காரணம் மனிதனின் நுகர்வு கலாசாரம் நிலையற்று இருப்பதே. அமெரிக்கா அதில் முதல் இடத்தில் இருக்கிறது. உதாரணத்துக்கு ஒரு அமெரிக்கர் ஒரு நாள் பயன்படுத்தும் மின்சாரத்தை 61 இந்தியர்கள் பயன்படுத்தலாம். அமெரிக்காவின் நுகர்வு என்பது உலக நாடுகளின் வறுமையோடு தொடர்பு கொண்டதாக இருக்கிறது என்பதோடு, அது பருவநிலை மாற்றத்துக்கும் காரணமாக இருக்கிறது. எனவே பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள விஞ்ஞானத்தையும், தொழில்நுட்ப சக்தியையும் எந்த வகையில் கையாளப் போகிறார் என்பதும் முக்கியமான விஷயமாக உள்ளது.

‘டமாரம்’ ட்ரம்ப்!

பவர் சென்டர்!

மேலும் உலக நாடுகளுடனான உறவு. உலகிலேயே சக்தி வாய்ந்த ராணுவமாக அமெரிக்கா தான் இருக்கிறது என்பது போன்ற பிம்பத்தை அந்நாடு உருவாக்கி வைத்திருக்கிறது. உலகின் பிற நாடுகளுக்கிடையில் ஏதேனும் பிரச்னை என்றால், அவை என்ன செய்ய வேண்டும்? போர் செய்ய வேண்டுமா... கூடாதா? - என்பதைத் தீர்மானிக்கும் வகையில் உலகின் ‘பவர்சென்டராக’ அமெரிக்காதான் உள்ளது. எனவே உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ராணுவ ரீதியான சிக்கல்களை அமெரிக்கா சந்திக்க வேண்டி வரலாம். அதிலும் ட்ரம்ப் பிரசாரத்தின் போது கூறியபடி இஸ்லாமியர்களை வெளியேற்றுவோம் என்பது போன்ற நிலைப்பாடுகளோ, அவர் மீது வைக்கப்படும் இனவாத பிம்பமோ வெளிப் பட்டால் அது உள்நாட்டில் பெரிய கலவரங்களை உண்டுபண்ணலாம். இவற்றையெல்லாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுமட்டு மல்லாமல் சுகாதாரத் துறை, எரிசக்தித் துறை போன்றவற்றிலும் சவால்கள் உள்ளன. இவற்றை யெல்லாம் அவர் சந்திக்க வேண்டியிருக்கிறது.

மகிழ்ச்சி தருவாரா?

இத்தகைய சவால்களை எல்லாம் கடந்து, அமெரிக்காவோடு சேர்த்து பிற நாடுகளையும் அரவணைத்துக்கொண்டு, அமெரிக்காவை வளர்ச்சியில் கொண்டுசெல்லும் அதிபராகத்தான் அவரை உலகம் எதிர்பார்க்கிறது. அரசியல் பின்புலம் இல்லாத ட்ரம்ப் இதனையெல்லாம் சமாளித்தால்தான் அதிபராக இருக்க முடியும். ஒரு வியாபாரியாக மட்டும் இருக்கும் நபரை உலகம் விரும்பாது. தேர்தல் நேரத்திலேயே டமாரம் அடிக்கத் தெரிந்த ட்ரம்புக்கு நன்றாகத் தெரியும். க்ரேட் அமெரிக்காவை மீண்டும் உருவாக்குவேன் என்று கூறிய ட்ரம்ப் உண்மையிலேயே உருவாக்கினால் மகிழ்ச்சி.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.