News
Loading...

மோடி மோத வேண்டியது யாரோடு?

மோடி மோத வேண்டியது யாரோடு?

பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று வெளியிட்ட அறிவிப்பை, ‘இது கறுப்புப் பணத்தின் மீதான போர்’ என்று குறிப்பிட்டு பலர் வரவேற்றுள்ளனர். ஆனால், கடந்த ஒரு வாரமாக ரூபாய் நோட்டுக்களை மாற்றவும், டெபாசிட் செய்யவும், செலவுக்கு ஏ.டி.எம்-களில் பணம் எடுக்கவும் மக்கள் படும் திண்டாட்டம் சொல்லிமாளாது. இதனால், ஏழு நாட்களில் 33 மரணங்கள் நிகழ்ந்துள்ளன; அவற்றில் சில தற்கொலைகள். ஆனால், ‘இதனால் சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்’ என்று மோடி எளிதாகச் சொல்லிவிட்டார்.

யாரை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் சொல்கிறாரோ, யார் எல்லாம் இதனால் கதிகலங்கி இருக்க வேண்டுமோ அவர்கள் எல்லாம் எந்தப் பதற்றமும் இல்லாமல் வழக்கம்போல நடமாடுகிறார்கள். சில கோயில் உண்டியல்களில் போடப்பட்ட பணத்தைத் தவிர, எங்குமே பெரியளவில் கறுப்புப் பணம் வெளிவரவில்லை. 

மோடி அரசின் இந்த நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஒரு தொடக்கம் மட்டுமே. நேர்மையாக சம்பாதித்து, அதைப் பணமாக வைத்திருந்தவர்களின் பெரும்பான்மை பணம் வங்கிக்கு வந்து கொண்டிருக்கிறது.  அவ்வளவுதான். கறுப்புப் பணம் வெளியே வரவேண்டுமெனில், பிரதமர் மோடி, தான் நிஜமாகவே மோத வேண்டிய ஆட்களை இனிதான் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் வேறு யாருமல்ல கறுப்புப் பணத்தை உருவாக்குபவர்களும், அதனைப் பதுக்கிவைத்திருக்கும் பணமுதலைகளும்தான்.   

பொருளாதார நிபுணர்களின் கருத்துப்படி, கறுப்புப் பண முதலைகள் பெரும்பாலும் தங்களது பணத்தைச் சொத்துக்களாக மாற்றிவிடுகின்றனர். அவர்கள், பல கோடி ருபாய் கறுப்புப் பணத்தை எளிதில் பதுக்க வழிசெய்துகொடுப்பவை ரியல் எஸ்டேட், தங்கம் மற்றும் வெளிநாட்டு வங்கிகள் போன்றவை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(ஜி.டி.பி) ரியல் எஸ்டேட் 10 சதவிகிதத்துக்கும் மேல்  பங்கு வகிக்கிறது. இந்தியாவில் புழங்கும் கறுப்புப் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு ரியல் எஸ்டேட்டில்தான் புழங்குவதாக ஆய்வுக் கணிப்புகள் சொல்கின்றன.

மோடி மோத வேண்டியது யாரோடு?

அதேபோல், இந்தியாவில் 18 ஆயிரம் டன் தங்கம் புழங்குகிறது. தங்க வர்த்தகப் பரிவர்த்தனைகளில் 70-80 சதவிகிதம் கறுப்புப் பணமும், கடத்தல் தங்கமும்தான். இவையல்லாமல் கறுப்புப் பணத்தை ஹவாலா மூலம் டாலர் மற்றும் பிற நாட்டு கரன்சிகளாக மாற்றி வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவது, ஸ்விஸ் போன்ற வெளிநாட்டு வங்கிகளில் இருப்பு வைப்பது என பதுக்கி விடுகிறார்கள். சிலர் தங்களது பணத்தை அந்நிய நேரடி முதலீடு, பங்கேற்பு ஆவணங்கள், நிதி நிறுவனங்கள் மூலம் முதலீடு போன்ற வழிகள் மூலம் கறுப்பை வெள்ளையாக்கி இந்தியாவுக்குள் கொண்டுவந்துவிடுகின்றனர். மேலும் அறக்கட்டளைகள், ஷெல் நிறுவனங்கள் மூலமும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறார்கள். 

மேலும், சர்வதேச அளவில் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் சவாலாக இருப்பவை தீவிரவாதமும் கடத்தலும். இதில் பயன்படுத்தப்படுவதும், உருவாக்கப்படுவதும் கறுப்புப் பணமும், கள்ளப் பணமும்தான். இது எங்கே, யார் மூலம், எப்படி கைமாறுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவால். இவை மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்கள், தங்களுக்கு இருக்கும் இமேஜை காட்டியே வங்கிகளிடம் எந்த உத்தரவாதமும் இல்லாமல், பல ஆயிரம் கோடிகளைக் கடனாக வாங்கிவைத்துள்ளன. அவை நாளடைவில் திருப்பி செலுத்தாத வாராக் கடனாக மாறிவருகின்றன. மொத்த வாராக் கடன், சமீபத்திய நிலவரப்படி    ரூ.8 லட்சம் கோடிக்கும் மேல். 

நேர்மையாக உழைத்து, சிறுகச்சிறுகச் சேர்த்துவைத்து வாழ்க்கையை நடத்தும் சாதாரண மக்களை வீதியில் நிற்கவைத்த மோடி, நிஜமாகவே மோதவேண்டியது இந்தப் பணமுதலைகளிடமும், தீவிரவாதிகளிடமும்தான். இந்த முதலைகள் ஒருவேளை சிக்கினாலும், வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று அங்கு வாங்கிக்குவித்த சொத்துக்களை வைத்து சொகுசாக வாழ்கின்றன. இவர்களுக்கு எதிரான நடவடிக்கைதான், மிக மிக அவசரமாக மேற்கொள்ள வேண்டியது. ஆனால், அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை. இனிமேலும் தாமதிக்காமல் அந்த நடவடிக்கையை அரசு தொடங்க வேண்டும். கறுப்புப் பணம் உருவாகும் இடங்களை எல்லாம் ஒழிக்க வேண்டும். ஊழல் மற்றும் லஞ்ச லாவண்யத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இவைதான் கறுப்புப் பணத்தின் மீதான உண்மையான போராக இருக்க முடியும். 

அத்தகைய ஒரு போரை எதிர்பார்த்துத் தான், பல இன்னல்களைச் சகித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள் மக்கள். 

செய்வீர்களா மோடி?

மோடி மோத வேண்டியது யாரோடு?
மோடி மோத வேண்டியது யாரோடு?

ஆதாரம்: இந்திய ரிசர்வ் வங்கி

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.