News
Loading...

‘சூத்ரதாரி’ சுவாமி!

‘சூத்ரதாரி’ சுவாமி!

கறுப்புப் பணத்தை ஒழிப்பேன் என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் மோடி வாக்குறுதி அளித்தார். அதற்கான அதிரடி நடவடிக்கையை  இப்போது எடுத்துள்ளார் மோடி. இப்படி ஒரு நிலைக்கு மோடியைக் கொண்டுவந்தது, பி.ஜே.பி-யின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி. திடீர் திடீரென அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு அரசியல் வட்டாரத்தை ஆட்டம்காண வைக்கும் சுப்பிரமணியன் சுவாமியால், பல ஆண்டுகளாக மத்திய அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்திய விவகாரம், கறுப்புப் பண ஒழிப்பு பஞ்சாயத்துதான். 

‘சூத்ரதாரி’ சுவாமி!

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்தது முதல் சுப்பிரமணியன் சுவாமி பல நேரங்களில், கறுப்புப்பண ஒழிப்பு தொடர்பான கருத்துகளை வெளியிட்டுவந்தார். பிரதமர் மோடிக்கு பகிரங்கக் கடிதமும் எழுதினார். கறுப்புப் பணத்தை மீட்கவும் ஒழிக்கவும் 6 வழிகளை விளக்கினார். இப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததும், அதை முதலில் வரவேற்றவரும் சுவாமிதான். ‘‘தேசத்தின் பாதுகாப்புக்கு தேவையானதை செய்த மோடிக்கு வாழ்த்துகள். கள்ள நோட்டுகள் மூலம் ஐ.எஸ்.ஐ தீவிரவாதிகளுக்கு கிடைத்த சக்திகள் வேரறுக்கப்பட்டுள்ளன. தீவிரவாதம் நிலைகுலைந்து விட்டது’’ என ட்வீட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சுவாமி.

பி.ஜே.பி ஆட்சிக்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், இதே கறுப்புப் பணம்  விவகாரம் பற்றி  பேசிப் பேசியே குடைச்சல் கொடுத்து வந்தார் சுப்பிரமணியன் சுவாமி. அப்போது, அதற்குப் பதில் சொல்லமுடியாமல் திண்டாடிவந்தது ஐ.மு.கூ அரசு. அந்த அரசு தன் சாதனைகளை வெளியிட்டால், அவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கை படாதபாடுபடுத்துவார் சுவாமி. ‘ஊழலும் கறுப்புப் பணமும்  நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் கேன்சர். அதை ஒழித்தால்தான் நாடு உருப்படும்’ என பகிரங்கமாகவே அவர் பேசிவந்தார். “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 100 பேரின் கறுப்புப் பணத்தை வெள்ளை ஆக்க ஐ.மு.கூ அரசு பொதுமன்னிப்பு வழங்கிவிட்டது” என்று கூறி பரபரப்பை உருவாக்கினார். 

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.வி.ஐ.பி-க்கள், தொழில் அதிபர்கள் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ச்சியாக  சுவாமி அறிக்கைகள் வெளியிட, ஆட்சியை பறிகொடுத்த பின்னரும், காங்கிரஸ் கட்சி ஆட்டம் கண்டது இவரது அறிக்கைகளால்.

ஐ.மு.கூ அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்து வந்த கறுப்புப் பண விவகாரத்தையே முன்னிலைப்படுத்தி, பி.ஜே.பி-யினர் ஸ்கோர் செய்தனர். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் பேசிய நரேந்திரமோடி, ‘‘கறுப்புப் பணம் மீட்கப்பட்டால், ஒவ்வோர் இந்தியருக்கும் 15 லட்சம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்குகளில் போடப்படும்” என்று சொன்னார். தேர்தலில் வெற்றிபெற்று 2014-ம் ஆண்டு மே 27-ம் தேதி மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடந்தது. கறுப்புப் பணத்தை மீட்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க முடிவெடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்புப் புலணாய்வுக் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. அது, எதிர்பார்த்த அளவுக்கு வேகமெடுக்கவில்லை.

எனவே, பி.ஜே.பி அரசின் நூறு நாள் சாதனை கொண்டாட்டாத்தில் கறுப்புப் பணம் மீட்புப் பிரச்னை முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. இதற்கு, பி.ஜே.பி தலைவர்களால் உரிய பதில் சொல்ல முடியவில்லை. ஆரம்பம் முதலே கறுப்புப் பணத்தை பற்றி பேசிவந்த சுப்பிரமணியன் சுவாமி, “கறுப்புப் பணத்தை மீட்பதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு உரிய அக்கறை இல்லை” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  நீதிபதி  எம்.பி.ஷா கமிட்டி, கறுப்புப் பணம் பதுக்கியோரின் பட்டியலைத் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறது. இந்த நிலையில், கறுப்புப் பணத்தை மீட்போம் என ஜெட்லி விளக்கம் அளித்தார்.

ஆனால், அதற்கும் கிடுக்குப்பிடி போட்டார் சுவாமி. “ நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் மத்திய அரசு நியமித்த சிறப்புப் புலணாய்வுக் குழுவுக்கு அலுவலகம்கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. டெல்லியில் ஓட்டல் அறையில்தான் இவர்களின் அலுவலகம் செயல்படுகிறது. கறுப்புப் பணத்தை மீட்க வேண்டும் என்ற அக்கறை மத்திய அரசுக்கு உண்மையாக இருக்கிறது என்றால், இந்த குழுவின் செயல்பாடுகள் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும்” என்றார். பி.ஜே.பி-யில் இருந்து கொண்டு இப்படி தொடர் ஏவுகணைகளை மத்திய அரசு மீது வீசிவந்த சுவாமி, 2015-ம் ஆண்டில் வெளிநாடு சென்றிருந்தபோது “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப் பட்டுள்ள 120 லட்சம் கோடி கறுப்புப் பணத்தை பிரதமர் மோடி இந்தியாவுக்கு மீட்டுத் தருவார்” என்று கூறினார்.

அதன்பின்னர் நாடு திரும்பிய சுவாமி, அடுத்த குண்டை நிதி அமைச்சருக்கு எதிராக வீசினார். “அருண் ஜெட்லிக்கு கணக்கில் காட்டாமல் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கும் யுக்தி தெரியவில்லை. இதே மாதிரி அவர் செயல்பட்டால், அவரால் கறுப்புப் பணத்தை மீட்க முடியாது. 120 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் என்பது ஓர் ஆண்டு வசூலாகும் வருமான வரியைப்போல 60 ஆண்டு வருமான வரிக்குச் சமம். என் பேச்சை அருண் ஜெட்லி கேட்பது இல்லை” என்று வெளிப்படையாகக் கூற, அது கட்சிக்குள்ளும் பெரும் கோப அலைகளை ஏற்படுத்தியது. ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது கருத்தைத் தொடர்ந்து பதிவுசெய்துவந்தார் சுவாமி. 

சுவாமி ஒருபுறம் அழுத்தம் கொடுக்க, மறுபுறம் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நீதிமன்றத் துக்கு இந்த விவாகரத்தைக் கொண்டுவந்தார். அதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. கறுப்புப் பண ஒழிப்புக்கு வழிதெரியாமல் மத்திய அரசு திண்டாடியது. அதன் பிறகுதான், “தானாக முன்வந்து வருமானத்தைத் தெரிவித்து வரி செலுத்தும்” திட்டத்தை இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு அறிவித்தது. கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க 45 சதவிகிதம் வரி கட்ட வேண்டும் என்ற நிபந்தனை அந்தத் திட்டத்தை வேகமெடுக்க முடியாமல் தடுத்துவிட்டது. இந்த திட்டமும் தோல்வியில் முடிய, அதன் பிறகுதான் கறுப்புப் பணம் ஒழிப்பு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார் மோடி. கறுப்புப் பண ஒழிப்பு குறித்து பல்வேறு ஐடியாக்களையும் பிரதமருக்கு சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ளார். அதன்படிதான் இந்த அறிவிப்பு. கறுப்புப் பணம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி ஐடியாக்களை முதன் முதலில் அளித்ததே, தி.மு.க-வினர் மீது எழுந்த 2ஜி வழக்குக்குப் பிறகுதான்! 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.