News
Loading...

இல்லாத வீட்டுக்கு இ.எம்.ஐ. கட்டுறோம்!

இல்லாத வீட்டுக்கு இ.எம்.ஐ. கட்டுறோம்!

சென்னை மவுலிவாக்கத்தில் தகர்க்கப்பட்டது 11 மாடிக்கட்டடம் மட்டுமல்ல... 76 குடும்பங்களின் எதிர்காலமும்தான். சொந்த வீடு என்பது நடுத்தர மக்களின் கனவு. சென்னை போன்ற மாநகரங்களில் சொந்த வீடு  கனவு நிறைவேறுவது அவ்வளவு எளிதானது அல்ல. பல ஆண்டுகளாக வயிற்றைக்கட்டி, வாயைக்கட்டி சேமித்த பணம், நகைகள் மூலம் முன்பணம் கட்டி, அத்துடன் வங்கியில் வீட்டு லோன் பெற்று மவுலிவாக்கத்தில் வீடு வாங்கியவர்களின் நிலைதான் விவரிக்க முடியாத பரிதாபம். தங்களுக்கென கட்டப்பட்ட வீடும் தரைமட்டமாகிவிட்டது. இப்போது, இல்லாத வீட்டுக்குப் பல ஆயிரம் ரூபாய் மாதத் தவணை கட்டவேண்டிய துயர நிலைக்கு இவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 

 அடுத்து என்ன செய்வது, தங்கள் பிரச்னையை யாரிடம்போய் முறையிடுவது என்று புரியாமல் மனதளவில் நொறுங்கிப்போயிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம்.   

ஐ.டி கம்பெனி ஊழியரான மணிகண்டன், “சென்னையில் ஒரு சொந்த வீடு வேண்டும் என்பதற்காக மவுலிவாக்கம் அபார்ட்மென்ட்டில் வீடுவாங்க முடிவுசெய்தேன். பதினைந்து ஆண்டுகளாகச் சேர்த்துவைத்த பணம் மொத்தத்தையும் முன்பணமாகச் செலுத்தினேன். பிறகு, வங்கியில் கடன் வாங்கினேன். சொந்த வீட்டுக் கனவு நிறைவேறப்போகிறது என்ற ஆசையில் இருந்தேன். ஆனால், என் தலையில் பேரிடி விழுந்துவிட்டது. தேசிய வங்கியில்தான் கடன் கொடுத்தது. சி.எம்.டி.ஏ உள்ளிட்ட அரசாங்க அமைப்புகளின் அனுமதி பெற்றுத்தான் அந்த அடுக்குமாடி கட்டப்பட்டது. ஆனால், கட்டடம் இப்போது தரைமட்டாகிவிட்டது.  அங்கு வீடு வாங்கிய எல்லோரும் இப்போது நடுத்தெருவில் நிற்கிறோம். 

அந்த அடுக்குமாடியை இடிக்கப்போகிறார்கள் என்று செய்தி வந்தவுடனே, தேசிய நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. முதலமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர்கள் அலுவலகம் என எல்லா இடங்களிலும் மனுக்கள் அளித்துள்ளோம். எந்தப் பலனும் இல்லை. கட்டடம் கட்டினால் உறுதியாக நிற்கும் என்றும், இடம் வலுவாக இருக்கிறது என்றும் வங்கிகளும், அரசு நிர்வாகமும் சான்றிதழ் அளித்தனர். அதை நம்பித்தான் வீடு வாங்கினோம். ஆனால், இன்று அவர்களே எங்களைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். யாரிடம் போய் முறையிடுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று வேதனையுடன் சொன்னார்.

இல்லாத வீட்டுக்கு இ.எம்.ஐ. கட்டுறோம்!

இடிக்கப்பட்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கியவர்களில் பலர் முதியோர்கள். தங்கள் பி.எஃப் பணம் முழுவதையும்  இதில் முதலீடு செய்துள்ளனர். “இந்தக் கட்டடத்தை இடித்தபோது எடுத்துக்கொண்ட அக்கறையை,  இந்தக் கட்டடத்தைக் கட்டும்போது அரசு காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வாழ்நாள் முழுக்க நான் உழைத்துச் சேர்த்தப் பணத்தை, சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதற்காக முதலீடு  செய்தேன்.  ஆனால்,  இப்படியாகிவிட்டதே” என்று வேதனையுடன் சொன்னார் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி ஓய்வுபெற்ற பெரியவர் ஒருவர்.

விரைவில் பணி ஓய்வுபெறவிருக்கும் வங்கி ஊழியர் லலிதா ராமமூர்த்தி, தன் மனவேதனையை  கண்ணீரோடு விவரித்தார். “என் கணவர் பொதுப்பணித் துறையில் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். அவர் ஒரு நேர்மையான அதிகாரி. அவர், ஓய்வுபெற்ற பிறகு கிடைத்த பணத்தையும், என் சம்பாத்தியத்தையும் சேர்த்து, 60 லட்சம் ரூபாய் கொடுத்து 11-வது மாடியில் ஒரு ஃபிளாட் வாங்கினோம். 2014 ஜூலை 28-ம் தேதி பிளாக் - பி இடிந்து விழுந்தது. அதற்கு முந்தைய நாள்தான் அங்கு சென்று டைல்ஸ் கலர் தேர்வு செய்துவிட்டு வந்தோம். 80 சதவிகிதம் அளவுக்குக் கட்டட வேலைகள் முடிந்து இருந்தன.ஆனால், அடுத்த நாளே மொத்தமும் இடிந்துவிட்டது என்பதை எங்களால் தாங்கவே முடியவில்லை.

நாங்கள் மேற்கு மாம்பலத்தில் சொந்த வீட்டில் வசித்து வந்தோம். அதை விற்றுவிட்டு மொத்தப் பணத்தையும் மவுலிவாக்கத்தில் கொடுத்து பிளாட் வாங்கினோம். எல்லாம் இப்போது பறிபோய்விட்டது. 

அந்தக் கட்டடத்துக்கு சி.எம்.டி.ஏ அப்ரூவல் கொடுத்தது. வங்கிகள் எல்லாம் சான்றிதழ் கொடுத்திருந்தன. அதை எல்லாம் நம்பித்தானே, சொத்து வாங்கினோம். இப்போது, அந்த வீடே இல்லை.  ஆனால், அந்த வீட்டுக்குக்  கடன் வாங்கியவர்களுக்கு, கடனைக் கட்டுமாறு நோட்டீஸ்  அனுப்புவது எந்த வகையில் நியாயம்? எங்களிடம் அந்த 60 லட்சம் ரூபாய் இருந்திருந்தால் அதன் மூலம் கிடைக்கும் வட்டியைக் கொண்டு கௌரவமாக வாழ்ந்திருப்போம். ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இழந்துவிட்டு நிற்கிறோம். நாங்கள் வயதானவர்கள்.எங்களால் இனி சம்பாதிக்க முடியாது. வாழ்நாள் முழுக்க கெளரவமாகவே வாழ்ந்துவிட்டோம். ஆனால், இப்போது செலவுக்குப் பிள்ளைகளை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டோம். எங்களுக்கு தமிழக அரசு உதவிசெய்ய வேண்டும்” என்றார் கண்ணீருடன்.

இல்லாத வீட்டுக்கு இ.எம்.ஐ. கட்டுறோம்!

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டுள்ளன. அந்த வழக்கில் ஆஜராகிவரும் வழக்கறிஞர் நளினி சிதம்பரத்திடம் பேசினோம்.  “பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. தி.மு.க தரப்பில் மு.க.ஸ்டாலின் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். ஃபிளாட் வாங்கியவர்கள் டெல்லியில் உள்ள நுகர்வோர் அமைப்பில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளனர். சுமார் 30 கோடிக்கு மேல் கொடுத்து இருக்கிறார்கள். அதைத் திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று வழக்கில் குறிப்பிட்டோம். மேலும், அந்த நிலத்தில் வேறு எதுவும் பில்டர் தரப்பில் வில்லங்கம் பண்ண கூடாது என்றும் ஒரு ஆர்டர் கேட்டுள்ளோம். சென்னையிலும் ஒரு ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். சி.எம்.டி.ஏ. பிளான் அனுமதி கொடுத்ததே தவறு. அதுக்கு அரசும் அதிகாரிகளும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். இரண்டு தரப்பில் யாராவது ஒருவர் பொறுப்பு எடுத்துக்கொண்டு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு மீரட்டில் நடந்த பொருட்காட்சியில் தீவிபத்து ஏற்பட்டு 40 பேருக்கு மேல் இறந்து விட்டனர். அது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு போடப்பட்டுள்ளது. இதை, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதியிடம் தெரிவித்தோம்.

மவுலிவாக்கத்தில் ஃபிளாட் வாங்கியவர்கள் கடன்களைக் கட்டி வருகின்றனர். சிலரால் கட்ட முடியவில்லை. ஃபிளாட்களை செக்யூரிட்டி வைத்துதான் வங்கிகள் லோன் கொடுத்தன. இப்போது செக்கியூரிட்டியே போய்விட்டது. 60 பேர் இறந்ததால் அந்த  நிலத்தை யாராவது வாங்க முன்வருவார்களா எனத் தெரிய​வில்லை. இப்படிபட்ட சூழலில் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கிலும், ‘ஃபிளாட் வாங்கியவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும்’ எனக் குறிப்​பிடப்பட்டுள்ளது. அந்த வழக்கு வரும் ஜனவரியிலும், நுகர்வோர் அமைப்பில் தொடரப்பட்ட வழக்கு வரும் ஜூலையிலும் விசாரணைக்கு வருகிறது. அதை அட்வான்ஸ் செய்யுமாறு கோரியுள்ளோம்” என்றார். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.