News
Loading...

விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!

விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு!

தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்ப்பையடுத்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். 

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு அதிகமாக இருப்பதாக கூறி, அங்கிருந்து எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. 

இதற்கான ஆய்வுப் பணிகளும் நிலம் கையகப்படுத்தும் பணிகளும் நடைபெற்றன. ஆனால் இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீத்தேன் எரிவாயு திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய நிலங்கள் பாழாகி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்று போராட்டங்கள் நடைபெற்றன. 

விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் களத்தில் இறங்கி போராடினர். இந்நிலையில் இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட முடிவு செய்துள்ளதாகக் கூறினார். 

டெல்டா மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு மற்றும், நில கையகப்படுத்துதலில் நிலவிய குழப்பம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இந்த திட்டம் தொடர்பாக இனி ஆய்வுகள் நடத்தப்படாது என்று கூறிய தர்மேந்திர பிரதான், அதே நேரம் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

அதேபோல் கரும்பிலிருந்து எத்னால் எரிபொருள் தயாரிக்கும் திட்டத்திற்கும், தமிழக அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். கெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளதையும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சுட்டிக்காட்டினார்.

English Summary : Central Government announce to give up Methen scheme in Tamilnadu 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...