News
Loading...

காங்கிரஸுக்கு வகுப்பெடுக்கிறார் கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸுக்கு வகுப்பெடுக்கிறார் கார்த்தி சிதம்பரம்

வெளிப்படையாக நான் பேசுவதுதான் எனது ப்ளஸ்; அதுவே எனக்கு மைனஸாகவும் உள்ளது” என்று சிரித்துக் கொண்டே பேச ஆரம்பிக்கிறார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரான கார்த்தி சிதம்பரம். ‘இலங்கைப் பிரச்னையில், காங்கிரஸ் பார்வை மாறவேண்டும்’ என்ற இவரின் பேச்சு கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நம்முடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார் கார்த்தி சிதம்பரம்.

‘‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட பின் கட்சியின் நிலை எப்படி உள்ளது?’’

‘‘திருநாவுக்கரசர் தலைவராகி இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. அமைப்பு ரீதியான ஐம்பது ஆண்டு பிரச்னைகளை உடனே அவராலும் சரிசெய்ய முடியாது. எல்லோரையும் சந்திக்கிறார். மண்டல மாநாடுகளை நடத்துவது நல்ல முயற்சி. கட்சியின் நிலையைத் தெரிந்துகொள்ள அதிகம் பயணம் செய்கிறார். தலைவராக இருப்பவர் தலைநகரில் இருந்து அரசியல் செய்வதைவிட பயணங்கள் செய்து கட்சியினரைச் சந்திக்கவேண்டும். அதை அவர் செய்கிறார்.’’

‘‘ `காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் பொய்யான கணக்குகளை இனியும் கூறவேண்டாம்’ என்று பேசியுள்ளீர்களே?’’

‘‘கட்சியின் உறுப்பினர்கள் விஷயத்தில் பொய்யாக ஒரு கணக்கைச் சொல்லுவது காங்கிரஸ் கட்சியில் மட்டும் அல்ல.... எல்லாக் கட்சியிலும் உள்ளது. அனுதாபியைக்கூட கட்சியின்  உறுப்பினராக நினைத்துக்கொள்வதுதான் கட்சிகளின் வழக்கமாக உள்ளது. அவர்கள் உறுப்பினர்கள் அல்ல. ஓட்டு போடுபவர்களையும் கட்சியின் உறுப்பினராக நினைத்துக்கொள்ளக் கூடாது. இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன்;  காங்கிரஸ் கட்சியில் 70 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. கட்சியின் கொள்கையை விரும்பிக் கட்சியில் சேர்பவர்கள்தான் உறுப்பினர்கள். அப்படி தொகுதிக்கு ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருந்தால் போதும் என்றுதான் சுட்டிக்காட்டினேன்.’’

‘‘ `காங்கிரஸ் கட்சியினர் பழைய வரலாறுகளைப் பேசுவதைவிட எதிர்காலத் திட்டங்களைப் பேசுங்கள்’ என்று கூறியுள்ளீர்களே?’’

‘‘உலகமெங்கும் எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் எதிர்காலத்துக்குத்தான் வாக்களிக் கிறார்கள். கடந்த காலத்தைப் பற்றிச் சொல்லவேண்டாம் என்று சொல்லவில்லை. அதைவைத்து மட்டும் மக்களைச் சந்திக்கக் கூடாது. எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் சொல்லவேண்டும். காங்கிரஸ் கட்சியி்ன் மேடைகளில், பெரும்பாலும் சுதந்திரப் போராட்டத்தை மையமாக வைத்தே பேசுகிறார்கள். அதைப் பேசவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், அதுதான் எதிர்காலம் என்பது போலப் பேசுவதை மக்கள் ஏற்கவில்லை. இன்றைய சமூகம் நிகழ்கால அரசியலையும் எதிர்காலத்தில் நம்பிக்கையூட்டும் விஷயங் களையும் மட்டுமே பார்க்கிறார்கள். அப்படி காங்கிரஸ் கட்சி இருக்கவேண்டும் என்று சொன்னேன்.’’

‘‘ `இலங்கைத் தமிழர் விஷயத்தில், காங்கிரஸ் கட்சியின் பார்வை மாற வேண்டும்’ என்று பேசியுள்ளீர்களே?’’

 ‘‘இலங்கைப் பிரச்னையில், காங்கிரஸ் கட்சியின் பார்வை ராஜீவ் காந்தி கொலையை மையமாக வைத்தே உள்ளது. அந்தச் சம்பவம் கொடூரமான விஷயம். சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகளையும் மன்னிக்க முடியாது. ஆனால், இன்று உள்ள இளைய சமூகத்துக்கு 2009-ல் நடைபெற்ற போரும், விடுதலைப் புலிகள் அழிவும் சாதாரண மக்களின் மரணமும்தான் தெரிகிறது. எனவே, காங்கிரஸ் கட்சியும் ராஜீவ் கொலையை மையமாக வைத்து இதனைப் பார்க்காமல், 2009 சம்பவத்தையும் வைத்துப் பார்க்கவேண்டும்.  நாம் நம்முடைய பார்வையிலேயே எல்லா விஷயத்தையும் பார்க்க முடியாது. சமூகம் மாறிக்கொண்டே இருக்கிறது. தமிழக காங்கிரஸ்,  கால அளவில் இருந்து மாறிவரவேண்டும். அங்குள்ள மக்களுக்கு இன்னும் முழு சுதந்திரம், வளர்ச்சி என எந்த மாற்றமும் வரவில்லை. அதற்கான முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட வேண்டும்.’’

‘‘மோடியின் ‘செல்லாக்காசு அறிவிப்பை’ அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்கிறார்களே?’’

‘‘மோடியின்  குறிக்கோள் நல்லது. ஆனால்,  திட்டமிடாத முடிவு இது. இந்த நாட்டில் 86 சதவிகிதப் பணப் புழக்கம் 500, 1,000 ரூபாய்களாகத் தான் உள்ளது. இதைத் திடீர் என மாற்றுவது, வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் காரின் டயரை சுடுவது போல. இதைப் படிப்படியாகச் செய்து இருக்கவேண்டும். என்னென்ன பாதிப்புகள் எந்தெந்த இடங்களில் வரும் என்பதை அவர்கள் முன்கூட்டியே யோசிக்கவில்லை. இதனால், பொருளாதாரம் வளருமா? அல்லது வீழுமா? என்பதையும் அவர்களால் சொல்ல முடியவில்லை. உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதலில் 100 ரூபாய் நோட்டின் புழக்கத்தை அதிகரித்திருக்க வேண்டும். 1-ம் தேதிதான் இதன் பாதிப்பை நடுத்தர மக்கள் உணர்வார்கள். இதனால், கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது. எதிர்காலத்தில் வேறு விதங்களில் கறுப்புப் பணம் உருவாகத்தான் செய்யும். பொருளாதாரத்தைச் சங்கிலித் தொடராகத்தான் பார்க்கவேண்டும். இந்தப் பணப்பிரச்னை உற்பத்தி விகிதத்தையும் குறைத்துவிடும். நாணயத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது.’’

‘’பொது சிவில் சட்டப் பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு தவிர எல்லோருக்கும் ஒரே சட்டம்தான். பொதுசிவில் சட்டம் வேண்டும் என்றால், அதற்கு ஒரு வரைவு வேண்டும். இந்து மதத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் அதற்கு என்று தனி வரிச்சலுகை உள்ளது. அது இந்துத் தனிச்சட்டம். அதே போல் ஏழு தலைமுறைகள்  உறவுகளுக்குள் திருமணம் செய்யக்கூடாது என்று ராஜஸ்தானின் ராஜ்புத்திர சமூகத்துக்கு சட்டம் உள்ளது. இந்தச் சட்டத்தை மாற்ற பி.ஜே.பி தயாரா? முஸ்லிம்கள் சட்டத்தில் மட்டும் ஏன் இந்த அக்கறை? இவர்கள் சொல்லும் சீர்திருத்தம் அரசாங்கம் கொண்டுவரக்கூடாது; சமுதாயத்தில் தான் கொண்டுவர வேண்டும். ஏனெனில், அது அரசாங்கத்தின் வேலை அல்ல!’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...