News
Loading...

ராஜன் மறுத்தார்... உர்ஜித் அனுமதித்தார்!

ராஜன் மறுத்தார்... உர்ஜித் அனுமதித்தார்!

ரிசர்வ் பேங்க் கவர்னரைப் பற்றி சாமான்ய மக்களும் பேச ஆரம்பித்து உள்ளார்கள். அரசியல்வாதிகள் தலை உருள்வதைப் போல ரிசர்வ் வங்கி கவர்னர் தலையும் உருள்கிறது.

ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து ரகுராம் ராஜன் வெளியேறி, உர்ஜித் பட்டேல் வந்த ஒரே மாதத்தில் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது பல சந்தேகங்களைக் கிளப்புகிறது. ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கை ஆறு மாத காலமாகத் திட்டமிடப்பட்டு இருந்தது என்றால், இது குறித்து அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனிடம் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் இதற்கு மறுப்புத் தெரிவித்த காரணத்தால்தான் அவர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்று டெல்லி தகவல்கள் சொல்கின்றன. இதுமட்டுமல்லாமல் வட்டி விகிதக் குறைப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் அரசுக்கும் அவருக்கும் ஆகாமல் இருந்ததும், ரகுராம் ராஜன் மீது சுப்பிரமணியன் சுவாமி வைத்த குற்றச்சாட்டுகளும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடந்த 20-வது லலித் தோஷி மெமோரியல் நிகழ்வில், ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். அதில் இந்திய நிதிநிலை குறித்தும், எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் அவரது பேருரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில்  உரையாற்றிய போது ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவது பற்றியும், கறுப்புப் பணத்தை ஒழிப்பது பற்றியும் அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது அவர் சில விஷயங்களை மனம் விட்டுப் பேசினார்.

“கறுப்புப் பணத்தைப் புழக்கத்தில் இருந்து ஒழிக்கப் பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் இதற்கு முன் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படி செய்தால் உடனே மக்கள் முன்வந்து,  ‘என்னிடம் இருக்கும் கோடிக் கணக்கான ரொக்கத்தைப் பெட்டியில் எப்படி வைத்திருப்பேன்’ என்று வங்கிகளில் வந்து கொடுத்துவிட்டு, அந்தப் பணம் எப்படி வந்தது என்பதையும் தெரிவிப்பார்கள் என்று நினைத்துத்தான் அந்த நடவடிக்கையை எடுத்தார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள் பிற வழிகளைத் தேடிக் கண்டுபிடித்தார்கள்.  

தங்களிடம் உள்ள பணத்தை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து தெரிந்தவர்கள் மூலம் பணத்தை மாற்றுவது, தங்கமாக மாற்றுவது போன்ற வழிகளில் பணத்தை மாற்றிக்கொண்டார்கள். இந்த வழிகளையும் நம்பாத சிலர் கோயில் உண்டியல்களில் கொண்டுபோய் கொட்டினர். இதுதான் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும்போது நடந்தது. கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றைத் தாண்டி, வரிக் கணக்கு தாக்கல் செய்வதன் மூலமும் வரிச் சலுகைப் பெற்று அதன் மூலமும் கறுப்பை வெள்ளையாக்கித் தப்பித்துக்கொள்வதில், கவனம் செலுத்துகிறார்கள். அதற்கு விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட துறைகள் உதவிகரமாக இருக்கின்றன. 

நம்முடைய வரிவிதிப்பும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் நியாயமானதாகவே இருக்கிறது. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக 33 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் 39 சதவிகிதம் வரியுடன் சேர்த்து மாநில வரிகளும் உண்டு. மொத்தமாக 50 சதவிகிதம் வரி அவர்கள் செலுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில் வரிகள் குறைவாக இருந்தும் வரி செலுத்துபவர்கள் வரி செலுத்த விரும்புவதில்லை என்பது புரியாத ஒன்றாகவே இருக்கிறது. வரி விதிப்பு மற்றும் வரி வசூலிப்பு நிர்வாகத்தில் நாம் மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்தினால் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள இந்த நவீன யுகத்தில், பணத்தைப் பதுக்குவது அவ்வளவு எளிதான ஒன்றாக இருக்காது” என்று அவர் கூறினார்.

‘ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதினால் மட்டும் கறுப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது’ என்று ரகுராம் ராஜன் உறுதியாக நம்புவதையே அவரது இந்த விளக்கம் நமக்கு உணர்த்துகிறது. பிரதமர் மோடி கூறுவதுபோல் கடந்த ஆறு மாதங்களாக இந்த நடவடிக்கையைத் திட்டமிட்டு வந்ததாகக் குறிப்பிடுவதில் இருந்து, ரகுராம் ராஜனுக்கும் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப் போவது முன்பே தெரிந்திருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

ரகுராம் ராஜன் இப்போது ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து இருந்தால் சமீபத்திய செல்லாக்காசு நடவடிக்கைகளுக்கு சம்மதம் தெரிவித்திருக்க வாய்ப்பில்லை. ரகுராம் ராஜனை பதவியில் இருந்து நீக்கிவிட்டு தங்களது முடிவுகளுக்கு தலையாட்டும் ஒருவரை நியமிக்க முடிவு செய்துதான் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேலை கவர்னராக நியமித்து இருக்கிறார்கள். உர்ஜித் பட்டேல் கவர்னராக நியமிக்கப்பட்ட ஒரே மாதத்தில் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டிருகின்றன. ‘ஆறு மாதங்களுக்கு முன்பிருந்தே ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவது பற்றித் திட்டமிட்டோம்’ என்று சொல்வது உண்மையாக இருந்தால் புதிய ரூபாய் நோட்டுகளில் உர்ஜித் பட்டேல் கையெழுத்து வந்தது எப்படி? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுந்து நிற்கிறது. 

ஆக ரகுராம் ராஜன் மீது அவதூறுகளை பரப்பியதில் ஆரம்பித்து, உர்ஜித் பட்டேல் வந்து பழைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்றதுவரை அனைத்தும் திட்டமிட்டே நடத்தப்பட்டிருக்கிறது என்பது தெரிகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு இருந்தால், தேவையான ரூபாய்களை முன்கூட்டியே அச்சடித்து வைத்து இருந்தால், இப்போதைய விமர்சனங்களில் பாதியைத் தவிர்த்து இருக்கலாம். யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருந்திருக்காது. பிரதமர் மோடி, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகிய மூன்று தரப்பும் என்ன செய்வதென்று தெரியாமல் நாளுக்கொரு அறிவிப்பு வெளியிட்டு மக்களையும் வங்கிகளையும் பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளன. 

‘‘ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதற்கு ஒத்துழைப்புத் தராததால் பதவியில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல், இந்தத் திட்டம் குறித்த ஆலோசனையில் இருந்தும் முற்றிலும் ரகுராம் ராஜன் தவிர்க்கப்பட்டிருக்கிறார். மேலும், புதிதாகப் பொறுப்பேற்ற உர்ஜித் பட்டேலுக்கும் அதற்கான கால அவகாசம் தரப்படவில்லை” என்றும் டெல்லி வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு, இது குறித்து எங்கும் ஒரு வார்த்தைக் கூட ரகுராம் ராஜன் பேசவில்லை. அவர் பேசினால் பல உண்மைகள் வெளியே வரலாம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.