News
Loading...

பணம் பறித்த மருத்துவமனை உயிரையும் பறித்துவிட்டது!

கேலக்ஸி மருத்துவமனை

யிரைக் காக்கும் உன்னதப் பணியில் ஈடுபட வேண்டிய மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பணத்துக்காக மனித உயிரைப் பறிப்பதாக எழும்  குற்றச்சாட்டுகளுக்கு முடிவே கிடையாதுபோல. 

திருநெல்வேலியில் உள்ள கேலக்ஸி மருத்துவமனை இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. சங்கரன்கோவில் அருகேயுள்ள மலையன்குளம் என்ற ஊரைச் சேர்ந்த விவசாயியான ராம்ராஜ், உடல்நலம் குன்றிய நிலையில், இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மரணம் அடைந்தார். இவரது மரணத்துக்கு கேலக்ஸி மருத்துவமனையின் அலட்சியமும் பணத்தாசையும்தான் காரணம் என்று குற்றம்சாட்டுகின்றனர், ராம்ராஜின் உறவினர்கள்.

ராம்ராஜின் மைத்துனரும் திரைப்படப் பாடலாசிரியருமான வே.ராமசாமியிடம் பேசினோம். “என் அக்கா சுந்தரத்தாயின் கணவர்தான் ராம்ராஜ். அக்டோபர் 20-ம் தேதி கீழே விழுந்து மயக்கமானதால், நெல்லை கேலக்ஸி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனக்குத் தகவல் தெரிந்து அங்கு செல்வதற்குள் அவருக்குத் தலையில் அறுவைச் சிகிச்சை செய்திருப்பதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம், ‘என் மாமாவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப் போகிறோம். அங்கேயே அவருக்குச் சிகிச்சை அளித்துக்கொள்கிறோம்’ என்றேன். அதற்கு அனுமதிக்காத மருத்துவர்கள், ‘அவர் வென்டி லேட்டரில் உள்ளார். வேறு மருத்துவ மனைக்கு மாற்ற முயன்றால் இறந்து விடுவார்’ என்று அச்சுறுத்தினார்கள்.

நானும், எனது அக்காவும் பலமுறை மருத்துவர்களிடம் கெஞ்சினோம். அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. சிகிச்சை என்ற பெயரில் பல பரிசோதனைகளைச் செய்ததுடன், நிறைய பணம் பிடுங்கினார்கள். அக்டோபர் 26-ம் தேதி மாலையில் என்னையும், எனது அக்காவையும் கூப்பிட்டு, ‘நாங்க எவ்வளவோ சிகிச்சை அளித்தோம்.  எங்களால் முடியவில்லை. இன்னும் சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்துவிடும்’ என்று கேஷுவலாகச் சொன்னார்கள். அப்போது, ‘அரசு மருத்துவ
மனைக்குக் கொண்டுசென்று பார்த்துக்கொள்கிறோம்’ என்று நாங்கள் சொன்னபோது, ஆம்புலன்ஸ் தரமறுத்தார்கள். உடனே, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் விக்ரமனுக்குத் தகவல் தெரிவித்தேன். அவரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். அதற்குள், மருத்துவமனையால் வரவழைக்கப்பட்ட லோக்கல் போலீஸார்,  என்னை மிரட்டினர். என் மாமாவை வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவிடாமல் ஒருமணி நேரம் தடுத்தனர். அதனால், என் மாமாவின் உயிர் பிரிந்தது. 

தங்களின் தவற்றை மறைக்கும் நோக்கத்தில் திட்டமிட்டே தாமதப்படுத்தினார்கள். என் மாமாவின் மரணத்துக்கு முழுக்க முழுக்க மருத்துவமனைதான் காரணம். மருத்துவமனைமீது உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். எங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை போராடுவேன்” என்றார் ஆவேசத்துடன்.

ராம்ராஜ் மரணத்துக்கு நீதிகேட்டும், கேலக்ஸி மருத்துவமனைமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சங்கரன்கோவிலில் கண்டனக் கூட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, ஆதித் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில்  கொளத்தூர் மணி பேசியபோது, “ஏழை, எளிய மக்கள் நோயாளிகளாக சிகிச்சைக்கு வரும்போது, தனியார் மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுவது வேதனைக்குரியது. பணத்துக்காக நோயாளிகளுக்குத் தேவையில்லாத பரிசோதனைகளை எடுக்கச்சொல்லி வற்புறுத்துவதோடு, உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழப்பு ஏற்படவும் காரணமாகி விடுகிறது. ராம்ராஜ் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதனால், அவருக்கு என்னவிதமான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


இது குறித்து கேலக்ஸி மருத்துவமனையின் தரப்பில் கேட்டபோது, “ராம்ராஜ், தலையில் பலத்த  காயமடைந்த நிலையில்,  மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்குத் தேவையான சிகிச்சையை அளித்தோம். அவர், வென்டிலேட்டர் உதவியுடன் இருந்ததால் ஆம்புலன்ஸில் வெளியே கொண்டுசெல்வது ஆபத்தானது என்று தெரிவித்தோம். ஒரு வாரம், உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமலேயே அவர் மரணம் அடைந்துவிட்டார். நாங்கள் யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களது சிகிச்சை வெளிப்படையாகவே நடந்தது. எந்தவித விசாரணைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம்” என்றனர்.

உயிரைக் காக்க வேண்டிய மருத்துவர்களும், மருத்துவமனை நிர்வாகமும் ஒருபோதும் இது போன்ற சர்ச்சைகளுக்கு  இடம்கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.