News
Loading...

அழகான பேட்டைத் துள்ளல், ஆலமரத்தில் சரக்கோல் குத்து...

அழகான பேட்டைத் துள்ளல், ஆலமரத்தில் சரக்கோல் குத்து...

‘‘சபரிமலை யாத்திரையை எப்படி, எந்த வழியாக மேற்கொள்ள வேண்டும்? வழியில் அனுசரிக்க வேண்டிய நியதிகள் என்னென்ன?’’ ‘‘பெரிய பாதை வழியாகப் பகவானைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் எறிமேலி என்ற இடத்தை வந்து அடைவார்கள்.’’ ‘‘இது ஏன் ‘எறிமேலி’ என்று பெயர் கொண்டது?’’ ‘‘மகிஷமுகி என்ற அரக்கியுடன் பகவான் போரிட்டார். அப்போது அவள் மீது முதல் அம்பை எய்தது அதாவது எறிந்தது, இந்த இடத்திலிருந்துதான். அதனால் இந்த இடம் ‘எறிமேலி’ என்று ஆனது. பின்னால் இது மருவி ‘எருமேலி’ என்று அழைக்கப்படுகிறது. இங்கே ‘பேட்டைத் துள்ளல்’ என்ற ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் பங்குகொள்வார்கள். 

இது, மகிஷமுகியுடன் மணிகண்டன் போரிட்டதை நினைவுறுத்தும் ஒரு நிகழ்ச்சி. மகிஷமுகியைப் பகவான் வெற்றி கொண்டதை பக்தர்கள் கொண்டாடும் ஒரு பாவனை. மாலையணிந்து, கருப்பு உடை  தரித்துவரும் பக்தர்கள் தம் முகத்தில் வண்ணப் பொடிகளைப் பூசிக்கொள்வார்கள். பம்பை, உருமி போன்ற வாத்தியக் கருவிகளை இசைத்துகொண்டே, குதித்துக் குதித்து ஆடுவார்கள். அவ்வாறு ஆடும்போதே ‘சுவாமி திந்திக்க தோம், தோம்; ஐயப்ப திந்திக்க தோம், தோம்’ என்று கோஷமிடுவார்கள். 

இந்த நடனம், மகிஷமுகியை வென்றதை கண்ட பிறகு அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஐயப்பன் ஆடிய சந்தோஷ வீர நடனம் என்று பல்லாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பகவான், அரக்கியை வெற்றி கண்டதுபோல, தாங்களும் தங்கள் மனத்தில் தோன்றும் தீய எண்ணங்களை வெற்றிகொள்ள வேண்டும் என்பதுதான் அவ்வாறு பேட்டைத் துள்ளல் ஆடும் ஐயப்ப பக்தர்களின் நோக்கம். முக்கியமாக, மத ஒற்றுமைதான் இந்த எறிமேலியின் மகத்துவம்! இந்தப் பகுதியில் வாபர் எனும் இஸ்லாமியர் வசித்து வந்தார். 

அழகான பேட்டைத் துள்ளல், ஆலமரத்தில் சரக்கோல் குத்து...

கொள்ளைத் தொழிலில் ஈடுபட்டிருந்த அவர் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களிடம் இருந்து வழிப்பறி செய்து அதனை ஏழைகளுக்கு கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்பகுதியை ஆண்ட அரசரால் அவரை கட்டுப்படுத்த முடியாமல் போயிற்று. உடனே, அரசர் ஐயப்பனின் உதவியை நாடினார். ஐயப்பனும் அரசருக்கும், குடிமக்களுக்கும் உதவுவதற்காக வாபரை சந்தித்துப் பேசினார். ஆனால், பாலகனாக இருந்த ஐயப்பனின் பேச்சை வாபர் கேட்பதாக இல்லை. 

எனவே, வேறு வழியில்லாமல், வாபரை வதம் செய்யத் தீர்மானித்தார் ஐயப்பன். அதைத் தெரிந்துகொண்ட வாபர், “என்னைக் கொன்றால் என்னை நம்பியிருக்கும் ஏழை மக்களுக்கு யார் ஆதரவு?’’ என்று கேட்டார். அவர்களைத் தான் பார்த்துக் கொள்வதாக கூறிய ஐயப்பன், வாபரை நல்வழிப்படுத்தினார். அதுமுதல் வாபர் வழிப்பறியில் ஈடுபடாமல், தன்னால் இயன்றவகையில் ஆக்கபூர்வமான வழியில் ஏழைமக்களுக்கு உதவிகளைச் செய்தார். ஐயப்பன் தான் அளித்த வாக்குப்படியே அந்த ஏழை மக்களுக்கு அருள்பாலிக்க, அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். 

ஆகவே, சபரிமலை செல்லும் வழியில் உள்ள வாபரின் பள்ளிவாசலுக்கு ஐயப்ப பக்தர்கள் செல்வதும், தாங்கள் விரதத்தையும், பிரம்மச்சர்யத்தையும் முழுமையாக கடைப்பிடித்தோம் என்று உறுதி செய்துவிட்டும், பிறகு யாத்திரையைத் தொடர்வது வழக்கமாகிவிட்டது. இந்த மசூதிக்கு வரும் பக்தர்களுக்கு விபூதியை பிரசாதமாக தருவதும் சிறப்பு. இவ்வாறு பேட்டைத் துள்ளல் ஆடுபவர்களில் சபரிமலைக்கு முதன் முறையாக வரக்கூடியவர்கள் யாராவது இருப்பார்கள். 

இவர்கள் ஆடி முடித்தபின் இவர்களுக்கு ஒரு சரக்கோலும், ஒரு கருப்பு நாடாவும் கொடுக்கப்படும். இப்படி முதன்முறையாக ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர் ‘கன்னிசாமி’ என்று அழைக்கப்படுவார். இந்தக் கன்னிசாமிகளுக்கு, துளசிமாலை அணிவித்து, விரதத்தைத் தொடக்கி வைத்து, மலைப் பயணத்துக்கும் கூடவே வரும் குருசாமி, ஒவ்வோர் இடத்திலும் தேவையான ஆலோசனைகளை வழங்குவார். அந்த வகையில், கன்னி சாமிகளுக்குச் சரக்கோலும், கருப்பு நாடாவும் அவர் வாங்கித் தருவார்.’’

‘‘எதற்காகச் சரக்கோலும், கருப்பு நாடாவும்? அதை வைத்துக்கொண்டு கன்னிசாமி என்ன செய்வார்?’’ ‘‘அது, கன்னிசாமி முதன்முறையாக அங்கு தான் வந்திருப்பதைப் பதிவு செய்வதற்காக. அதுவும் குறிப்பாக எதற்காக என்றால், தர்ம சாஸ்தாவை மணம் புரிய விரும்பிய மகிஷமுகிக்காக! அவளை வதம் செய்தபோது தான் அரூபமாகத் தொடர்ந்து இவ்வுலகில் வாழ விரும்புவதாகவும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஐயப்பன் தன்னை மணந்து கொள்ளவேண்டும் என்றும் ஐயப்பனிடமே ஒரு வரம் கேட்டிருந்தாள். 

அதாவது, சபரி மலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களில் எந்த ஒரு வருடமாவது ஒரு பிரம்மச்சாரிகூட வரவில்லை என்றால், அப்போது அந்த வரம் பலிக்கும்! அப்போது மகிஷமுகியைத் தான் திருமணம் செய்து கொள்வார்! ஆனால், நித்திய பிரம்மச்சாரியாகத் திகழும் ஐயப்பன் அந்த வாய்ப்பு அவளுக்குக் கிட்டிவிடாதவகையில் பிரம்மச்சாரி பக்தர்கள் தவறாமல் மலைக்கு வருகிறார்கள். ஆகவே இன்றுவரை ஒவ்வொரு வருடமும் பிரம்மச்சாரி யாராவது வராமலிருப்பாரா என்று ஆவலுடன் கணக்கெடுப்பாள் மகிஷமுகி. 

அதனால், சரக்குத்தியும், கருப்பு நாடாவும் பெற்றுக் கொள்ளும் பிரம்மச்சாரியாகிய கன்னிசாமி, சரங்குத்தி என்ற இடத்தை அடைந்து, அங்கேயிருக்கும் ஆலமரத்தில், தான் கொண்டுவரும் சரக்கோலைக் குத்தி, கருப்பு நாடாவை மரத்தடியில் போட்டு வணங்குவார். வருடம் தப்பாமல் இந்த ஆலமரத்துக்கு வந்து பார்ப்பாள் மகிஷமுகி. அங்கே புதிதாகக் குத்தப்பட்டு நிற்கும் சரக்கொத்திகளையும், புதிதாகப் போடப்பட்டிருக்கும் கருப்புப் பட்டைகளையும் பார்த்து, பெருமூச்சு விட்டு, அடுத்த வருடத்திற்காகக் காத்திருப்பாள்!’’ 

‘‘ஓஹோ! சரி, இந்தப் பேட்டைத் துள்ளல் எப்போது முடியும்? இது ஒரு தொடர் நிகழ்ச்சியா?’’ ‘‘இந்தப் பேட்டைத் துள்ளல் பகவானுடைய மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, ஆலயம் திறக்கப்படும் நாளிலிருந்து நடைபெறும். இதை, வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் சபரிமலை யாத்திரைக்காக வருபவர்கள் மேற்கொள்கிறார்கள். அவர்களை அடுத்து, பரம்பரைப் பரம்பரையாக வரும் ஆலங்காட்டுக்காரர்களும், அம்பலப்புழாக்காரர்களும் இங்கு வந்து துள்ளுவதோடு இந்த நிகழ்ச்சி நிறைவு பெறும். இவர்கள் மகரசங்கராந்தி தினத்துக்கு முன்னாலோ அல்லது அதே நாளிலோ இங்கே பேட்டை துள்ளல் ஆடி, இந்நிகழ்ச்சியை முழுமையடையச் செய்வார்கள். அதற்குப் பிறகு வரும் பக்தர்கள் யாரும் பேட்டைத் துள்ள மாட்டார்கள்.’’

‘‘ஆஹா!’’ ‘‘இந்த எருமேலியை, சபரிமலைக்கு வரும் நுழைவாயில் என்றே சொல்லலாம். இங்கிருந்து காட்டுப்பாதை ஆரம்பிக்கும். எருமேலியில் துள்ளி விட்டுப் பயணத்தைத் தொடரும் பக்தர்கள், பேரூர் தோடு, கோட்டப்படி ஆகிய இடங்களைக் கடந்து, காளை கட்டி என்ற பகுதிக்கு வருவார்கள்.’’ ‘‘அது என்ன காளை கட்டி?’’ ‘‘இந்த காளைகட்டி என்கிற இடம் நம் தர்மசாஸ்தா வெற்றிக் களிப்பை நடனமாடி வெளிப் படுத்திய இடம். மகிஷமுகியை வதைத்ததைக் கொண்டாடிய இடம். 

அவர் அவ்வாறு ஆடிய நாட்டியத்தைத் தந்தை சிவபெருமானே வந்து பார்த்துப் பேரானந்தம் அடைந்தார். அப்போது சிவபெருமான், தான் ஏறி வந்த ரிஷபத்தை அதாவது காளையை, அங்கே ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டு, தாண்டவத்தை ரசித்துப் பார்த்துப் பாராட்டினார். இப்படி அவர் காளையைக் கட்டி வைத்த இடமாதலால் அந்த இடம் காளைகட்டி என்று அழைக்கப்படுகிறது.’’

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.