News
Loading...

தர்ம சாஸ்தாவும், சபரிமலை ஐயப்பனும்!

தர்ம சாஸ்தாவும், சபரிமலை ஐயப்பனும்!

கார்த்திகை மாதம் வந்ததும் கருப்பு, நீல ஆடைகள் அணிந்து மணிமாலைகள் புனைந்து ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷத்துடன்  தலம் வரும் ஐயப்ப பக்தர்களை எங்கும் காண்கிறோம். சபரிமலை ஐயப்பன் கலியுக தெய்வமாகப் போற்றப்படுகிறான். ஆண்டுதோறும் லட்சோப லட்சக்கணக்கான மக்கள் பல வகையான விரதமிருந்து சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை வணங்கி மகிழ்கின்றனர். அன்பர்கள் இவரை தர்மசாஸ்தா என்று அழைக்கின்றனர்.

உண்மையில் தர்மசாஸ்தா என்பவரும் சபரிமலை ஐயப்பனும் வெவ்வேறு தெய்வங்களாவர். தர்மசாஸ்தா எனப்படும் சாத்தனை பழந்தமிழ் இலக்கியங்களும் இலக்கண நூல்களும் சிறப்புடன் குறிக்கின்றன. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இவருடைய அருளாடல் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. தென்னாட்டில் சபரிமலை ஐயப்பன் தோன்றி அருள்பாலிப்பதற்கு முன்பே, சொல்லப் போனால் நிர்ணயிக்கமுடியாத காலத்திற்கு முன்பே தோன்றி நிலை பெற்றிருப்பவர், சாஸ்தா எனப்படும் ஐயனாரப்பன். இவர் ஊர்களையும், நாடு நகரங்களையும் காக்கும் தெய்வமாக இருக்கின்றார். 

இவர் ஆலயம் ஊருக்கு வெளியே அமைந்துள்ளது. ஊருக்குப் புறம்பே அணைந்த கோயிலில் வீற்றிருப்பதால் இவர் புறம்பனையான் என்றழைக்கப்பட்டார். இவரது ஆலயம் புறம்பனையான் கோட்டம் ஆகும். சாத்தன் என்பதற்கு செல்வன் என்பது பொருள். இவர் பல்வேறு சமய நூல்கள் கூறும் 96 வகையான தர்க்க சாஸ்திரங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். அதனால், பழமறைச் சாத்தன் என்று அழைக்கப்படுகிறார். அனைத்து வேதங்களையும் ஆராய்ந்து தேர்ந்து விளக்கும் வல்லமை பெற்றவர். சாஸ்திரங்களில் மிகவும் தேர்ந்தவர் என்பதால்  சாஸ்திர ஞானியாகப் போற்றப்படுகிறார். தமிழில் சாத்தன் என்பதே வடமொழியில் சாஸ்தா என வழங்குகிறது. 

இவர் நூறு யானைகளை வாகனமாகக் கொண்டவர். அதனால்  ஆவாகனன் என்று அழைக்கப்படுகிறார். இவர் தன்னை நோக்கி வழிபட்ட மாலதி என்பவளுக்கு அருள் செய்த வரலாற்றை சிலப்பதிகாரம் சுருக்கமாகக் கூறுகிறது. சோழ நாட்டில் வங்கக்கடலோரம் இருந்த  ஒரு நகரம் பூம்புகார். காவிரி கடலில் புகும் இடத்தில் இருந்ததால் அது புகார் என்றும் பூம்புகார் என்றும் அழைக்கப்பட்டது. அது இந்திரனால் தோற்றுவிக்கப்பட்ட திருநகர். 

அந்நகரில் கயிலாசம் எனப்படும் சிவாலயம், முருகப்பெருமான் ஆறுமுகங்களோடு வீற்றிருக்கும் ஆலயம், அவனது வேற்படைக்கு அமைக்கப்பட்ட வேற்கோட்டம், தேவர் தருவாகிய கற்பக விருட்சத்திற்கான கோயில், தேவேந்திரனின் யானைக்கு அழைக்கப்பட்ட வெள்ளானைக்கோட்டம், அவனுடைய படையான வஜ்ராயுதத்திற்கு அமைக்கப்பட்ட வஜ்ஜிரக்கோட்டம், வெண் நாகர் எனப்படும் பலராமன் கோயில் என எண்ணற்ற கோயில்கள் இருந்தன. அத்துடன் அருகன், புத்தன் முதலான தெய்வங்களின் ஆலயங்களும் இருந்தன. 

ஊருக்கு வெளியே புறம் பணையான் கோட்டம் என்ற பெயரில் மகாசாத்தனுக்கு பெரிய ஆலயம் இருந்தது. அக்கோயிலில் வீற்றிருக்கும் சாத்தன் வரம் தரும் கடவுளாகக் கொண்டாடப்பட்டான். பூம்புகார் நகரில் ஓர் அந்தணன் வசித்து வந்தான். அவனுக்கு இருமனைவியர். அவர்களில் ஒருத்தியின் பெயர் மாலதி என்பதாகும். அவளுக்குப் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. மற்றவளுக்கு அழகான ஆண் குழந்தை இருந்தது. தனக்குப் பிறக்காதபோதும் மாலதி அந்த ஆண் குழந்தை மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தாள். அதனை எடுத்து பாராட்டிச் சீராட்டி மகிழ்ந்திருந்தாள்.

ஒருசமயம் அவள் அக்குழந்தைக்கு பால் கொடுத்தாள். பால் புரையேறி குழந்தை மாண்டு போனது. அதைக்கண்டு அவள் பெருந்துயரம் அடைந்தாள். தவியாய் தவித்தாள். மாற்றாள் மகனை வேண்டுமென்றே கொன்றோம் என்று பழிவந்து சேருமே என்று கலங்கினாள். குழந்தையைத் தோளில் போட்டுக்கொண்டு பூம்புகாரில் இருந்த கோயில்களுக்குச்சென்று குழந்தையை உயிர்ப்பிக்குமாறு வேண்டி அழுது முறையிட்டாள். எங்கும் பலன் கிடைக்கவில்லை. அவள் ஊருக்கு வெளியே வந்து சக்கரவாளக்கோட்டம் என்னும் பௌத்தக் கோயிலில் இருந்த தெய்வங்களை வேண்டி நின்றாள். 

அப்போது அங்கிருந்த ஒரு பெண் ெதய்வம் வெளிப்பட்டு ‘குழந்தை விதியினால் மாண்டது, வருந்தாதே’ என்று அவளுக்குப்  பலவாறாக ஆறுதல்களைக் கூறியது. அவற்றால் மாலதியின் மனம் தெளியவில்லை. மாறாகத் துயரம் மிகுந்தது. நேரம் ஆக ஆக அவளது துயரம் அதிகரித்தது. அவ்வேளையில் அருகில் சுடுகாட்டில் இருந்த  வாகினிப்பேய் அவளையும் அவளது கையில் இருந்த உயிரற்ற குழந்தை உடலையும் பார்த்தது. அது அழகிய பெண்ணாக வடிவு கொண்டு மாலதியின் அருகில் வந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்வதுபோல் மடியில் இருந்த குழந்தையை எடுத்து அவசர அவசரமாகத் தின்றுவிட்டது.

மாலதி, குழந்தையின் உயிரற்ற உடலும் தன்னைவிட்டுப் போனதைக் கண்டு பெருந்துன்பம் அடைந்தாள். அவள் அருகிலிருந்த புறம்பணையான் என்ற சாத்தன் கோயிலுக்குச் சென்று அழுது முறையிட்டாள். அவளது நிலை பார்க்கப் பரிதாபமாக இருந்தது. அவளுக்கு அருள்புரிய சாத்தன் விருப்பம் கொண்டார். அவள் முன்தோன்றி, ‘பெண்ணே, வருந்தாதே. நீ வீட்டிற்குச் செல். வழியில் அழகிய பொழிலிடையே உனது குழந்தையைக் காண்பாய் அதை எடுத்துக்கொண்டு செல்க,’ என்றார்.  

மாலதி மகிழ்ச்சியுடன் வீட்டை நோக்கி நடந்தாள். சாத்தன் அவளது குழந்தையைப்போல் வடிவு கொண்டு அவள் செல்லும் வழியில் கிடந்தான். அக்குழந்தையைக் கண்டதும் மாலதியின் துன்பம் காணாமல் ேபானது. அவள் மனதில் கரைகடந்த மகிழ்ச்சி பொங்கியது. அளவற்ற சந்தோஷத்துடன் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றாள். அதுவரை குழந்தையையும் அவளையும் காணாது தவித்த அந்தணனும் அவன் மனைவியும் பெரிதும் மகிழ்ந்தனர். நாட்கள்  வாரங்களாக, மாதங்களாக, ஆண்டுகளாக உருண்டோடின. அவனுடைய வயதிற்குரிய சடங்குகளைச் செய்து பெற்றோர் மகிழ்ந்தனர். அவன் வளர்ந்து திருமணப் பருவத்தை அடைந்தான்.

பெற்றோர் அவனுக்கு தேவந்தி என்ற பெண்ணைத் திருணம் செய்து வைத்தனர். அவளுடன் சாத்தன் இனிதே  இல்லறம் நடத்தி வந்தான். இதற்கிடையில் அந்தணனும் அவனது மனைவியரும் மாண்டனர். அவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தான், சாத்தன். எட்டாம் ஆண்டு நிறைவுற்று சில நாட்கள் கழிந்தன. ஒருநாள் சாத்தன் தன் மனைவி தேவந்தியை அழைத்தான். தனது தெய்வ வடிவத்தை அவளுக்குக் காட்டினான்.  தான் மாலதிக்காக குழந்தை வடிவம் கொண்டு வந்தது முதல் அனைத்தையும் தெரிவித்தான். 

‘இனி நான் இங்கு இருக்க முடியாது. நான் தெய்வ நிலையில் இருந்து செய்ய வேண்டிய பணிகள் இருக்கின்றன. அதனால் எனது உலகம் செல்கிறேன். நீ மற்றவர்களிடம் நான் யார் என்பதையோ நடந்த விவரங்களையோ சொல்ல வேண்டாம். அவர்களிடம் என் கணவன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு சென்றுள்ளான், வர நெடுநாட்கள் ஆகும் என்பதை மட்டும் சொல்,’ என்று கூறி மறைந்தான்.

தேவந்தி கடவுள் தன்னோடு வாழ்ந்து வந்ததை அறிந்து வியந்தாள். தன் கணவனாக இருந்த சாத்தனுடைய கோயில் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள். இவள் கண்ணகியின் தோழி ஆவாள். கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகியிடம் சோம குண்டம், சூரிய குண்டம் எனப்படும் நீர்நிலைகளில் மூழ்கி இறைவனை வழிபட்டால் உனது கணவன் மீண்டும் வந்தடைவான் என்றாள். ஆனால், கணவனையே கண் கண்ட தெய்வமாகக் கொண்ட கண்ணகி அதை மறுத்துவிட்டாள்.

பிறகு கோவலன், மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் வந்ததும், அவர்கள் மதுரைக்குச் சென்றதும், அங்கு கோவலன் கொலையுண்டதும், கண்ணகி மதுரையை  எரித்துவிட்டு சேரநாடு சென்று அங்கு தெய்வநிலை பெற்றதும் நெடுங்கதையாகும். சேரன் செங்குட்டுவன் இமயத்திற்குச் சென்று கல்லெடுத்து கங்கையில் நீராட்டி கண்ணகி சிலை வடித்து அவளுக்கு சேர நாட்டில் ஆலயம் அமைத்தான். அந்த ஆலய குடமுழுக்கு மங்கல விழாவிற்கு வந்தவர்களில் மாடல மறையவனும் ஒருவனாவான்.  

இவன் கோவலனை நெடுநாளாக அறிந்தவன். கோவலன் மாடலனிடம் பெருமதிப்பு கொண்டிருந்தான். மாடலன் அடிக்கடி தீர்த்த யாத்திரை மேற்கொள்பவன். குமரி முதல் கங்கை வரை பயணிப்பவன். புனித தீர்த்தங்களில் நீராடி உடலும் மனமும் தூய்மை பெறுபவன். அவன் தெய்வச் சாத்தன் அருள் பெற்றவன். சாத்தன் அவனிடம் நேரில் பேசுவார். சாத்தன் ஒருமுறை திருச்செங்கோட்டின் உச்சியில் உள்ள ஒரு சுனையின் தீர்த்தத்தைக் கமண்டலத்தில் முகந்து அவனிடம் அளித்திருந்தார். அந்நீர் மகிமை வாய்ந்தது. அந்த நீரை ஒருவர் மீது தெளித்தால் அவர் தன் முற்பிறவிகளை உணர்வார்.

கண்ணகி கோயிலுக்கு மாடலன் வந்த வேளையில், சாத்தனின் மனைவியான தேவந்தியும் அங்கு வந்தாள். அப்போது தேவந்தி மீது சாத்தன் இறங்கி வந்தார். அவர் மாடல மறையவனை நோக்கி அங்கிருந்த மூன்று சிறுமியர் மீது கமண்டல நீரைத் தெளிக்கும்படிக் கூறினான். அதன்படியே மாடல மறையவன் சிறுமியர் மீது நீரைத் தெளித்தான். அவர்கள் மூவரும் பழம்பிறப்பு நினைவுகளைப் பெற்றனர். அவர்களில் ஒருத்தி தான் முற்பிறப்பில் கண்ணகியின் தாயாக இருந்தவள் என்றும், மற்றவள் கோவலனின் தாயாக இருந்தவள் என்றும் மூன்றாமவள் மதுரையில் அடைக்கலம் கொடுத்த ஆயர் மகளான மாதுரி என்றும் கூறினர். 

மீண்டும் நீர் தெளிக்க பழைய நிலைகளை அடைந்தனர் என்று கதை தொடர்கிறது. இந்த வரலாற்றின் மூலம் சாத்தன் பெரும் ஞானி என்பர். நூறு வாகனங்களைக் கொண்ட சதவாகனன் என்பதையும், வேண்டியபோது மண்மேல் வந்து மக்களுக்காக வாழும் இயல்புடையவன் என்பதையும், அவன் மனிதர்களோடு உறவாடி மகிழ்ச்சியை அருள்பவன் என்பதையும் அறிய முடிகிறது.

சங்ககாலத்தில் தனிச்சிறப்புடன் விளங்கிய சாத்தன் வழிபாடு, பின்னாளில் ஐயனார் வழிபாட்டுடன் கலந்துவிட்டது. ஐயனார் கோயில்கள் சாஸ்தா கோயில்களாகி விட்டன. சில இடங்களில் சாஸ்தா கோயில்கள் ஐயனார் கோயில்களாகி விட்டன. இப்போது சாத்தன் (சாஸ்தா) ஐயனார் கோயில்கள் பிரித்தரிய முடியாதபடி உள்ளன. இந்த இரண்டு வழிபாட்டுடன் மூன்றாவதாக சபரிமலை ஐயப்பன் வழிபாடும் இப்போது பெரும்புகழ் பெற்றுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.