“அப்போலோ பிரதாப் ரெட்டி பேசும்போது, ‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேறி இருக்கிறது; அவர் வழக்கமான உணவுகளை எடுத்துக்கொள்கிறார்; அவர் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். கடந்த 25-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், ‘ஜெயலலிதா நன்றாக உடல்நலம் தேறிவிட்டார். அவர் எழுந்து நடப்பதுதான் அடுத்தநிலை. மேலும், முதலமைச்சர் உணவுகளை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு TRACHEOSTOMY TUBE தேவைப்பட்ட போது மட்டுமே வைக்கப்படுகிறது. அதுபோல, செயற்கை சுவாசமும் அவ்வப்போதுதான் கொடுக்கப்படுகிறது’ என்றார். ரெட்டியின் தகவல்படி பார்த்தாலும், முதலமைச்சர் ஜெயலலிதா, இன்னும் தொண்டையில் குழாய் வைக்கப்படும் TRACHEOSTOMY மற்றும் செயற்கை சுவாசம் வைக்கும் நிலையில்தான் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.”
‘‘ஆமாம்!”
‘‘இயல்பான உணவுகளை முதலமைச்சர் எடுத்துக் கொள்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அதை என்ன முறையில் எடுத்துக் கொள்கிறார் என்பதில்தான் விஷயம் இருக்கிறது. தொண்டையில் ‘TRACHEOSTOMY TUBE’ இன்னும் இருக்கிறது. அதனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மூக்கின் வழியாக செல்லும் மற்றொரு ட்யூப் மூலம், உணவுகள் செலுத்தப் படுகின்றன. அவர் பேசும் சத்தம் வெறும் முனகல் சத்தமாக மட்டும்தான் கேட்கிறது. அதைத் தெளிவாகக் கேட்பதற்காகத்தான், ‘மைக்’ வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருப்பவரைத்தான் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குச் செல்லலாம் என்று ரெட்டி சொல்கிறார்.”
‘‘இந்த நிலையில் இருப்பவரை எப்படி வீட்டுக்கு அனுப்ப முடியும்?”
‘‘முதலமைச்சர் ஜெயலலிதா இப்போது இருக்கும் நிலையில் அப்படியே வீட்டில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்கலாம். அதற்கான ‘செட்டப்’களை அப்போலோ சார்பில் ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களே பார்த்துக் கொள்வதாகவும் சொல்கின்றனராம். ஆனால், மருத்துவ வட்டாரங்கள் வேறோரு டோனில் சொல்கின்றன.”
‘‘என்ன சொல்கின்றன?”
‘‘சமீபத்தில் அமெரிக்காவில் பணிபுரியும் டாக்டர் ஒருவர், ஒரு நிகழ்ச்சியில் சில பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார். அவர் சில முக்கியமான தகவல்களை அந்தப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த விவரங்களில் ஜெயலலிதாவின் உடல்நிலையை துல்லியமாக அறியமுடிகிறது. விஷயம் என்னவென்றால், ‘அமெரிக்கா போன்ற நாடுகளில், ஒரு நோயாளிக்கு உச்சபட்சமாக 10 நாட்கள் மட்டும்தான் செயற்கை சுவாசம் கொடுப்பார்கள். அதற்கு மேல் ஒரு நோயாளிக்கு செயற்கை சுவாசம் அளிப்பது என்றால், அது மிக மிக ஆபத்தான நிலை. அப்படிக் கொடுப்பதால், சிகிச்சை பெறுபவரின் உடல்நிலையில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இருக்காது. மேலும், முதலமைச்சர் ஜெயலலிதாவைப்போல் இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக ஒருவருக்கு செயற்கை சுவாசம் அளித்தால், அந்த நபர் மீண்டும் செயற்கை சுவாசம் இல்லாமல் சுவாசிப்பது என்பதே சாத்தியம் இல்லாத காரியம். 99 சதவிகிதம் அதற்கு வாய்ப்பே இல்லை’ என்று சொன்னாராம்!”
‘‘ம்ம்ம்... அதிர்ச்சியான தகவலாக இருக்கிறதே?”
‘‘அதேபோல, நோய்த் தொற்று பிரச்னை என்பது பொது இடங்களில் ஒருவருக்கு ஏற்படுவதைவிட, மருத்துவமனைச் சூழலில்தான் அதிகம் ஏற்படும். அதைவிட அதிகமாக, சி.சி.யூ மற்றும் ஐ.சி.யூ-வில் இருப்பவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அது சிகிச்சை பெறுபவரை மிகப்பெரிய அபாயத்தில் சிக்கவைத்துவிடும். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதயப் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளோடு 2 மாதங்களுக்கும் மேலாக செயற்கை சுவாசத்தில் ஒருவர் வைக்கப்பட்டு இருந்தால், அவர்கள் முழுமையாகக் குணமடைந்து வரக் காலதாமதம் ஆகும். அவ்வளவு காலம் மருத்துவமனையில் இருந்தால் தங்களுக்கு சிரமம் ஏற்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் நினைக்கிறதாம். இதில் சசிகலா தரப்புக்கு உடன்பாடு இல்லையாம்!”
‘‘சசிகலா, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்து ஏதோ சிறப்பு வழிபாடுகள் மேற்கொண்டதாகச் சொல்லப்பட்டதே?”
‘‘நவம்பர் 23-ம் தேதி அப்படி ஒரு விஷயம் கசிந்தது. உடனே பார்த்தசாரதி கோயில் வட்டாரத்தில் விசாரித்தேன். ‘ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்களில் ஒருவரும், பூஜை புனஸ்காரங்களில் ஜெயலலிதா-சசிகலாவுக்காக தமிழகம் முழுவதும் சுற்றி தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்பவருமான தேவாதி என்பவர் பார்த்தசாரதி கோயிலுக்கு வந்திருந்தார். ஆனால், சசிகலா வரவில்லை. தேவாதி வந்து இருந்ததால், பார்த்தசாரதி கோயில் துணை ஆணையர் வான்மதி, அந்தக் கோயிலில் பணிபுரியும் சில ஊழியர்கள் அன்று இரவு கோயிலில் இருந்தனர். ஆனால், சிறப்பு யாகங்கள், பூஜைகள் என்று எதுவும் நடைபெறவில்லை. கோயில் நடை சாத்தியபிறகு, பார்த்தசாரதி கோயிலுக்குள் அப்படிப்பட்ட பூஜைகளை யாரும் நடத்தவும் முடியாது. இரவு 9 மணிக்குமேல், வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும்தான் கோயில் திறந்திருக்கும். உள்ளே பக்தர்கள் உள்ளிட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நாட்களில் அப்படி யாரும் போகமுடியாது. கோயில் பட்டரே நினைத்தாலும் போக முடியாது. குறிப்பாக யாகங்களை நடத்தவே முடியாது. அப்படி நடத்தினால், அது யாருக்காக நடத்தப்பட்டதோ அவருக்கே கேடாக முடியும் என்பது தேவாதிக்கும் தெரியும்; சசிகலா-ஜெயலலிதாவுக்கும் தெரியும்’ என்று சொன்னார்கள்!”
‘‘பிறகு ஏன் இந்த இரவு நேர விசிட்?”
‘‘கோயிலில் சீரமைப்பு வேலைகள் கொஞ்சம் நடக்கின்றன. ஏற்கெனவே பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் அகற்றப்படுகின்றன. அதுபோல், கோபுரத்தை மறைத்துப் போடப்பட்டு இருந்த தகர ஷெட்கள் அகற்றப்படுகின்றன. அதன்பிறகு, ஜெயலலிதா, சசிகலா சார்பில் கோயிலுக்கு ஏதேனும் நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படலாம் என்று தெரிகிறது. அதுபோல, வேறு சிறப்பு பூஜைகள் விரைவில் நடத்தப்படலாம் என்றும் யூகிக்கப்படுகிறது. அதற்கான யோசனைகள், மேற்பார்வைக்காக இந்த விசிட் என்று சொல்லப்படுகிறது.”
முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்