News
Loading...

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதிய ரூ2000 நோட்டுகள் 1.40 கோடி பறிமுதல்

கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் புதிய ரூ2000 நோட்டுகள் 1.40 கோடி பறிமுதல்

* சிக்கியது அமைச்சர் பணமா?
* 18 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை

கோவை: கோவை தனியார் கல்லூரியில், புதிய ரூ.2000 நோட்டுகளுடன் ரூ.1.40 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. பண பரிமாற்றத்துக்காக கொண்டு வரப்பட்டதா என்று 18 பேரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் புதிய பணத்தை கொடுத்து 30% கமிஷன் அடிப்படையில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டு மாற்றி தருவதாக மர்மநபர் ஒருவர் அடிக்கடி போனில் பேசுகிறார் என்று கல்லூரி சார்பில் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் 3 நாட்களுக்கு முன் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில், கல்லூரியை குனியமுத்தூர் போலீசார் கண்காணித்து வந்தனர். 

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென 3 கார்கள், கல்லூரி வளாகத்துக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் லட்சுமி ஆகியோர் தலைமையில் 12 வாகனங்களில் போலீசார் விரைந்து சென்று கல்லூரி வளாகத்தை சுற்றிவளைத்தனர்.  அப்போது, 3 கார்களில் 2 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். பின்னர், காரை சோதனை செய்தனர். அதில், புதிய 2000, 100 ரூபாய் நோட்டு கட்டுகட்டாக ரூ.1.40 கோடிக்கு இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். 

இந்த பணத்தை ஒரு காரில் இருந்த மணிகண்டன், மற்ற 2 கார்களில் இருந்த தமிழ்செல்வன், லோகநாதன் ஆகியோர் எங்களுக்கு சொந்தமானது என்றும், 30 சதவீத கமிஷன் அடிப்படையில் பழைய நோட்டை மாற்றி விட்டு புதுநோட்டு கொடுக்க வந்ததாகவும் தெரிவித்தனர். இதன்பின், பணத்துடன் 3 பேரையும் வருமான வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். அவர்களிடம் புதிய ரூபாய் நோட்டு எப்படி வந்தது என விசாரித்து வருகின்றனர். இதுதவிர, காரில் இருந்த மற்ற 3 பேரும் அவர்களுக்கு உதவியாக வந்தவர்களையும் போலீசார் விசாரித்தனர். இதற்கிடையே, மணிகண்டன், தமிழ்செல்வன், லோகநாதன் ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் புரோக்கர்கள் அருண்ராம், சண்முகசுந்தரம், சந்திரசேகர் உள்பட 15 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 

சிக்கியது அமைச்சர் பணமா?: அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் அண்ணன் அன்பரசு, நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து ஒரு புகார் கொடுத்தார். அதில், ``பண பரிமாற்றத்தில் அமைச்சர் பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே கல்லூரி வளாகத்தில் புதிய பணத்தை கொடுத்து கமிஷன் அடிப்படையில் பழைய பணத்தை பெற்றுச் செல்வதாக சிலர் வதந்தி கிளப்பி உள்ளனர்’’ என்று கூறியிருந்தார். இதுதொடர்பாகவும் போலீசார் விசாரிக்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...