News
Loading...

'பி நோட்ஸ்' (Participatory Notes) ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா?

பி நோட்ஸ் (Participatory Notes) ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா?

‘திடகாத்திரமான முடிவை பிரதமர் மோடி  எடுத்துள்ளார். கறுப்புப் பணத்தை ஒழிக்க இதுவே சிறந்த வழி’ என்று அரசியல் விமர்சகர்களில் ஒரு சாராரும், சினிமா பிரபலங்கள் சிலரும் புகழாரம் சூட்டிவந்தாலும், இந்த நடவடிக்கையால் கறுப்புப் பணத்தை முற்றிலுமா ஒழிக்க முடியாது என்று இன்னொரு சாரார் வாதங்களை முன்வைக்கிறார்கள். கறுப்புப் பணத்தை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்றால், என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் பட்டியல் இடுகின்றனர். 

சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் ஜோதி சிவஞானத்திடம் பேசினோம். “இது திடீரென்று எடுத்த முடிவு எனச் சொல்கிறார்கள். ஆனால், அது சாத்தியமில்லை. இதற்கான திட்டங்கள் முன்கூட்டியே  உருவாக்கப்பட்டுத் தயாராக வைக்கப்பட்டு இருந்திருக்கும். இப்படியான அறிவிப்பின் மூலம் பணத்தை தங்கள் வீடுகளில் பதுக்கிவைத்திருக்கும் அரசியல்வாதிகள், கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் போன்றவர்கள் மட்டுமே பாதிப்படைவார்கள். திட்டமிட்டு வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கிவைத்துள்ளவர்கள், சொத்துகளாக கறுப்புப் பணத்தைப் வைத்துள்ள பெரிய புள்ளிகள், ஆடிட்டர்களை வைத்து பேலன்ஸ் ஷீட் தயாரித்து வைத்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவர்களை இந்த அறிவிப்பு எந்த விதத்திலும் பாதிக்காது. இதனால் ஏழை, நடுத்தர, சிறு குறு வியாபாரிகள்தான் அதிக அளவில் பாதிப்படைவார்கள். சில்லறைகளுக்கும், நோட்டுகளை மாற்றுவதற்கும் அவர்கள் அதிகம் அல்லல்பட வேண்டியிருக்கும்.

நம்மிடம் இருக்கும் மொத்தப் பணத்தில் 14 சதவிகிதம் மட்டும்தான் வெளியில் புழங்குகிறது. மற்றவை எல்லாம் சொத்துகளாக, பத்திரங்களாக, முதலீடுகளாக இருக்கின்றன. இவற்றில் இருக்கும் கறுப்புப் பணத்தைதான் ஒழிக்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், இது மிகவும் குறைவான சதவிகிதம்தான். தற்போது புழக்கத்தில் இருக்கும் நோட்டுகளில் 86 சதவித நோட்டுகள் 500, 1000 ரூபாய் நோட்டுகள்தான். இவற்றை தற்போது செல்லாது என அறிவித்து இருப்பதன் மூலம் மக்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகுந்த அறிவார்ந்த நடவடிக்கையாகப் பட்டாலும் உண்மையில் இதனால் பலன் இல்லை.

இந்த நடவடிக்கையால், கறுப்புப் பணத்தைக் கையில் வைத்துள்ளவர்களும் அதை வெளிநாட்டு டாலர்களாக மாற்ற நினைப்பார்கள். அதனால், டாலரின் மதிப்பு உயர்ந்து, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும். பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உண்மையில் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களை முறையாகக் கண்காணிக்க வேண்டும். இந்த இரண்டையும் யார் செய்வது ? 

மக்களிடம் வெற்று நாடகத்தை நிகழ்த்தி வருகிறார்கள். கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால், அது உருவாகும் இடத்தை அழிக்க வேண்டும். அதற்கான விஷயங்களை நெறிப்படுத்தினாலே புதிதாகக் கறுப்புப் பணம் உருவாவதைத் தடுக்க முடியும். அதற்கடுத்து, யார் யார் வெளிநாட்டு வங்கிகளில் பணம் பதுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்திய அரசால் எளிதாகக் கண்டறிய முடியும். பல வங்கிகள், அந்தத் தகவல்களை அளிக்கத் தயாராக இருக்கிறார்கள். அதைவைத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே கறுப்புப் பணத்தை முற்றிலுமாக ஒழித்து விடமுடியும். 

இப்போதைய மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் நேரடி வரியை குறைத்து வசூலிக்கிறார்கள். நடுத்தர மக்களிடம் அதனைச் சரிகட்ட மறைமுக வரியை அதிகப்படுத்தி வசூலிக்கிறார்கள். அதனால் அவர்கள் சாதாரண மக்களிடத்தில்தான் தங்களது அதிகாரத்தை ஏற்றிப் பார்ப்பார்கள்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினாரிடம் பேசினோம். “நாட்டின் பொருளாதாரத்துக்கு நிகராக கறுப்புப் பணம் வளர்ந்து நிற்கிறது. தற்போது, அரை மனதோடு அரசு எடுத்துள்ள இந்த முடிவு, சிறிய அளவில்தான் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும். பணத்தைக் கையில் வைத்துள்ள சிறிய தொழிலதிபர்கள், கிராமப்புற பணக்காரர்கள், அரசியல்வாதிகள் மீதுதான் நடவடிக்கை பாயும். பெருமுதலாளிகளிடம் இருக்கும் பணத்தை இது அசைத்துக் கூடப்பார்க்காது. இதனால், மக்கள் பெரிய அளவில் சிரமப்படுவார்கள். 

முதலில், கறுப்புப் பணம் உருவாகும் தளங்களைக் கண்காணித்தாலே கணிசமான அளவில் தடுக்க முடியும். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஹவாலா முறையில் கொண்டு செல்லப்படும் பணம் அங்கிருந்து மீண்டும் இந்திய பொதுத் துறை நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகளாகப் பதுக்கப்படுகிறது. எனவே, இது அரசின் இரட்டை நிலையைக் காட்டுகிறது. அதோடு, இவர்களுக்கு மறைமுகமாக ஒரு லாபம் இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க் கட்சிகளில் இருக்கும் கறுப்புப் பணமுதலைகளை கட்டுப்படுத்த பி.ஜே.பி அரசுக்கு இந்த நடவடிக்கை கைகொடுக்கும். வரப்போகும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முலாயம் சிங், மாயாவதி ஆகியோர் பணத்தை வைத்துத் தங்களைத் தோற்கடிக்க முடியாது என்கிற வகையில் அவர்களை சிக்கவைத்துவிட்டார்கள். 

மத்திய அரசின் நடவடிக்கையை வணிகர் சங்கங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. காரணம், அவர்கள் நேரடிப்பண வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்கள். இவர்கள் சொல்வதுபோல, கார்டுகள் மூலம் பணவர்த்தனை செய்யும் அளவுக்கு இந்தியா நவீனமயம் ஆகிவிடவில்லை. இன்னமும் வங்கிகள் இல்லாமலும், அவற்றை உபயோகிக்கும் கல்வியறிவு இல்லாத மக்களும் இருக்கக்கூடிய ஒரு தேசத்தில், எதற்காக இந்த திடீர் முடிவு?  பணத்தைப் பதுக்கிய பெருமுதலாளிகள் எல்லாம் பத்திரமாக இருந்து அரசுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் வரிகள் கட்டும் மக்கள், வேறு வழி இல்லாமல் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார்.

தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆனந்த், “மோடி பிரதமராக வந்தவுடன், கறுப்புப் பணத்தைப் பிடிப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வந்தார். அதனால் எந்தப் பயனும் இல்லை. பிறகு, தாங்களாகவே முன்வந்து வருமானக் கணக்கைத் தாக்கல் செய்யும் திட்டத்தை அறிவித்தார்கள்.  அதுவும் பலன் அளிக்கவில்லை. இப்போது, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள். இதன் மூலமாக, கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது.

பி நோட்ஸ் (Participatory Notes) ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா?

கறுப்புப் பணத்தை எல்லோருமே ரொக்கமாக வைத்துக்கொண்டிருப்பது இல்லை. தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் என கறுப்புப் பணத்தை உருமாற்றிவைத்திருக்கிறார்கள். கறுப்புப் பணம் இந்தியாவில் இருந்து மொரீஷியஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகள் வழியாகப் போய், இங்கு வெள்ளையாக வருகிறது. எனவே, 500, 1000 ரூபாய்கள் செல்லாது என்று அறிவிப்பதன் மூலம் கறுப்புப் பணத்தை ஒழித்துவிடலாம் என்பது வெறும் மூடநம்பிக்கைதான். 

உண்மையிலேயே கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்றால், முதலில் ‘பி நோட்ஸ்’ (Participatory Notes) ஒழிக்கப்பட வேண்டும். வெளிநாட்டுவாழ் இந்தியர் ஒருவர், ஏதோ ஒரு ரூட் மூலமாக இந்தியாவில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றிருப்பார். அவர் இந்திய பங்குச்சந்தையில் அந்தப் பணத்தை முதலீடு செய்வார். ஆனால், அவருடைய பெயரை வெளியிட வேண்டும் என்று அவசியம் கிடையாது. இதுதான் ‘பி நோட்ஸ்’ என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க இந்த முறையில்தான், பயங்கரவாத நடவடிக்கைகள்  செயல்பாட்டில் உள்ளன. அதைக் கண்டுபிடிப்பதற்கு, தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல், சாமான்ய மக்களிடம் உள்ள 500, 1000 ரூபாய்கள் செல்லாது என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கைதான். சாதாரண மக்களிடம் புழங்கும் பணம்தான் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 100 கோடிப் பேர் ஒரு நாளைக்கு 100 ரூபாய் செலவு செய்கிறார்கள் என்றால், 10 ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்துக்கு வருகிறது. ஆனால், பெரும் பணக்காரர்கள் இந்தளவுக்குப் பணம் செலவுசெய்வதில்லை. அவர்கள் பணத்தை ஏதோ ஒரு இடத்தில் பதுக்குகிறார்கள். அந்தப் பணத்தைப் பிடிப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பி நோட்ஸ் (Participatory Notes) ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா?

ரியல் எஸ்டேட்டில் நிறைய கறுப்புப் பணம் புழங்குகிறது. குறிப்பாக, பழைய மகாபலிபுரம் சாலையில் இரண்டு லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில், 50 ஆயிரம் வீடுகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. ஒன்றரை லட்சம் வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. ஆனால், அதைப் பற்றி முதலீடு செய்தவர்கள்  கவலையே படாமல் உள்ளனர். ஏனென்றால், அவை எல்லாமே கறுப்புப் பணம். இதுபோன்ற விஷயங்களை அரசு கண்டுகொள்வதே இல்லை.

நம் நாட்டில் இருந்து வெளியே போகும் பணத்தைக் கண்காணிப்பது, பி நோட்ஸை முற்றிலுமாக ஒழிப்பது ஆகிய நடவடிக்கையின் மூலம்தான் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியும்.இதை, பல ஆண்டுகளாக இடதுசாரிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், இதை  ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவே இல்லை. குறிப்பாக பிரதமர் மோடி, பி நோட்ஸை ஒழிப்பது பற்றி ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை.  கறுப்புப் பணத்தை உண்மையிலேயே ஒழிக்க வேண்டும் என்ற உணர்வும், அக்கறையும் ஆட்சியாளர்களிடம் இருக்கிறது என்றால் அவர்கள் செய்ய வேண்டியது, பி நோட் ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளைத்தான்” என்றார்.

பி நோட்ஸ் ஒழிப்புக்கான சாட்டையை பிரதமர் மோடி கையில் எடுப்பாரா?

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.