News
Loading...

தாலிக்குத் தங்கம்... அடிச்சாங்க லஞ்சம்? - RTI அம்பலம்


தாலிக்குத் தங்கம் கொடுக்கும் அரசின் திட்டத்தில் தாறுமாறு தக்காளிச்சோறு என விவகாரம் வெடிக்க ஆரம்பித்துள்ளது. சந்தை விலையைவிட 111 கோடி ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து  தங்க நாணயங்கள் கொள்முதல் செய்திருக்கிறார்கள். இன்னொரு விதமாகச் சொன்னால், ஏகத்துக்கும் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் தாலிக்குத் தங்கம் திட்டம் தொடங்கப்பட்டது. சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளோமா பெற்ற பெண்களின் திருமணத்துக்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும். 2011 - 2016 ஆட்சிக்காலத்தில், இந்தத் துறையின் அமைச்சராக வளர்மதி இருந்தார். 

ஒரு திட்டம் போட்டால், கட்டம் கட்டி கமிஷன் அடிக்காமல் இருக்கமாட்டார்கள் நம்ம ஆட்கள். இதை மனதில்கொண்டே, தாலிக்குத் தங்கம் திட்டம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ‘ஜூனியர் விகடன்’ சார்பில் சமூக நலத்துறைக்குக் கேள்விகளை அனுப்பி பதில்களைப் பெற்றுள்ளோம்.

தங்கக் காசுகள் கொள்முதல் செய்வதற்காக அரசு விதித்த நிபந்தனையில், ‘டெண்டர் இறுதி செய்யப்படும் நாளில், நிலவும் தங்கத்தின் சர்வதேச விலை என்னவோ அதுதான் கொள்முதல் விலையாக இருக்கும்’ என்று சொல்லப் பட்டுள்ளது.

அதன்படி கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 18 முதல் 2015-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி வரை டெண்டர்கள் மூலம் 13 முறை தங்க நாணயங்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுவரை 7,13,641 தங்க நாணயங்களை அரசு கொள்முதல் செய்துள்ளது. 

2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி தலா 4 கிராம் எடை கொண்ட 60 ஆயிரம் தங்கக் காசுகள் இந்தியன் வங்கியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. அப்போதைய சர்வதேச விலை 4 கிராமுக்கு ரூ.9,833-தான். இவர்கள் கொடுத்ததோ 10,339 ரூபாய்.

2012-ம் ஆண்டு ஜனவரி 2-ம் தேதி அதே இந்தியன் வங்கியில், 30 ஆயிரம் தங்க நாணயங்கள் வாங்கப்பட்டுள்ளன. 4 கிராம் தங்க நாணயம் ரூ.11,097 என்ற விலையில் வாங்கியிருக்கிறார்கள். அன்றைய நாளில் 4 கிராம் தங்க நாணயத்தின் சர்வதேச விலை 8,624 ரூபாய் மட்டும்தான். 

2012-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி 60 ஆயிரம் தங்க நாணயங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் (எஸ்.பி.ஐ.), தலா ரூ.11,642.79-க்கு வாங்கப்பட்டுள்ளன. ஆனால், இதன் சந்தை விலை ரூ.10,610.16 மட்டும்தான். இப்படி தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 7 முறை (வரைபடத்தைக் கவனிக்கவும்) தங்க நாணயங்கள் கொள்முதல் செய்தவர்கள், திடீரென தனியாரிடம் இருந்தும் கொள்முதல் செய்துள்ளார்கள்.

2013-ம் நவம்பர் 27-ம் தேதி சென்னையைச் சேர்ந்த மோகன்லால் ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ஒரு லட்சம் தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப் பட்டிருக்கிறது. 4 கிராம் தங்க நாணயம் 10,462 ரூபாய்க்குக் கொள்முதல் செய்திருக்கிறார்கள். ஆனால், அன்றைய சர்வதேச தங்கத்தின் விலை ரூ.9,159 மட்டும்தான். 13 கோடியே 3 லட்சம் கூடுதலாகக் கொடுத்து கொள்முதல் செய்திருக்கிறார்கள்.

2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி ஒரு லட்சம் தங்க நாணயங்கள் டெல்லியைச் சேர்ந்த டி.சி.ஜே இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து வாங்கி உள்ளனர். 4 கிராமுக்கு ரூ.11,532.22 என்ற விலையில் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், அன்றைய சர்வதேச விலை ரூ.9,227.22 மட்டும்தான்.

சென்னையைச் சேர்ந்த என்.ஏ.சி ஜுவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து 2015-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி 42 ஆயிரம் தங்க நாணயங்களை தலா ரூ.9,880 என்ற விலையில் வாங்கியிருக்கின்றனர். ஆனால், அன்றைய சந்தை நிலவரம் 8,535 மட்டும்தான்.

தாலிக்குத் தங்கம்... பங்கம்!

தாலிக்குத் தங்கம்... அடிச்சாங்க லஞ்சம்? - RTI அம்பலம்

தாலிக்குத் தங்கம்... அடிச்சாங்க லஞ்சம்? - RTI அம்பலம்

ஆகஸ்டு 2011 முதல் டிசம்பர் 2015-ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக கூடுதலாக கொடுக்கப்பட்ட தொகை 111.43 கோடி ரூபாய்

தாலிக்குத் தங்கம்... அடிச்சாங்க லஞ்சம்? - RTI அம்பலம்

ம‌லபார் கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து ஒரு லட்சம் தங்க நாணயங்களை 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி தலா ரூ.10,355 என்ற விலையில் வாங்கியிருக்கிறார்கள். அன்றைய சந்தை மதிப்பு 9,031.19 மட்டும்தான். சந்தை விலையைவிட ரூ1,323.81 கூடுதலாகக் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சென்னை நிறுவனத்தில் இருந்து 61,641 தங்க நாணயங்களை 2015-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி வாங்கியிருக்கிறார்கள். ரூ.9,860-க்கு வாங்கியிருக்கின்றனர். ஆனால், அன்றைய சந்தை விலை ரூ.8,365 மட்டும்தான். 

மொத்தமாக 13 முறை கொள்முதல் செய்யப்பட்டதில் சந்தை விலையைவிட ரூ.111.43 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கொள்முதல் செய்திருக்கின்றனர்.

தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்பட்ட முதல் முறை மட்டுமே சந்தை விலையைவிட 506 ரூபாய்க்கு அதிகமாகக் கொள்முதல் செய்திருக்கின்றனர். ஆனால், அடுத்த 12 முறைகளும் சந்தை விலையைவிட கணிசமான அளவு அதிக விலைக்குக் கொள்முதல் செய்திருக்கிறார்கள். வெளிப் படையான டெண்டர் முறை என்றால் யார் குறைந்த விலையைக் குறிப்பிடுகிறார்களோ அவர்களிடம்தான் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், இந்தத் திட்டத்தில் சந்தை விலையைவிட அதிகமாகவே கொள்முதல் செய்யப்பட்டது அரசு தரப்பில் கொடுக்கப்பட்ட ஆர்.டி.ஐ தகவல்கள் மூலம் உறுதியாகத் தெரியவருகிறது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, “எந்த நலத்திட்டமாக இருந்தாலும் ஆளும் கட்சியினர் எவ்வளவு கமிஷன் கிடைக்கும், எவ்வளவு கொள்ளை அடிக்கலாம் என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள். தாலிக்குத் தங்கம் வாங்குவதில் சந்தை விலையைவிட அதிகமாக இந்த அரசு கொள்முதல் செய்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மின்சார வாரியம் கடனாளி ஆனதற்கு கூடுதல் விலைகொடுத்து மின் கொள்முதல் செய்யப்பட்டதுதான் காரணம். தாலிக்குத் தங்கம் திட்டத்திலும் கொள்ளை அடித்திருக்கிறார்கள்” என்றார்.

சமூக நலத்துறை அதிகாரிகளோ, ‘‘டெண்டர் ஓப்பன் பண்ணும் தேதியில் லண்டன் எக்சேஞ்சில் சர்வதேச விலை என்ன நிலவரமோ அதன்படிதான் அடிப்படை விலையை நிர்ணயிக்கிறோம். ஒரு கட்டத்தில் தங்க நாணயங்கள் பற்றாக்குறை நிலவியது. இதனால்தான் வங்கிகளில் இருந்து கொள்முதல் செய்யவில்லை. டெண்டர் முறையில் கொள்முதல் செய்யும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. பேக்கேஜிங், டிரான்ஸ்போர்ட் செலவுகளும் டெண்டர் விலையில் அடக்கம். வெளிப்படையான டெண்டர் முறையில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை” என்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...