News
Loading...

ரூ.50 கோடியில் தெலங்கானா முதல்வரின் அதிநவீன சொகுசு பங்களா..டாய்லெட்டில் கூட புல்லட் புரூஃப்..!


தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஹைதராபாத்தில் உள்ள பேகம்பட்டில் ரூ.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சொகுசு பங்களாவிற்கு இன்று காலை கிரகப்பிரவேசம் செய்தார். இதில் அம்மாநில ஆளுநர் இ.எஸ்.எல் நரசிம்மன் கலந்துகொண்டார். தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டியுள்ள சொகுசு பங்களாவிற்கு இன்று காலை 5.30 மணி அளவில் கிரகப்பிரவேசம் நடைபெற்றது. 5 ஏக்கர் பரப்பில் ரூ.50 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட இந்த வீட்டில் சந்திரசேகர் ராவ் நாளை குடியேற இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் முதல்வர் குடியேற இருப்பதால் மிகவும் பாதுகாப்பான முறையில் சுற்றுச் சுவர்கள் வீட்டை சுற்றி எழுப்பப்பட்டுள்ளது.

அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் பல லட்சம் மதிப்புடைய விலை உயர்ந்த கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. சொகுசான படுக்கையறைகள், குளியலறை ஜன்னல்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் அனைத்தும் புல்லட் புரூஃப் கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் பாதுகாப்பிற்காக வீட்டை சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தெலங்கானா மாநில சட்டமன்றத்தின் புதிய கட்டடத்துக்கான அறிவிப்பின் போது அரசு கருவூலத்திலிருக்கும் பணத்தை அம்மாநில முதல்வர் எவ்வித திட்டமிடுதலும் இன்றி விரயம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் ” பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து பதவிக்கு வந்த சந்திசேகர ராவ், எதையும் நிறைவேற்றவில்லை.மக்களின் கோரிக்கைகளை பற்றி கவலைப்படாமல் ரூ.50 கோடி மதிப்பில் சொகுசு பங்களா கட்டியிருப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...