News
Loading...

உலகின் அதிஉயர மரம்!

உலகின் அதிஉயர மரம்!

உயரமாக வளருவதுதான் மரத்தின் இயல்பு என்றாலும் அதிக உயரம் என்ற நெம்பர் 1 கிரீடம் சில மரங்களுக்குத்தானே கிடைக்கிறது! அண்மையில் அந்த இடத்தைப் பெற்ற மரத்தைப் பற்றியதுதான் இக்கட்டுரை.  

உலகின் உயரமான வெப்ப மண்டல  மரம்  மலேசியா அருகிலுள்ள போர்னியோ தீவில் இருப்பது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப் பட்டுள்ளது.  94.1 மீட்டர் அசகாய உயரத்திலுள்ள இம்மரம், மரங்கள் சூழ்ந்த கூட்டத்தில் இருந்தது. 

இதற்கு முன்பு மலேசியாவில் அதிக உயரமான மரம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்த மஞ்சள் மெரந்தி மரத்தின் உயரம் 90 மீட்டராகும். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கார்னகி மையத்தைச் சேர்ந்தஆராய்ச்சியாளர் கிரிகோரி ஆஸ்னெர், 20 ஆண்டுகள் தம் குழுவினரோடு செய்த நெடிய ஆராய்ச்சியில், 7 லட்சத்து 43 ஆயிரத்து 330 கி.மீ பரப்பளவு கொண்ட போர்னியோ தீவிலுள்ள சோரியா பேரினத்தைச் சேர்ந்த இம்மரத்தை கண்டுபிடித்துள்ளார். இந்த மரத்தைச் சுற்றியுள்ள மரங்களும் 90 மீட்டர் உயரம் கொண்டவை என்பது வியப்புக்குரிய ஒன்று.

கார்னகி வான்வெளி ஆய்வகத்தின் உதவியுடன் இந்த தீவின் காடுகளை ஆராய்ந்த ஆஸ்னெர், மரம், விலங்கு உள்ளிட்ட உயிர் பன்மைத்தன்மைகளை லிடார் (லேசர் ஒளி மூலம் பொருளை அளவிடும் முறை) தொழில்நுட்பத்தின் மூலம் மரத்தின் உயரத்தை அளவிட்டு கண்டறிந்தார். 
 
ஹெலிகாப்டரில் பொருத்தியுள்ள லேசர் ஒளி கருவியினால், வனத்தை 1 நொடிக்கு 50 ஆயிரம் ஷாட்டுகள் எடுத்து இம்மரத்தின் உயரத்தை துல்லியமாகக் கண்டுபிடித்தோம் என பரவசமாக பேசுகிறார் ஆஸ்னெர். இவரின் ஆராய்ச்சி மூலம், இங்கிருந்த 130 தாவர இனங்கள் அழிந்து போயிருப்பது தற்போதுதான் உலகிற்கே தெரிய வந்துள்ளது.  

வெப்பமண்டலக் காடுகளில் இது உயரமான மரம் என்றாலும் கலிஃபோர்னியா தேசியப் பூங்காவிலுள்ள செம்மரமே அதி உயர மரமாக-115.5 மீட்டர் உயரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. உயரமான மரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் மரங்களைப் பாதுகாக்கும் அவசியத்தை உலகினரும், இத்தீவு மக்களும் ஆழமாக உணர்ந்திருப்பார்கள் என நம்பிக்கை பெருக பேசுகிறார் ஆராய்ச்சியாளர் கிரிகோரி ஆஸ்னெர். பசுமை முயற்சி வெல்லட்டும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்